search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India-Sri Lanka Agreement"

    • கடந்த வாரம் இந்தியாவுக்கு 2 நாட்கள் பயணமாக வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
    • இலங்கை தமிழர் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று 1987-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தம் மூலம் இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

    அந்த சட்டதிருத்தம் தமிழர் பகுதியான வடக்கு கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கவும், தமிழர்களுக்கு அதிகார பரவல் அளிக்கவும் வகை செய்கிறது. ஆனால் அந்த சட்டதிருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. அதை அமல்படுத்தக்கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கடந்த வாரம் இந்தியாவுக்கு 2 நாட்கள் பயணமாக வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது ஒருங்கிணைந்த இலங்கையின் வளர்ச்சிக்காகவும், இலங்கை தமிழர்கள் கண்ணியத்துடன் வாழவும், அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை இலங்கை முழுமையாக அமல்படுத்தவும், மாகாணங்களுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்கேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    இதுகுறித்து ரணில் விக்ரமசிங்கே கூறும்போது, தங்கள் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

    இந்நிலையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டம் அதிபரின் செயலகத்தில் நடக்கிறது.

    இதுகுறித்து அதிபரின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில், அதிபர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் அதிபர் செயலகத்தில் நாளை நடைபெறும். இதில் தேசிய நல்லிணக்கத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும். இதில் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்ட அனைத்து கட்சிகளும், சுயேட்சைகளும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கான தேசிய நல்லிணக்க திட்டம் பற்றி எடுத்துரைக்கப்படும்.

    ×