search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Price Hike"

    • கோயம்பேடு சந்தைக்கு தினசரி 10லாரிகள் வரை சுமார் 80 முதல் 100டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
    • கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எலுமிச்சை பழத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. தற்போது கோடைவெயில் சுட்டெரித்து வரும் நிலையில் எலுமிச்சை பழம் தேவை அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு சந்தைக்கு தினசரி 10லாரிகள் வரை சுமார் 80 முதல் 100டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். கோடை சீசன் தொடங்கி உள்ளதால் பல்வேறு மாநிலங்களுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து எலுமிச்சை பழங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.

    கடந்த சில நாட்களாகவே 40 டன் எலுமிச்சை பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எலுமிச்சை பழத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் விலையும் தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் எலுமிச்சை பழம் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.130வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடைகளில் எலுமிச்சை பழச்சாறு, குளிர்பானங்கள், சர்பத்தை பலர் விரும்பி குடித்து வருகிறார்கள். இதனால் சாலையோரங்களிலும் எலுமிச்சை சர்பத் கடைகள் பல இடங்களில் முளைத்து உள்ளன.

    • கிலோ ரூ.30-க்கு விற்ற ரோஜாப்பூ 4 மடங்கு அதிகரித்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    • வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் பழங்கள் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

    போரூர்:

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.250-க்கு விற்ற மல்லிப்பூ தற்போது 2 மடங்காக விலை அதிகரித்து கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.100-க்கு விற்ற சாமந்தி ரூ.220 வரை உயர்ந்துள்ளது. அதேபோல் கிலோ ரூ.30-க்கு விற்ற ரோஜாப்பூ 4 மடங்கு அதிகரித்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல் ஆப்பிள் சீசன் முடிந்து உள்ளதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு பழ மார்க்கெட்டில் இந்தியன் ஆப்பிள் ஒரு கிலோ ரூ180-க்கும், ஈரான் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.120-க்கும் விற்கப்படுகிறது. மாதுளை கிலோ 180-க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், கமலா ஆரஞ்சு கிலோ ரூ.50-க்கும், கொய்யா கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் பழங்கள் விலை மேலும் பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விலை விவரம் கிலோவில் வருமாறு:-

    சாமந்தி - ரூ.150 முதல் ரூ.220 வரை, மல்லி - ரூ.500, பன்னீர் ரோஜா ரூ.80 முதல் ரூ.100வரை, சாக்லெட் ரோஜா ரூ.100 முதல் ரூ.120 வரை, அரளி - ரூ.250, செவ்வரளி - ரூ.400, கனகாம்பரம் - ரூ.600, சம்பங்கி - ரூ.180, முல்லை - ரூ.600, ஜாதிப்பூ - ரூ.500.

    • கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அதிரடியாக ஐஸ்கிரீம் விலையை உயர்த்தி இருக்கிறது.
    • ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஐஸ்கிரீம் உள்பட பால் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    கோடை காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் பால் பொருட்களுக்கு வழக்கத்தை விட தேவை அதிகரிக்கும்.

    தற்போது கோடை காலம் உச்சத்தை எட்ட தொடங்கி இருக்கிறது. அடுத்த வாரம் முதல் வெயில் அளவு கடுமையாக உயரும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதனால் ஐஸ்கிரீம் விற்பனை கணிசமாக உயர வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அதிரடியாக ஐஸ்கிரீம் விலையை உயர்த்தி இருக்கிறது. இது தொடர்பாக ஐஸ்கிரீம் விற்பனையாளர்களுக்கு கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் நேற்று முன்தினம் கடிதம் அனுப்பி உள்ளார்.

    அந்த கடிதத்தில் 4 வகையான ஐஸ்கிரீம் விலையை உயர்த்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 65 எம்.எல். எடை கொண்ட சாக்கோ பார் ஐஸ்கிரீம் விலை ரூ.20-ல் இருந்து ரூ.25ஆக அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல 125 எம்.எல். எடை கொண்ட பால் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது.

    100 எம்.எல். எடை கொண்ட கிளாஸ்சிக் கோன் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அது போல கிளாஸ்சிக் கோன் சாக்லெட் ஐஸ்கிரீமும் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக உயர்ந்துள்ளது.

    ஐஸ்கிரீம் விலை உயர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வருவதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்று தெரிகிறது.

    ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பால் உபபொருட்களின் விற்பனை விலையை நேரடியாகவும், பால் விற்பனை விலையை மறைமுகமாகவும் கடந்தாண்டு வரலாறு காணாத வகையில் உயர்த்திய ஆவின் நிர்வாகம் நடப்பாண்டில் நாளை (3-ந் தேதி) முதல் ஐஸ்கிரீம் விற்பனை விலையை உயர்த்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

    ஏனெனில் தனியார் பால் நிறுவனங்கள் பலவும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விற்பனை விலையை குறைப்பது, பல்வேறு சலுகைகள் வழங்குவது என செயல்பட்டு வரும் சூழலில் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதைப் போலிருக்கிறது.

    மேலும் தமிழ்நாடு முழுவதும் பால் கொள்முதலில் கவனம் செலுத்தாமல், வடமாநிலங்களில் இருந்து பால் பவுடர், வெண்ணெய் கொள்முதல் செய்து அதன் மூலம் பணம் ஈட்டி, தங்களின் கஜானாவை நிரப்பிக் கொள்வதில் அக்கறை காட்டும் ஊழல் அதிகாரிகளால் ஆவின் நிர்வாகம் சிதிலமடைந்து வரும் நிலையில் இதுபோன்ற விற்பனை விலை உயர்வு அறிவிப்புகள் ஆவினுக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் எச்சரிக்கையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

    அத்துடன் பால் வளத்துறை அமைச்சரும், ஆவின் நிர்வாக இயக்குனரும் அதிகாரிகள் மட்டத்தில் குளிர்சாதன அறைகளில் அமர்ந்து கொண்டு ஆலோசனை கூட்டம் என்கிற பெயரில் மக்களின் வரிப்பணத்தை, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பால் வரும் வருமானத்தை வீணடிப்பதை நிறுத்திவிட்டு களத்தில் இறங்கி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் நடப்பாண்டின் கோடை காலத்தில் ஆவின் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 550-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன.
    • வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகளின் விலை பல மடங்கு எகிறி உள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இன்று 550-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன.

    ஊட்டி கேரட், வெண்டைக்காய், முருங்கைக்காய் ஆகியவை வரத்து குறைவால் அதன் விலை அதிகரித்து உள்ளது. கேரட் கிலோ ரூ.90-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.80-க்கும், பீன்ஸ், அவரைக்காய் மற்றும் பன்னீர் பாகற்காய் ஆகிய காய்கறிகள் கிலோ ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகளின் விலை பல மடங்கு எகிறி உள்ளது. தக்காளி ரூ40-க்கும், உஜாலா கத்தரிக்காய் கிலோ ரூ.50-க்கும், முருங்கைக்காய் மற்றும் இஞ்சி கிலோ ரூ.120 வரையிலும் விற்கப்பட்டு வருகிறது.

    • டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு.
    • 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயருகிறது.

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

    பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி கொண்டுதான் இருக்கிறது. இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்படுகிறது.

    அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மதுவகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் விரைவில் உயர உள்ளது. இதற்கேற்ப 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயருகிறது.

    இந்நிலையில், வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறித்துள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 11 கார்களை விற்பனை செய்து வருகிறது.
    • கார்களின் விலை மாற்றம் பிப்ரவரியில் அமலுக்கு வருகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு பிப்ரவரி 1-ம் தேதி அமலுக்கு வருகிறது. ஐ.சி. என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் என அனைத்தின் விலையும் உயர்த்தப்படுகிறது. இந்த முறை கார்களின் விலை 0.7 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

    தற்போது ஏழு ஐ.சி. என்ஜின் கார்கள் மற்றும் நான்கு எலெக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. இதில் டியாகோ, டியாகோ EV, டிகோர், டிகோர் EV, பன்ச், பன்ச் EV, அல்ட்ரோஸ், நெக்சான், நெக்சான் EV, ஹேரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்டவை அடங்கும்.

     


    சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பன்ச் EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 10 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது. 

    • மாருதி சுசுகி தனது வாகனங்கள் விலையை மாற்றி இருக்கிறது.
    • பலேனோ மாடல் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி லிமிடெட் நிறுவனம் தனது நெக்சா பிரான்டு கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் இக்னிஸ், பலேனோ, ஃபிரான்க்ஸ், ஜிம்னி, சியாஸ், XL6 மற்றும் கிரான்ட் விட்டாரா போன்ற மாடல்கள் நெக்சா பிரான்டிங்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டை போன்றே இந்த ஆண்டும் மாருதி சுசுகி தனது வாகனங்கள் விலையை மாற்றி இருக்கிறது.

    அதன்படி இக்னிஸ் ஹேச்பேக் மாடலின் விலை ரூ. 5 லட்சத்து 84 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இந்த மாடலின் AMT வேரியன்ட்களுக்கு ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மேனுவல் வேரியன்ட்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     


    மாருதி சுசுகி பலேனோ மாடலின் மேனுவல் மாடல்கள் விலை ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் AMT மாடல்கள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய சந்தையில் பலேனோ மாடல் சிக்மா, டெல்டா, சீட்டா மற்றும் ஆல்ஃபா போன்ற வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6 லட்சத்து 66 ஆயிரம் என துவங்குகிறது. டாப் என்ட் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 88 ஆயிரம் ஆகும்.

    கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ் 1.2 லிட்டர் NA பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் இதன் 1.0 லிட்டர் AT மாடல் விலை ரூ. 10 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. மற்ற மேனுவல் வேரியன்ட்களின் விலை ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     


    மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 10 லட்சத்து 80 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 20 லட்சத்து 09 ஆயிரம் ஆகும். மாருதி சுசுகி ஜிம்னி மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 12 லட்சத்து 74 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 14 லட்சத்து 95 ஆயிரம் என மாறியுள்ளது.

    XL6 மாடல்கள் விலை ரூ. 5 ஆயிரம் உயர்த்தப்பட்டு தற்போது இதன் விலை ரூ. 12 லட்சத்து 56 ஆயிரத்தில் இருந்து ரூ. 14 லட்சத்து 77 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மாருதி சுசுகி இன்விக்டோ மாடல்களின் விலை ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விலை தற்போது ரூ. 25 லட்சத்து 21 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 29 லட்சத்து ஆயிரத்து 500 ஆக மாறி இருக்கிறது.

    மாருதி சுசுகியின் செடான் மாடல் சியாஸ் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விலை தற்போது ரூ. 9 லட்சத்து 40 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 12 லட்சத்து 45 ஆயிரம் ஆகும்.

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • மஹிந்திரா நிறுவன கார் மாடல்கள் விலை மாற்றம்.
    • மஹிந்திரா கார்களின் விலை மாற்றம் அடுத்த ஆண்டு அமலுக்கு வருகிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி மஹிந்திரா எஸ்.யு.வி. மாடல்கள் விலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படுகிறது. எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு விலை உயர்த்தப்படும் என்ற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

    பணவீக்கம் காரணமாக உதிரி பாகங்கள் விலை உயர்ந்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என்று தெரிகிறது. பணவீக்க சூழலிலும் முடிந்தவரை விலையை கட்டுப்படுத்த முயற்சித்ததாகவும், வேறு வழியின்றிதான் கார்களின் விலையை உயர்த்தும் முடிவை எடுத்ததாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

     


    இந்த அறிவிப்பு மூலம் இந்தியாவில் தனது வாகனங்கள் விலையை உயர்த்தும் புதிய நிறுவனமாக மஹிந்திரா இணைந்துள்ளது. முன்னதாக மாருதி சுசுகி, ஹூண்டாய், எம்.ஜி. மோட்டார்ஸ், ஆடி மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது வாகனங்கள் விலை அடுத்த மாதத்தில் இருந்து உயர்த்தப்படும் என அறிவித்தன.

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • அதிக அளவில் திருமண முகூர்த்தம் உள்ளதால் பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

    வேலூர், ஜேடர்பா ளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ.600-க்கும், சம்பங்கி கிலோ ரூ.40-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.100-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.1100-க்கும், சம்பங்கி கிலோ ரூ.90-க்கும், அரளி கிலோ ரூ.170-க்கும், ரோஜா கிலோ ரூ.280-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும் ஏலம் போனது. அதிக அளவில் திருமண முகூர்த்தம் உள்ளதால் பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • 517 வாக்குறுதிகளில் எந்த வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்றாது என்பது தெரியும்.
    • 2024 பாராளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்பது மாநில தலைவராக என்னுடைய ஆசை.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வரும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று மாலை சத்தியமங்கலத்தில் நடைபயணத்தை மேற்கொண்டார்.

    அதை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் வந்த அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணத்தை தொடங்கினார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. வந்த பிறகு விலை உயர்வு அதிகமாக உள்ளது, பால்விலை மட்டும் ஐந்து முறை விலை ஏற்றியுள்ளனர். மின் கட்டணம் மட்டும் 15 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதம் விலை ஏற்றம் அடைந்துள்ளது. சிறுகுறு தொழிலாளிகளுக்கு 60 சதவிகிதம் வரை கட்டணம் உயர்ந்துள்ளது, பத்திர பதிவு கட்டணம் உயர்ந்துள்ளது.

    விலைவாசி உயர்வை ஒன்றை மட்டுமே தி.மு.க. அரசு மக்களுக்கு பரிசாக அளித்து உள்ளது. 517 வாக்குறுதிகளில் எந்த வாக்குறுதியையும் தி.மு.க. நிறைவேற்றாது என்பது தெரியும். இந்த ஆட்சியை எப்போது தமிழகத்தில் அகலும், இருள் எப்போது நீங்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

    ஏழை ஜாதி இருக்கக்கூடாது என நரேந்திர மோடி விரும்புகிறார். ஆனால் தமிழகத்தில் சனாதானம் இருக்கக் கூடாது இந்து தர்மம் இருக்கக் கூடாது என தி.மு.க.வினர் பேசி கொண்டுள்ளனர். ஊழல் தான் நம் மண்ணில் இருக்கக் கொண்டு கூடிய பெரிய பிரச்சனை. தமிழக அமைச்சரவையில் 35 அமைச்சர்கள் உள்ளனர். அதில் 15 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. 2006-ல் இருந்து 2011 வரை தி.மு.க. அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டுள்ளது.

    தி.மு.க.வினர் சினிமா படம் தயாரிக்கின்றனர் அதை வெளியிடுகின்றனர். கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். இதனை மக்கள் வெறுக்கின்றனர். இந்த அரசியல் வேண்டாம், இதனை எதிர்த்து நிற்க துடிக்கின்றனர். அதனால்தான் இவ்வளவு கூட்டம் நமக்கு வருகிறது, நடக்கின்ற ஆட்சியை அடியோடு வேறறுக்க வேண்டும் என என் மண் என் மக்கள் யாத்திரைக்கு மக்கள் வருகின்றனர்.

    தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது, ஒரு குழந்தை பிறக்கும்போதே கடனாளியாக பிறகின்றது , அதேபோல குஜராத்தில் ஒரு குழந்தை பிறக்கும்போதே 17 ஆயிரம் ரூபாய் லாபத்தில் பிறகின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடாந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் புதுவிதமான அரசியலை மக்கள் பார்க்க வேண்டும்.

    ஒவ்வொரு தொகுதிகளிலும் வெளிப்படையாக தெரிகின்றது மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று. மக்களுக்கு இந்த நடைமுறை அரசியல் சுத்தமாக பிடிக்கவில்லை. அதேபோல பாரதப் பிரதமரின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி கடை கோடியில் உள்ளவர்கள் வரை சென்றுள்ளது, மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எந்த மாங்காய் மரம் சுவையாக உள்ளதோ அதில் தான் கல் எடுத்து அடிப்பார்கள் என்பதைப் போல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னை குறிவைப்பது பேசுவது நல்லது தானே, கல்லடி பட்டு தான் மாங்கா மரம் சுவையான மாம்பழங்களை கொடுக்கின்றது. விமர்சனத்திற்கு எப்போதும் அண்ணாமலை அஞ்சுவது கிடையாது.

    அண்ணாமலைக்கு என்று தனிப்பணி அரசியல் உள்ளது. அந்த அரசியலில் நான் ஒரு பெட்டிக்குள் அடங்க விரும்பவில்லை. தமிழகத்தில் முன்பு இருந்த அரசியல்வாதிகள் இதுபோன்றுதான் அரசியல் செய்தார்கள் என்றால் அதனை அண்ணாமலை செய்ய விரும்பவில்லை. என்னுடைய அரசியல் ஒரு மாற்று அரசியல். தமிழகத்தில் நடந்து வரும் எந்த அரசியலும் மக்களுக்கு பிடிக்கவில்லை, நானும் இந்த அரசியலை மாற்றிக்கொள்ளவில்லை,

    என்னுடைய கருத்துக்களை ஆக்ரோசமாகவும் உரக்க தொடர்ந்து பேசிக் கொண்டுள்ளேன், நான் எப்பொழுதும் முன் வைத்த காலை பின் வைத்தது கிடையாது.

    பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் உறுதியாக வளர்ந்துள்ளது அதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. இன்னும் பாஜக வேகமாக வளர வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்பது மாநில தலைவராக என்னுடைய ஆசை.

    அதிமுக கூட்டணி முறிவுக்கு பின் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக யாருடன் கூட்டணி அமைக்கும் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு மக்களோடு கூட்டணி என அவர் தெரிவித்தார்.

    • இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டது.
    • சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,898-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சமையல் கியாஸ் மற்றும் வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் கிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

    கடந்த மாதம் ரூ.1,695க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் விலை ரூ.203 உயர்த்தப்பட்டு இருக்கிறது. இன்று முதல் சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,898-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக எக்ஸ் பதிவில் அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், "வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.203 கூடுதலாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விலையேற்றம், உணவகங்கள் - தேநீர் கடைகள் வைத்திருப்போர் என சிறு வணிகர்களை பெரிதும் பாதிப்படையச் செய்யும்."

    "ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும் - முறைபடுத்தப்படாத GST - பணமதிப்பு நீக்கம் - கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகளாலும் நொடிந்திருந்த சிறு வணிகர்கள் மீது மேலும் ஒரு தாக்குதலாக இந்த விலையேற்றம் அமைந்துள்ளது. இந்த விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • எக்ஸ்டிரீம் மற்றும் எக்ஸ்பல்ஸ் மாடல்களுக்கு அதிக விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது.
    • சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கரிஸ்மா XMR விலையை உயர்த்தியது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் விலையை அக்டோபர் 3-ம் தேதியில் இருந்து உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த முறை ஹீரோ இருசக்கர வாகனங்கள் விலை 1 சதவீதம் வரை அதிகரிக்கிறது.

    ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வில் வேறுபாடு இருக்கும் என்று தெரிகிறது. இந்த விலை உயர்வில் ஸ்பிலெண்டர் மற்றும் பேஷன் உள்ளிட்டவைகளின் விலை குறைந்த அளவிலேயே உயரும் என்று கூறப்படுகிறது. மாறாக எக்ஸ்டிரீம் மற்றும் எக்ஸ்பல்ஸ் மாடல்களுக்கு அதிக விலை உயர்வு அறிவிக்கப்பட இருக்கிறது.

    சமீபத்தில் தான் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கரிஸ்மா XMR விலையில் ரூ. 7 ஆயிரத்தை உயர்த்தியது. அந்த வகையில், தற்போதைய விலை உயர்வில் இந்த மாடல் சேர்க்கப்படாது என்று கூறப்படுகிறது. பண்டிகை காலம் துவங்க இருப்பதை தொடர்ந்து பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகன விலையை அதிகப்படுத்தி வருகின்றன.

    விலை உயர்வு ஒருபக்கம் இருந்தாலும், மறுபுறம் விற்பனையை அதிகப்படுத்தும் சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்ட பலன்களை வாகன விற்பனையாளர்கள் அறிவிப்பர் என்று தெரிகிறது.

    ×