search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kalahasti temple"

    சந்திரகிரகணத்தின்போது ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
    சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சிவன் கோவில் வாயுதலமாக விளங்குகிறது. இங்கு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகை தாயாரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து பரிகார பூஜைகளை செய்து அருள்பெற்றுச்செல்கின்றனர்.

    நாட்டின் அனைத்து கோவில்களிலும் சூரியகிரகணம், சந்திரகிரகணம் ஏற்படும்போது கிரகண காலத்தில் நடைசாத்தப்பட்டு பின்னர் பரிகார பூஜைகள் நடைபெறும். ஆனால் இந்த கோவிலில்சூரிய மற்றும் சந்திர கிரகண நேரங்களில் மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானப் பிரசுனாம்பிகை தாயாருக்கும் சிறப்பு கிரகணக் கால அபிஷேகங்கள் நடத்தப்படுவது சிறப்புக்குரியதாகும்.

    அதன்படி நேற்று இரவு 11.54 முதல் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2.45 வரை சந்திர கிரகணம் ஏற்பட்டது. அப்போது மூலவர்களுக்கு கிரகணக்கால சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட உள்ளதாக கோவிலின் வேதப் பண்டிதர் மாருதி சர்மா கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் சூரிய, சந்திரர்கள் சுயமாக தங்களின் பாவங்களை நீக்கிக் கொள்வதற்கு தவம் செய்து தங்களின் சக்திகளைத் திரும்ப பெற்றதாக தலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தற்போதும் சூரியனால் அமைக்கப்பட்ட புஷ்கரணியிலிருந்து (கிணறு) எடுக்கப்படும் புனித நீரால் மட்டுமே ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் சூரிய, சந்திர கிரகணங்களின் போது எப்போதும் போல் கோவில் நடை சாத்தப்படாமல் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்து சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவில் நிர்வாக அதிகாரி ராமசாமி கூறுகையில், “தினமும் இரவு 9 மணிக்கு நடைசாத்தப்படுவதுபோல் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு நடைசாத்தப்பட்டது. நள்ளிரவுக்கு பின்னர் 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அப்போது மூலவர்களுக்கு நடத்தப்படும் கிரகணக்கால அபிஷேகத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்” என்றார். அதன்படி கிரகணத்தின்போது திரளான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்தனர். 
    ×