என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- எங்கள் கட்சியில் தேர்தல் வந்தால் போட்டியிட வாய்ப்பு கேட்டு படையெடுக்கும் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள்.
- திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால் அந்த தொகுதி எம்.பி.யான திருநாவுக்கரசருக்கு இடமில்லை.
சென்னை:
தலைவர்களின் அழுத்தத்தால் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளரை முடிவு செய்ய முடியாமல் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
வேட்பு மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். ஆனால் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. பெயர் அறிவித்த பிறகுதான் மனுதாக்கலுக்கான ஏற்பாடுகளை வேட்பாளர் செய்ய வேண்டும். அதற்கான கால அவகாசம் மிகவும் குறைவாக இருக்கிறது.
இன்று கட்டாயம் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். இந்த இழுபறிக்கான காரணம் பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-
எங்கள் கட்சியில் தேர்தல் வந்தால் போட்டியிட வாய்ப்பு கேட்டு படையெடுக்கும் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் மாநில செல்வாக்கு மற்றும் டெல்லி செல்வாக்கை வைத்து எப்படியாவது முட்டி மோதி சீட் வாங்கி விடுவார்கள்.
இந்த தேர்தலில் திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால் அந்த தொகுதி எம்.பி.யான திருநாவுக்கரசருக்கு இடமில்லை. நெல்லை தொகுதியை எதிர்பார்த்தார். அதுவும் கிடைக்கவில்லை.
இப்போது இருப்பது மயிலாடுதுறை ஒரே தொகுதிதான். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார் மற்றும் மண்ணின் மைந்தரான மணிசங்கர அய்யர், பிரவீண் சக்கரவர்த்தி, சி.டி.மெய்யப்பன், தங்கபாலு அனைவரும் இந்த தொகுதிக்காக மல்லுக்கட்டுகிறார்கள். எல்லோரும் தவிர்க்க முடியாதவர்கள். டெல்லியிலும் செல்வாக்கு பெற்றவர்கள். தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதால் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது? யாரை தவிர்ப்பது என்று குழப்பத்தில் இருக்கிறார்கள். பேசாமல் குலுக்கல் முறையில் அறிவிக்கலாம் என்றார் நகைச்சுவையாக.
- நாம்தமிழர் கட்சியின் தென்சென்னை மாவட்ட வேட்பாளராக தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.
- நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி பற்றி விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
பாராளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
நாம்தமிழர் கட்சியின் தென்சென்னை மாவட்ட வேட்பாளராக தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தமிழ்ச்செல்வி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது அவர் தனது Audi A4 சொகுசு காரில் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் அந்த Audi A4 சொகுசு காருக்கு தமிழ்ச்செல்வி இன்சூரன்ஸ் கட்டவில்லை என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இன்சூரன்ஸ் இல்லாத Audi A4 சொகுசு காரில் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்த தென் சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி பற்றி விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
- சதர்ன் கிரவுன் அரங்கத்தில் பா.ம.க. நாளை நிகழ்ச்சி.
- ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள்.
சென்னை:
பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் க.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை தியாகராய நகரில் உள்ள ஜி.ஆர்.டி. விடுதியில் சதர்ன் கிரவுன் அரங்கத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தி.மு.க.வை பிளவுப்படுத்தி உருவான இயக்கம் ம.தி.மு.க. பல்வேறு கால கட்டங்களில் ஏற்பட்ட மனக்கசப்பை மறந்து மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளோம்.
- காங்கிரஸ் ஜெயித்த திருச்சி தொகுதியை ம.தி. மு.க.வுக்காக ஒதுக்கி கொடுத்துள்ளது மிகப்பெரிய விசயம்.
சென்னை:
திருச்சியில் ம.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் வைகோவின் மகன் துரை வைகோவை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பேசும்போது, பிரசாரத்திற்கு குறைந்த கால கட்டமே உள்ளதால் துரைவைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிட்டால் பிரசாரம் சுலபமாக இருக்கும். வெற்றி வாய்ப்பும் மிக பிரகாசமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் துரைவைகோ பேசுகையில், செத்தாலும் சொந்த சின்னத்தில்தான் போட்டியிடுவேன். பதவிக்காக வேறு சின்னத்தில் போட்டியிட விரும்பவில்லை என திடீரென ஆவேசப்பட்டு பேசினார்.
துரை வைகோ உணர்ச்சி வசப்பட்டு குரலை உயர்த்தி பேசிய தருணத்தில் அமைச்சர் கே.என்.நேரு செல்போனை நோண்டிய படி இருந்தார். ஒரு கட்டத்தில் துரை வைகோ அழத் தொடங்கியதும் அமைச்சர் கே.என்.நேரு அதை பொருட்படுத்தாமல் அருகில் இருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் ஏதோ கூறியபடி இருந்தார்.
துரை வைகோ பேச்சு எரிச்சலூட்டும் வகையில் இருந்ததால் மேடையில் இருந்தவர்கள் தர்மசங்கடத்து டன் ஒன்றும் பேசாமல் இருந்தனர். இந்த கூட்டம் முடிந்ததும் தி.மு.க. நிர்வாகி கள் பலர் அமைச்சர்களிடம் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். தி.மு.க.வை பிளவுப்படுத்தி உருவான இயக்கம் ம.தி.மு.க. பல்வேறு கால கட்டங்களில் ஏற்பட்ட மனக்கசப்பை மறந்து மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளோம்.
இந்த தருணத்தில் துரை வைகோ தி.மு.க.வினரின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் அவர் இஷ்டத்துக்கு பேசுவதா? என்று ஆதங்கப்பட்டனர். இந்த விசயத்தில் அமைச்சர் கே.என்.நேரு வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் அவரது முகபாவம் கடும் கோபத்தில் இருந்ததை காண முடிந்தது.
தொலைக்காட்சியில் துரை வைகோவின் ஆவேசம் மாறி மாறி காண்பிக்கப்பட்டதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு பலரும் இதை பார்த்தனர்.
திருச்சி தொகுதி தி.மு.க. வின் கோட்டையாக இருக்கும் சமயத்தில் தேவையில்லாமல் துரை வைகோ பேசியது இரு கட்சியினர் மத்தியிலும் கசப்புணர்வை ஏற்படுத்தி விடுமோ என கவலைப்பட்டார். இதனால் தனது கட்சிக்காரர்களை ம.தி.மு.க.வுடன் அனுசரித்து போகுமாறு அறிவுரை வழங்கி உள்ளார்.
கூட்டணிக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது. நமது எண்ணம் எல்லாம் வெற்றியை நோக்கிதான் இருக்க வேண்டும் என்று மூத்த நிர்வாகிகளிடம் கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
தி.மு.க.வை உடைத்து ம.தி.மு.க. வெளியேறிய சமயத்தில் எவ்வளவோ சோதனைகள் ஏற்பட்டது. இழப்புகள் ஏற்பட்டது. அதையெல்லாம் எதிர்கொண்டு தி.மு.க.வை கட்டிக்காத்தவர்கள் கலைஞரும், தளபதியும்தான்.
கால மாற்றத்தால் கசப்புணர்வுகளை மறந்து ம.தி. மு.க.வை சகோதர கட்சியாக அரவணைத்து கூட்டணியிலும் கழக தலைவர் தளபதி இடம்பெற செய்து உள்ளார். இந்த சூழ்நிலையில் தி.மு.க.வினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் துரைவைகோ பேசுவது தேவைதானா? என்பதை அவர் சிந்திக்க வேண்டும்.
காங்கிரஸ் ஜெயித்த திருச்சி தொகுதியை ம.தி. மு.க.வுக்காக ஒதுக்கி கொடுத்துள்ளது மிகப்பெரிய விசயம். அப்படி இருக்கும்போது செத்தாலும் பரவாயில்லை தனி சின்னம்தான் வேண்டும் என்று பேசினால் தி.மு.க. வினரின் மனது புண் படாதா? எனவே யாராக இருந்தாலும் யோசித்து பக்குவமாக பேச வேண்டும். அனைவரும் உழைத்தால்தான் வெற்றி பெற முடியும் இதுதான் உண்மை நிலை.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையில் துரை வைகோ, அவ்வப்போது அரசியலை விரும்பவில்லை என்று கூறுவது அவருடன் உள்ள நிர்வாகிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதாக கட்சிக்காரர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இந்த நிலையில்தான் துரை வைகோ வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு நிருபர்களிடம் பேசும்போது, தி.மு.க.-ம.தி.மு.க. தொண்டர்களிடையே எந்த மனக்கசப்பும் ஏற்படவில்லை. நான் பேசியது உணர்ச்சிகளின் வெளிப்பாடு. இது இயல்பானது என்று கூறி உள்ளார்.
- டி.ஆர். பாலு 3-வது முறையாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- ஆறு முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஒரு முறை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்துள்ளார்.
மக்களவை தேர்தலில் தமிழகத்திற்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது. நேற்று அனைத்து கட்சி வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்ய ஆர்வம் காட்டினர்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் 82 வயதாகும் டி.ஆர். பாலு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் இருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்யும்போது உறுதிமொழி எடுக்க வேண்டும். உறுதிமொழி வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் டி.ஆர். பாலு உறுதிமொழி எங்கிருக்கிறது என்பதை சிறிது நேரம் தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்தவர் உறுதிமொழி இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டினர். மேலும், தேர்தல் அதிகாரி உதவியாளரை அழைத்து உறுதிமொழி இருக்கும் இடத்தை தெரிவிக்குமாறு சைகை காட்டினர். பின்னர் சுதாரித்துக் கொண்ட டி.ஆர். பாலு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
கருணாநிதி காலத்தில் இருந்தே அரசியலில் இருக்கும் டி.ஆர். பாலு உறுதிமொழியை வாசிக்க திணறியது ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மேலும், இந்த வீடியோ இணைய தளத்தில் பகிரப்பட்டு, விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
டி.ஆர். பாலு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தன்னிடம் கையிருப்பாக ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் 1.08 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்து இருப்பதாகவும், 16 கோடி ரூபாய் அளவில் அசையா சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
டி.ஆர். பாலு 1996-ல் இருந்து 2004 வரை நான்கு முறை தென்சென்னை தொகுதியில் போடடியிட்டு வெற்றி பெற்றார். 2009-ல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2014-ல் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2019-ல் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1986 முதல் 1992 வரை மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். 1999 முதல் 2003 வரையிலும், 2004 முதல் 2009 வரையிலும் மத்திய மந்திரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சி போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
- தி.மு.க. சார்பில் கமல்ஹாசனுக்கு ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.
இந்த கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி புதிதாக சேர்ந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஒன்று அல்லது 2 இடங்கள் கமல் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே கூறப்பட்டு வந்தது.
அதற்கேற்ற வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாகவே இருந்து வந்தார். இதனால் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மூலமாக கமல் கட்சிக்கு குறிப்பிட்ட இடங்கள் கிடைக்கும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் காங்கிரஸ் கட்சியோ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒரு இடத்தைகூட கமல்ஹாசனுக்கு கொடுக்க முன்வரவில்லை. அதே நேரத்தில் மற்ற கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை விட்டு கொடுக்கவில்லை. இதனால் பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சி போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசும்போதே கமல்ஹாசனுக்கும் சேர்த்து தொகுதிகளை பேசி இருக்கலாம் என்றும், ஆனால் திட்டமிட்டே காங்கிரஸ் கட்சி கமல்ஹாசனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது என்பதே அரசியல் நிபுணர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
இப்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியே காரணம் என்கிற எண்ணம் அக்கட்சியினர் மத்தியில் பரவலாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் தி.மு.க. சார்பில் கமல்ஹாசனுக்கு ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீண்ட இழு பறிக்கு பிறகு கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துள்ளார்.
இதையடுத்து தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கமல்ஹாசனோ தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மறுத்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளை தவிர்த்து மற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் கமல்ஹாசனின் சுற்றுப் பயண விவரம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.
வருகிற 29-ந்தேதி கமல்ஹாசன் தனது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஈரோடு தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அன்று பிரசாரம் செய்யும் கமல்ஹாசன் மறுநாள் (30-ந்தேதி) சேலத்திலும் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பின்னர் ஏப்ரல் 2-ந்தேதி திருச்சியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்யும் கமல்ஹாசன் 3-ந்தேதி சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பின்னர் ஏப்ரல் 6-ந்தேதி கமல்ஹாசன் சென்னையில் பிரசாரம் செய்கிறார். அன்று ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னைக்குட்பட்ட பகுதிகளில் பேசும் அவர் மறுநாளும் (7-ந் தேதி) சென்னையில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளிலேயே பிரசாரம் செய்கிறார்.
இதன் பின்னர் 3 நாட்கள் கழித்து மதுரையில் 10-ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரை ஆதரித்து பேசும் கமல் 11-ந் தேதி தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு திரட்டுகிறார்.
ஏப்ரல் 14-ந்தேதி திருப்பூரிலும், 15-ந்தேதி கோவையிலும் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த 2 தொகுதிகளிலும் கம்யூனிஸ்டு வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்கிறார்.
இறுதி நாளான ஏப்ரல் 16-ந்தேதி பொள்ளாச்சியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசும் கமல்ஹாசன் அத்துடன் தனது பிரசாரத்தை முடிக்கிறார்.
பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு முடிவடைந்த பிறகு தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசினார்கள். தற்போது அவர்களது தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்யும் வகையில் கமல்ஹாசன் தனது சுற்றுபயண திட்டத்தை வடிவமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 11 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்யும் வகையில் அவரது சுற்றுப்பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்ய மறுத்திருப்பது கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
- தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தி வருவதில் உறுதியாக உள்ளோம்.
- சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக திகழ்கிறது.
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்.
* தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தி வருவதில் உறுதியாக உள்ளோம்.
* சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக திகழ்கிறது.
* தேர்தலின் போது பணப்பட்டுவாடாவை தடுப்பதில் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
* வாக்குப்பதிவு தினத்தில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என்று கூறினார்.
- மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதியிடம் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்.
- தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.
தி.மு.க. வேட்பாளராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தங்கையுமான கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் முதல் வீதிவீதியாக சென்று மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதியிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். த.மா.கா. சார்பில் விஜயசீலன் போட்டியிடுகிறார்.
- சப்-கலெக்டர் அலுவலக ஊழியர்கள் நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
- நாணயங்களுடன் வேட்பாளர் வந்ததால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி:
தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. நாளையுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது.
அரசியல் கட்சியின் வேட்பாளர்கள், சுயேட்சைகள் என பலரும் அந்தந்த பகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உடுமலையை சேர்ந்த பெஞ்சமின் பிரபாகரன் என்பவர் போட்டியிடுகிறார். அவர் நேற்று பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யாவிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
அப்போது அவர் டெபாசிட் தொகையான ரூ.25 ஆயிரத்தை 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்து நூதன முறையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவதில்லை. இந்த நாணயங்களை அனைவரும்வாங்க வேண்டும். இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நாணயங்களாக கொண்டு வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து சப்-கலெக்டர் அலுவலக ஊழியர்கள் நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். நாணயங்களுடன் வேட்பாளர் வந்ததால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- ராகுல்காந்தியை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் கம்யூனிஸ்டு வேட்பாளராக ஆனிராஜா களமிறக்கப்பட்டுள்ளார்.
- யாரும் எதிர்பார்க்காத வகையில் கேரள மாநில பா.ஜனதா தலைவர் சுரேந்திரன் களம் இறக்கப்பட்டு உள்ளார்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்று கேரள மாநிலம் வயநாடு. இங்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் களம் இறங்குகிறார். கடந்த முறை அமேதி மற்றும் வயநாட்டில் போட்டியிட்ட அவர், அமேதியில் தோல்வியடைந்தார். அதே நேரம் வயநாட்டில் வெற்றி பெற்றார். எனவே வருகிற தேர்தலிலும் அவர் வயநாட்டில் போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்தது.
இதனை தொடர்ந்து அவரது வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியினர் தற்போதே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல்காந்தி பாரத் ஜோடா யாத்திரை முடிந்ததும் வயநாடு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இதுவரை வரவில்லை. இருப்பினும் வேட்பு மனு தாக்கலுக்காக அவர் விரைவில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வருகையை பெரிய நிகழ்வாக மாற்ற காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கேரளாவில் 2-ம் கட்ட தேர்தலான ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
ராகுல்காந்தியை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் கம்யூனிஸ்டு வேட்பாளராக ஆனிராஜா களமிறக்கப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் கேரளாவில் காங்கிரசும் கம்யூனிஸ்டும் தனித்தனியாக எதிர்த்து களமிறங்குகின்றன. ஆனிராஜா ஏற்கனவே தொகுதி முழுவதும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் களம் இறங்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கேரள மாநில பா.ஜனதா தலைவர் சுரேந்திரன் களம் இறக்கப்பட்டு உள்ளார்.
அவர் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஆரம்பத்திலேயே கூறி வந்த நிலையில் திடீரென வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், வயநாட்டில் ராகுலை வீழ்த்த வலுவான வேட்பாளரை களமிறக்க கட்சி திட்டமிட்டதால், தன்னை போட்டியிட வலியுறுத்தியதாகவும் அதனை ஏற்று களம் இறங்குவதாகவும் தெரிவித்தார். கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு என்ன முடிவு கிடைத்ததோ, அது இந்த தேர்தலில் வயநாட்டிலும் கிடைக்கும். இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்கள் ஏன் ஒரே தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்று மக்கள் தற்போதே கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர். இது வாக்குப்பதிவின் போது நிச்சயம் வெளிப்படும். இன்று மாலை வயநாட்டில் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்க உள்ளேன் என்றும் அவர் கூறினார்.
கேரளாவில் 3 முக்கிய தலைவர்கள் களம் இறங்கி உள்ளதால் வயநாடு தொகுதி எதிர்பார்க்கப்படும் முக்கிய வி.ஐ.பி. தொகுதியாக மாறி உள்ளது.
- விருதுநகர் மக்களவை தொகுதியில் கௌசிக் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
- நாம் தமிழர் கட்சி சமாளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து இருந்தார். அந்த வகையில் விருதுநகர் மக்களவை தொகுதியில் கௌசிக் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் விருதுநகர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் கௌசிக் நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் நடத்தும் அலுவலகம் சென்றார் அப்போது உறுதிமொழி வாசிக்க அறிவுத்தப்பட்டது.
இந்நிலையில் வேட்பாளர் கௌசிக்கிற்கு தமிழ் படிக்கத் தெரியாததால் உறுதிமொழி முழுவதையும் விருதுநகர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் படிக்க, தொடர்ந்து படித்தார் நாம் தமிழர் வேட்பாளர் கௌசிக்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி கூறுகையில், வேட்பாளர் கௌசிக் ஓமன் நாட்டில் படித்ததால் தமிழ் படிக்கத் தெரியாது என விளக்கம் அறித்துள்ளனர்.
ஆனால், தமிழ் படிக்கத் தெரியாதவரை வேட்பாளராக்கி, தற்போது அதனை நாம் தமிழர் கட்சி சமாளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
- வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர்.
- ஆற்றல் அசோக் குமார் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.47 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஜனநாயக திருவிழாவான பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பிரசாரங்கள் களைகட்டியுள்ளன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா என 3 கட்சிகளின் தலைமையில் மும்முனை போட்டி உருவாகி உள்ளது. இதுதவிர நாம் தமிழர் கட்சி தனியாக களம் காண்கிறது.
தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரங்களால் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கி விட்டது.
இதற்கிடையே வேட்பு மனுதாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் 39 தொகுதியில் 326 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர்.
அதன்படி ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமாரின் சொத்து மதிப்பு ரூ.583 கோடி என தெரிய வந்துள்ளது. வங்கி கணக்கில் சுமார் ரூ.7 கோடி இருப்பதாகவும் வேட்பு மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.47 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றல் அசோக் குமாரிடம் 10.1 கிலோ தங்க நகையும், மனைவியிடம் 10.6 கிலோ தங்க நகையும் உள்ளது. இருவர் பெயரிலும் வீடுகள், அலுவலகங்கள், காலி இடங்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுவரை 412 ஆண் வேட்பாளர்கள், 67 பெண் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.






