search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arranging"

    • 50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • அசோகன், முனியாண்டி, சேர்முக பாண்டியன் உள்ளிட்ட பலரும் இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் உள்ளது சத்திரிய இந்து நாடார் உயர்நிலைப்பள்ளி. இங்கு 11-ம் வகுப்பு (பழைய எஸ்.எஸ்.எல்.சி.) படித்த மாணவ - மாணவிகள் மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள குமார் காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ் வளாகத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துகொண்டனர்.

    அசோகன், முனியாண்டி, சேர்முக பாண்டியன் உள்ளிட்ட பலரும் இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்தனர். அவர்களில் தொழிலதிபர்கள், சிறு, பெரு வணிகர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், இல்லத்தரசிகள் என பலவாறாக உள்ளனர். ஆசிரியர்களாக, மத்திய-மாநில அரசு பணியாளர்களாக, ஓய்வுபெற்றவர்களும் அடங்குவர்.

    மறைந்த ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அஞ்சலி செலுத்திய பிறகு கூட்டம் தொடங்கியது. ராஜமாணிக்கம், முகமது காசிம்,இந்திரா ஆகியோர் தலைமை தாங்கினர். அசோகன் முன்னிலை வகித்தார். லியாகத் அலிகான் வரவேற்றார்.

    சேர்முக பாண்டியன் தொடக்க உரையாற்றுகையில், பள்ளி ஆசிரியர்கள் நல்ல கல்விக்கு அடித்தளமிட்டது மட்டுமின்றி அறம் சார்ந்த பழக்கங்களையும், நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத் தந்ததால் தான் வாழ்வில் முன்னேற முடிந்தது என்பதை நன்றியோடு நினைவு கூர்ந்தார்.

    பள்ளியில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஒருவருக்கொருவர் பேசி மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அரை நூற்றாண்டுக்கு பிறகு நடந்த இந்த சந்திப்பின்போது உணர்வு பெருக்கில் நெகிழ்ந்தனர். தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் கண்டு வியந்து பேசிக்கொண்டனர்.

    அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தாங்கள் படித்த பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுவது, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்குவது, வறுமையில் வாடும் மாணவிகளின் கல்விக்கு உதவுவது என்று கதிரேசன் கொண்டு வந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இந்த சந்திப்புக்கு இடமும், உணவும் தந்த தொழில் அதிபர் ராஜமாணிக்கம், அவரது மனைவி அழகம்மாள் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். ஜெகதீசன் நன்றி கூறினார்.

    ×