search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramesh Jarkiholi"

    • கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
    • ஊழலின் பிதாமகனாக பசவராஜ் பொம்மை உள்ளார்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

    இதையொட்டி அரசியல் கட்சிகள் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில் பா.ஜனதா கட்சியை சோ்ந்த முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும் என்றும், அதற்காக ஒரு ஓட்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கலாம் என்றும் கூறினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் நேற்று பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் போலீஸ் நிலையத்திற்கு வந்து, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோர் மீது பரபரப்பு புகார் அளித்தனர். அதில் வாக்காளர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் பணம் கொடுக்க தயாராக இருப்பதாக கூறியிருப்பது சட்டவிரோதமானது என்று கூறியுள்ளனர். அதன்பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, வாக்காளர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் கொடுத்து விலைக்கு வாங்குவதாக கூறியுள்ளார். இதன் மூலம் பா.ஜனதா கட்சி ரூ.30 ஆயிரம் கோடி செலவு செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது. அவர் மீதும், அவரை ஊக்குவிக்கும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் மீதும் விசாரணை நடத்த வேண்டும்.

    ஜனநாயகத்தில் பா.ஜனதாவின் இந்த அணுகுமுறையை மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். இந்த பா.ஜனதா, 40 சதவீத கமிஷன் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சம்பாதித்துள்ளது. எதிர்தரப்பு வேட்பாளர் எவ்வளவு செலவு செய்தாலும், அவரை விட கூடுதலாக ரூ.10 கோடி செலவு செய்வதாக ரமேஷ் ஜார்கிகோளி கூறியுள்ளார்.

    போலீசார் உடனே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் சுற்றுப்பயணத்தில் இருந்ததால் உடனே புகார் கொடுக்க முடியவில்லை. இன்று (நேற்று) தேசிய வாக்காளர் தினம். புனிதமான இந்த நாளில் ஓட்டுரிமையை பாதுகாக்கும் பொருட்டு நாங்கள் புகார் அளித்துள்ளோம். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேட்டில், ஒட்டுமொத்த அரசுக்கும் தொடர்பு உள்ளது.

    இந்த முறைகேட்டை மூடிமறைக்க குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் தலா ரூ.3 கோடி லஞ்சமாக தர வேண்டும் என்று விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறையில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி, கோர்ட்டில் வாக்குமூலம் அளிக்க இந்த அரசு அனுமதி வழங்கவில்லை. ஊழலின் பிதாமகனாக பசவராஜ் பொம்மை உள்ளார். அவரது தலைமையிலான மந்திரிகளும் ஊழலில் பிதாமகன் தான்.

    ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்வதாக ரமேஷ் ஜார்கிகோளி கூறியுள்ளார். ஆனால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அமைதியாக உள்ளன. தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறாவிட்டால் ஆட்சி அமைப்போம் என்று பா.ஜனதா தலைவர்கள் சொல்கிறார்கள். இதன் மூலம் பண பலத்தை பயன்படுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    ×