search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBI charge sheet"

    நே‌ஷனல் ஹெரால்டு வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. #NationalHerald #SoniaITcase #RahulITcase

    புதுடெல்லி:

    நாட்டின் முதல் பிரதமரான மறைந்த ஜவகர்லால் நேரு 1930-ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரர்களுடன் சேர்ந்து ‘நே‌ஷனல் ஹெரால்டு’ என்ற பத்திரிகையை தொடங்கினார்.

    2008-ம் ஆண்டு இந்த பத்திரிகை தனது வெளியீட்டை நிறுத்திக் கொண்டது. அதன் பிறகு 2010-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ‘நே‌ஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை விலைக்கு வாங்கியது.

    அந்த பத்திரிகையை தொடர்ந்து நடத்த காங்கிரஸ் சார்பில் வட்டி இல்லாமல் ரூ. 90 கோடி கடன் வழங்கியது. அந்த பணம் திரும்பி செலுத்தவில்லை.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி ‘நே‌ஷனல் ஹெரால்டு’ பத்திரிகை தொடர்பாக டெல்லி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

    அதில், ‘நே‌ஷனல் ஹெரால்டு’ பத்திரிகையின் பல கோடி சொத்துக்களை கைப்பற்றும் நோக்கத்தில் அதை காங்கிரஸ் விலைக்கு வாங்கியதாகவும், இதில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் முறைகேடாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

     


    இந்த வழக்கு தொடர்பாக சோனியா, ராகுல் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்தும் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரியும் இருவரும் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    இதையடுத்து இருவரும் கோர்ட்டில் ஆஜர் ஆகலாம் அல்லது அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜர் ஆகலாம் என்று விலக்கு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ‘நே‌ஷனல் ஹெரால்டு’ முறைகேடு வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதில் நடந்த நிதி முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

    இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான மோதிலால் வோரா, அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபேந்தர்சிங் கோடா ஆகியோரது பெயர் இடம் பெற்றுள்ளது.

    ‘நே‌ஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை காங்கிரஸ் வாங்கிய பின்பு அதன் பதிப்பகங்களை பல இடங்களில் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அரியானாவில் நிலம் வழங்கிய முறைகேடு தொடர்பாக பூபேந்தர்சிங் கோடா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    ‘நே‌ஷனல் ஹெரால்டு’ பத்திரிகை அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனம் பெயரில் பதிவு செய்யப்பட்டு பங்கு பரிவர்த்தனை நடைபெற்றது. இந்த நிறுவனத்தின் தலைவராக மோதிலால் வோரா பெயர் இடம் பெற்று இருந்தது. அதன் அடிப்படையில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #NationalHerald #SoniaITcase #RahulITcase

    ×