search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Father Murdered"

    • சுரேஷ் குமார் அதிக மதுபோதையில் இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • குடிபோதையில் தினமும் என்னை திட்டி வந்தார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை ஆலடி காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 46), தொழிலாளி. இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

    சுரேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து மனைவியும் ஒரு மகளும் தனியாக சென்று விட்டனர். சுரேஷ்குமாருடன் அவரது மூத்த மகள் ஆர்த்தி (21) வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி சுரேஷ்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மதுபோதையில் தந்தை இறந்து விட்டதாக ஆர்த்தி கூறினார். இதையடுத்து சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுரேஷ் குமார் அதிக மதுபோதையில் இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சுரேஷ்குமாரின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு தலையில் காயங்கள் இருப்பதாக கூறினார்கள். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து அவரது மகள் ஆர்த்தியை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது தந்தையை கொலை செய்ததை ஆர்த்தி ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது:-

    எனது தந்தை தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்து வந்ததால் எனது தாயார் மற்றும் சகோதரி தனியாக சென்று விட்டனர். நான் தந்தையுடன் வசித்து வந்தேன்.

    குடிபோதையில் தினமும் என்னை திட்டி வந்தார். சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் குடிபோதையில் வந்து என்னை தாக்க முயன்றார். அப்போது நான் என்னை பாதுகாத்துக்கொள்ள அவரை தாக்கினேன். அப்போது அவர் சுவரில் மோதியதில் தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் மறுநாள் மீண்டும் என்னிடம் தகராறு செய்தார்.

    என்னை தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் தந்தையின் கழுத்தை பிடித்து நெரித்தேன். அப்போது அவர் மயங்கி விழுந்துவிட்டார். ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன். மதுபோதையில் தந்தை விழுந்து விட்டதாக கூறினேன். ஆனால் பிரேத பரிசோதனையில் கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போலீசார் ஆர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தந்தையை மகள் கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • செபின் கிறிஸ்டியனின் பேச்சில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
    • செபாஸ்டியன் மரண வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னப்பிரா பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டியன்(வயது65). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு நடக்க முடியாமல் போனது. ஆகவே அவர் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார்.

    அவரை அவரது மனைவி உடனிருந்து கவனித்து வந்தார். புற்றுநோய் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். இதையடுத்து படுத்த படுக்கையாக இருந்த செபாஸ்டியனை அவரது குழந்தைகள் கவனித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டியில் இருந்து கீழே தவறி விழுந்ததில் காயமடைந்துவிட்டதாக கூறி, ஆஸ்பத்திரியில் செபாஸ்டியன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், கடந்த 21-ந்தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதில் செபாஸ்டியன் அடித்துக்கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தவறி விழுந்ததில் காயமடைந்து இறக்கவில்லை என்றும், அவரது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டதில் அவர் இறந்திருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் படுத்த படுக்கையாக இருந்த செபாஸ்டியனை கவனித்து வந்த அவரது மூத்த மகன் செபின் கிறிஸ்டியன்(26) உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது செபின் கிறிஸ்டியனின் பேச்சில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    ஆகவே அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் தனது தந்தையை வாக்கரால் அடித்தும், காலை வைத்து கழுத்தில் மிதித்தும் கொன்ற தகவலை செபின் கிறிஸ்டியன் தெரிவித்தார். தாய் இறந்தபிறகு தந்தை செபாஸ்டியனை, மூத்த மகன் என்ற அடிப்படையில் செபின் கிறிஸ்டியனே அதிகமாக பார்த்து வந்திருக்கிறார்.

    சம்பவத்தன்று செபாஸ்டியன் படுக்கையிலேயே மலம் கழித்துவிட்டார். இது மகன் செபின் கிறிஸ்டியனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் தந்தை பயன்படுத்தும் வாக்கரை எடுத்து தந்தையின் தலையில் அடித்துள்ளார். வலியால் துடித்த அவர் படுக்கையில் இருந்து கீழே உருண்டு விழுந்திருக்கிறார்.

    அதன்பிறகும் தந்தையை வாக்கரால் தொடர்ந்து தாக்கியபடி இருந்துள்ளார். மகனின் இந்த தாக்குதலால் நிலைகுலைந்த செபாஸ்டியன் வலியால் அலறி துடித்திருக்கிறார். இருந்தபோதிலும் ஆத்திரம் தீராத செபின் கிறிஸ்டியன், தனது காலால் தந்தையின் கழுத்தில் வைத்து மிதித்துள்ளார்.

    அதில் படுகாயமடைந்ததாலேயே செபாஸ்டியன் இறந்திருக்கிறார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து செபாஸ்டியன் மரண வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர்.

    மகன் செபின் கிறிஸ்டியனை கைது செய்தனர். பின்பு அவர், ஆலப்புழா முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். படுத்த படுக்கையாக இருந்த தந்தையை மகனே கொடூரமாக கொன்ற சம்பவம் ஆலப்புழாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×