search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Usman Road"

    • முறையான அறிவிப்பு பலகைகளும், போலீசாரும் இல்லை.
    • ஒலிமாசு, வணிக நெருக்கடி, ஆக்கிரமிப்பு உள்பட பல்வேறு நெருக்கடிகள்.

    சென்னை:

    சென்னையின் மிகப்பெரிய வர்த்தக பகுதியான தி.நகர் நெரிசல் மிகுந்த பகுதி. இந்த பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் உஸ்மான் ரோட்டில் மேம்பாலம் அமைக்கப்படுவதால் கூடுதலாக மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த இரண்டு சிக்கல்களால் இடியாப்ப சிக்கலில் சிக்கிய நிலையில் தி.நகர் வாசிகள் திணறுகிறார்கள்.

    முறையற்ற இந்த மாற்று திட்டங்களால் பல தெருக்களில் வசிப்பவர்கள் வெளியே வர முடியாமல் திணறுகிறார்கள்.

    முக்கியமாக ரங்கன் தெரு, ராமசாமி தெரு, மகாலெட்சுமி தெரு, மோதிலால் தெரு, சரோஜினி தெரு, வெங்கடேசன் தெரு, பிஞ்சலா சுப்பிரமணியன் தெரு, மங்கேஷ் தெரு, ராமநாதன் தெரு, நடேசன் தெரு, தண்டபாணி தெரு ஆகிய தெருக்களில் வசிப்பவர்கள் இதை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

    அவசரத்துக்கு எந்த வாகனங்களும் இந்த தெருக்களுக்குள் சென்று விட முடியாது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முறையான அறிவிப்பு பலகைகளும், போலீசாரும் இல்லை என்பது பெரும் குறை.

    தி.நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் கண்ணன் கூறும்போது, குடியிருப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு எளிதில் செல்ல முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறோம். போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்துவற்கு முன்பு பொதுமக்களை கலந்து கருத்து கேட்டு இருக்கலாம். இந்த சிக்கலுக்கு ஓரளவு நிவாரணம் பெற ஐகோர்ட்டை நாட முடிவு செய்துள்ளோம் என்றார்.

    ஒலிமாசு, வணிக நெருக்கடி, ஆக்கிரமிப்பு உள்பட பல்வேறு நெருக்கடிகளை ஏற்கனவே அனுபவித்து வருவதாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் போலீசார் புதிய போக்குவரத்து மாற்றங்கள் செய்து இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். சிலர் வீடுகளை காலி செய்து விட்டு நெருக்கடி இல்லாத இடத்துக்கு சென்று விட யோசிக்கிறார்கள்.

    மோதிலால் தெருவை சேர்ந்தவர்கள் கூறும்போது, `உள்ளூர் மக்களுக்கு நடமாடவே கஷ்டமாக உள்ளது. நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை. அதற்காக உள்ளூர் வாசிகள் என்ன விலை கொடுக்க வேண்டும்?

    உள்ளூர் வாசிகள் சந்திக்கும் பிரச்சினை பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. டிசம்பருக்குள் மேம்பால பணியை முடிப்போம் என்கிறார்கள். நம்ப முடியவில்லை என்றனர்.

    ரங்கன் தெருவில் இரு பக்கமும் போலீசார் தடுப்பு அமைத்து இருப்பதால் அலுவலகங்களில் இருந்து வீடு திரும்புவதே சிரமமானதாக இருப்பதாக கூறும் இந்த தெருவாசிகளை பக்கத்தில் உள்ள ராமேஸ்வரம் பாதை வழியாக செல்லலாம் என்றால் அந்த பகுதி முழுவதும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டி ருப்பதாக கூறுகிறார்கள்.

    நாமநாதன் தெருவும், ரங்கன் தெருவும் கனரக வாகனங்களால் நிரம்பி வழிகின்றன. போக்குவரத்து மாற்றுப் பாதையில் செல்வதால் உள்ளூர் வாசிகள் ஆட்டோக்களில் கூட செல்ல முடியவில்லை என்கிறார்கள்.

    வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பஸ் நிலையம் செல்லும் வாகனங்கள் உஸ்மான் ரோடு பாலம் வழியாக செல்ல முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

    • பர்கிட் சாலை மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
    • 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படும்.

    தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை முதல் அடுத்தாண்டு ஏப்ரல் 26ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதவாது

    மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படும்.

    வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ்) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராய சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.

    பர்கிட் சாலை மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.

    தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம்.

    சிஐடி நகர் 1வது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம்.

    தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டனாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம்

    வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×