search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "build new classrooms"

    ஏ.நடுஅள்ளி அரசு பள்ளியில் சேதமடைந்த வகுப்பறைகளுக்கு பதிலாக புதிய வகுப்பறைகள் கட்ட கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த கிராம மக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் ஏ.நடுஅள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு மொத்தம் 4 வகுப்பறைகள் உள்ளன. இவற்றில் 2 வகுப்பறைகளில் மேற்கூரைகள் சேதமடைந்தன. இதனால் சேதமடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ஏ.நடு அள்ளி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலக போர்டிகோ பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது கோரிக்கை தொடர்பாக ஒரு சிலர் மட்டுமே கூட்டம் நடைபெறும் வளாகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளிக்க முடியும். அனைவரையும் அனுமதிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் கிராமமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த வருவாய்த்துறை அலுவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கிராம மக்கள் கூறுகையில், ஏ.நடுஅள்ளியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சேதமடைந்த வகுப்பறைகளில் இருந்து மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுகிறது. இந்த மேற்கூரை எப்போது இடிந்துவிழுமோ? என்ற அச்சத்துடன் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். புதிய வகுப்பறை கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சேதமடைந்த வகுப்பறை கட்டிடங்களை இடித்து விட்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை கட்ட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.இந்த கோரிக்கை தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ×