search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bethlehem"

    • பெத்லகேம் நகரில் "சர்ச் ஆஃப் தி நேடிவிட்டி" ஏசுநாதர் பிறந்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ளது
    • சுற்றுலா பயணிகள் ஓட்டல் முன்பதிவுகளை ரத்து செய்து விட்டனர்

    இன்று ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25 என்பதால் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    ஆனால், இவ்வருடம் ஏசுநாதர் அவதரித்த தலமாக கருதப்படும் பெத்லகேம் (Bethlehem) நகரில் கொண்டாட்டங்கள் இல்லை.

    கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேலின் வடக்கு பகுதி மீது பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க உறுதியெடுத்து அந்த அமைப்பினரின் மையமான காசா முனை (Gaza Strip) பகுதியில் பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இதுவரை இஸ்ரேலின் தாக்குதலில் 20,424 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார துறை தெரிவித்துள்ளது.

    இந்த போரின் தாக்கம் பாலஸ்தீன கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திலும் பிரதிபலிக்கிறது.

    ஜெருசேலமிற்கு தெற்கே உள்ள நகரம் பெத்லகேம். ஆண்டுதோறும் பெத்லகேம் நகரில் உள்ள நட்சத்திர விடுதிகளிலும் ஓட்டல்களிலும் மக்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்படும். ஆனால், இம்முறை சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளது. தெருக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.


    பெத்லகேம் நகரில் வசிப்பவர்களின் வருவாய் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பியுள்ளதால் அம்மக்கள் தற்போது பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஏசுநாதர் பிறந்ததாக கருதப்படும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள "சர்ச் ஆஃப் தி நேடிவிட்டி" (Church of the Nativity), வழக்கமாக மக்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கும்.


    ஆனால், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு குறைந்த அளவே மக்கள் வந்துள்ளனர்.

    போர் தொடங்கியதிலிருந்தே பெத்லகேம் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் முன்பதிவுகள் சுற்றுலா பயணிகளால் ரத்து செய்யப்பட்டன. அனைத்து விடுதிகளிலும் அறைகள் காலியாக உள்ளன. கிறிஸ்துமஸ் மரங்கள், சிலுவைகள், மேரி சிலைகள் உட்பட பல பொருட்கள், வாங்குவதற்கு ஆட்களின்றி கடைகளில் வைக்கப்பட்டுள்ளன.

    "அமைதிக்கான தூதர்" பிறந்த ஊரில் வாழும் மக்களுக்கு இஸ்ரேல்-ஹமாஸ் போர் விரைவில் முடிந்து அமைதி திரும்ப வேண்டும் என்பதே பிரார்த்தனையாக உள்ளது.

    மக்களின் பாவங்கள் நீங்க தன்னுடலை சிலுவையில் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான இன்று அவர் பிறந்த பெத்லகேம் நகரில் கிறிஸ்துமஸ் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. #Bethlehem #ChristmasinBethlehem
    பெத்லகேம்:

    இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த பெத்லகேம் நகரம் தற்போது பாலஸ்தீனம் நாட்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.



    இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தின் அருகாமையில் மிகப்பழமையான ஒரு தேவாலயம் அமைந்துள்ளது. ‘நேட்டிவிட்டி சர்ச்’ என்றழைக்கப்படும் இந்த தேவாலயத்தை தரிசிக்கவும், இங்கு பிரார்த்தனை செய்யவும் ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கிறிஸ்துமஸ் தினத்தன்று இங்கு நடைபெறும் பிரார்த்தனை கூட்டம் மிக சிறப்பான நிகழ்வாக கருதப்படுகிறது.

    அவ்வகையில், இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான  இன்று இஸ்ரேல் நாட்டில் உள்ள மக்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அந்த தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு நேர கிறிஸ்துமஸ் தின சிறப்பு ஆராதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, துதி பாடல்களைப் பாடி, பிரார்த்தனை செய்தனர்.

    இந்த சிறப்பு பிரார்த்தனையில் பாலஸ்தீன அதிபர் மஹ்முட் அப்பாஸ், பிரதமர் ரமி ஹம்டல்லா மற்றும் மந்திரிகள், அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக நேற்று, சூரியன் மறைந்த பின்னர் இஸ்ரேல் ராணுவத்தின் சோதனைச்சாவடி எல்லையை கடந்து அந்நாட்டின் ரோமானிய கத்தோலிக்க தலைமை பேராயர் பியர்பட்டிஸ்ட்டா பிஸாபல்லா  ‘நேட்டிவிட்டி சர்ச்’ அமைந்துள்ள பாலஸ்தீனம் பகுதிக்கு வந்தார். அவரை ஆடல், பாடல் மற்றும் இயேசுவைப் பற்றிய துதிப்பாடல்களுடன் மக்கள் அன்புடன் வரவேற்றனர்.



    அங்கு மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த ராட்சத கிறிஸ்துமஸ் மரத்தின் முன்னால் சிலர் குழுவாக நின்று ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒரேவேளையில் குவிந்ததால் ஓட்டல்களில் அறைகள் கிடைக்காமல் சிலர் சாலையோரங்களில் தங்கி ஓய்வெடுத்தனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெத்லகேம் நகரம் முழுவதும் வண்ணவண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெருக்களில் புத்தாடை உடுத்திய சிறுவர்-சிறுமியர் வாணவேடிக்கைகளை கண்டு களித்தனர்.

    உறவினர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி, கேக் மற்றும் இனிப்பு வகைகளை பரிமாறி உற்சாகமாக காணப்பட்டனர்.

    இதேபோல், அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள நாடுகளிலும், வளைகுடா நாடுகளிலும் இன்று கிறிஸ்துமஸ் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவ சகோதர-சகோதரிகளுக்கு 'மாலை மலர் டாட்காம்’ சார்பில்  இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்! #Bethlehem  #ChristmasinBethlehem  
    ×