search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assam BJP MLA Resign"

    அசாம் மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ ஒருவர் தன் கடமையை சரியாக செய்ய முடியாததாலும் தொகுதி மக்களுக்கு சேவை செய்ய முடியாததாலும் பதவி விலகி உள்ளார். #AssamMLA #BJPMLAResign
    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் துலியாஜன் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தேராஷ் கோவல்லா. ஆளுங்கட்சியான பாஜகவைச் சேர்ந்த இவர் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் சர்பானந்த சோனாவலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். இதனை பாஜக மூத்த நிர்வாகியும் உறுதி செய்துள்ளார்.

    முதல் முறை எம்எல்ஏவான தேராஷ் கோவல்லாவிடம் ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து கேட்டபோது, “பல பிரச்சனைகள் உள்ளன. எம்எல்ஏவாக என் கடமைகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. அதனால் இதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்கிறேன்” என்றார்.

    ‘அரசு கட்டுப்பாட்டில் உள்ள அசாம் கேஸ் கம்பெனி லிமிடெட் எனது தொகுதியில் உள்ளது. அந்த கம்பெனியில் சமீபத்தில் முக்கிய பதவிகள் நிரப்பப்பட்டபோது, எனக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. என்னைத் தேர்ந்தெடுத்த மக்கள் என்னிடம் சில எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். என்னிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல் அந்த கம்பெனியின் பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன. எனக்கு பதவி வேண்டும் என்று கேட்கவில்லை. ஆனால் என்னிடம் கலந்து ஆலோசனை செய்திருக்க வேண்டும்’ என்றும் கோவல்லா கூறினார்.

    கட்சி கேட்டுக்கொண்டால் ராஜினாமாவை திரும்ப பெற வாய்ப்பு உள்ளதா? என நிருபர்கள் கேட்டபோது, ‘பிரச்சனைகள் குறித்து முதல்வருக்கு தெரிவித்துள்ளேன். அவரிடம் இருந்து திருப்தி அளிக்கும் வகையில் பதில் வந்தால், என் ராஜினாமா முடிவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்வேன்’ என்றார்.

    126 உறுப்பினர்கள் கொண்ட அசாம் சட்டசபையில், பாஜகவுக்கு 61 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜக, அசாம் கண பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோரை அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்களின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் இயக்குனர்களாக முதலமைச்சர் சர்பானந்த சோனோவல் நேற்று நியமித்தது குறிப்பிடத்தக்கது. #AssamMLA #BJPMLAResign
    ×