search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car Collide Auto"

    கோவையில் நடந்த விபத்தின் போது சற்று தூரத்தில் நின்று மனைவியுடன் செல்போனில் பேசியதால் தான் உயிர் தப்பியதாக ஆட்டோ டிரைவர் கூறியுள்ளார்.
    கோவை:

    கோவை சுந்தராபுரத்தில் இன்று காலை சொகுசு கார் பயணிகள் கூட்டத்தில் மோதி 8 பேர் பலியானார்கள். கார் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ மீதும் மோதியது. இதில் ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது.

    இந்த ஆட்டோவின் உரிமையாளர் சுந்தராபுரத்தை சேர்ந்த சிலம்பரசன் ஆவார். இவர் விபத்தை நேரில் பார்த்தவர். இது குறித்து அவர் கூறியதாவது-

    விபத்து நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான் நான் எனது ஆட்டோவில் நண்பருடன் பேசிக் கொண்டு இருந்தேன். அந்த சமயத்தில் எனது மனைவி செல்போனில் அழைத்தார்.

    இதனால் நான் ஆட்டோவில் இருந்து வெளியே வந்து சற்று தூரத்தில் நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தேன். எனது நண்பர் ஆட்டோவில் உட்கார்ந்து இருந்தார்.

    அந்த சமயத்தில் தான் சொகுசு கார் பயணிகள் கூட்டத்தில் மோதி விட்டு எனது ஆட்டோவிலும் மோதியது. சத்தம் கேட்டு நான் அங்கு விரைந்து சென்றேன். அதிர்ஷ்டவசமாக எனது நண்பர் காயம் இன்றி தப்பினார்.



    நான் எனது மனைவியுடன் செல்போனில் பேசியதால் உயிர் தப்பினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பயணிகள் மற்றும் ஆட்டோ மீது மோதி சொகுசு கார் அதன் பின்னரும் கட்டுக்குள் வரவில்லை. அங்கிருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.

    இதில் மின்கம்பம் உடைந்தது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து பொக்லின் மற்றும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மின் கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டது. #tamilnews
    கோவை சுந்தராபுரத்தில் இன்று காலை சொகுசு கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
    குனியமுத்தூர்:

    கோவையில் இன்று காலை பயணிகள் கூட்டத்தில் சொகுசு கார் புகுந்து 6 பேர் பலியானார்கள். இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு-

    கோவை- பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரத்தில் பெரியார் சிலை அருகில் அய்யர் ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த பஸ் நிறுத்தத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆண்கள், பெண்கள் கல்லூரி மாணவிகள் என ஏராளமானோர் பஸ்சுக்கு காத்திருந்தனர்.

    அப்போது பொள்ளாச்சி பகுதியில் இருந்து கோவை நோக்கி அதி வேகமாக ஒரு ஆடி கார் வந்தது. இந்த கார் திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த பயணிகள் கூட்டத்தில் புகுந்தது.

    இதனால் பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் 10-க்கும் மேற்பட்டோரை தள்ளி கொண்டு சென்ற கார் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஆட்டோ மீது மோதியது.

    பின்னர் அங்கிருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.

    இந்த சம்பவத்தை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்கு ஓடி சென்றனர். அதற்குள் கார் மோதி 4 பெண்கள் 2 ஆண்கள் என 6 பேர் சம்பவ இடத்திலே உயிர் இழந்து விட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 2 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியிலும், மற்ற 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    பலியானவர்களில் 5 பேர் பெயர் விவரம் கிடைத்துள்ளது. அவர்கள் சுந்தராபுரத்தை சேர்ந்த அம்சவேணி (35), சுபாசினி(18), குப்பாத்தாள் (70), குறிச்சி ஸ்ரீரெங்கதாஸ்(60), குறிச்சி பாலாஜி வீதி நாராயணன் (70) என்பது தெரிய வந்தது.

    இவர்களில் சுபாசினி கல்லூரி மாணவி ஆவார். கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இன்று கல்லூரி செல்ல பஸ்சுக்காக காத்திருந்த போது விபத்தில் சிக்கி பலியானார்.

    பலியான அம்சவேணி இந்த பஸ் நிலையத்தில் பூக்கடை நடத்தி வந்தார். கார் மோதிய போது இவரது கடையும் இடித்து தள்ளப்பட்டது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி அம்சவேணி இறந்து விட்டார்.

    சுப்பாத்தாள் இன்று காலை ரேசன் கடைக்கு வந்த போது பலியானார். இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது.

    பலியான பெண் ஒருவர் பெயர் விவரம் உடனடியாக கிடைக்கவில்லை. அவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

    விபத்து ஏற்படுத்திய சொகுசு காரை ஓட்டி வந்தது குன்னூரை சேர்ந்த டிரைவர் ஜெகதீசன் (35) ஆவார். அவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.

    இன்று காலை கோவையில் இருந்து ஒருவரை அழைத்து வர வந்த போது தான் விபத்தை ஏற்படுத்தி விட்டார். கார் விபத்தில் சிக்கியதும் அவர் தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர் காயம் அடைந்தார். அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் டிரைவர் மது போதையில் இருந்தாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, துணை கமி‌ஷனர் லட்சுமி, போக்குவரத்து துணை கமி‌ஷனர் சுஜித் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

    விபத்து காரணமாக கோவை- பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அதனை சரி செய்தனர். விபத்து குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சுந்தராபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×