search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    துரை வைகோ மீது தி.மு.க.வினர் கடும் அதிருப்தி- அரசியலை விரும்பவில்லை என்று தொடர்ந்து சொல்வதால் சர்ச்சை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    துரை வைகோ மீது தி.மு.க.வினர் கடும் அதிருப்தி- "அரசியலை விரும்பவில்லை" என்று தொடர்ந்து சொல்வதால் சர்ச்சை

    • தி.மு.க.வை பிளவுப்படுத்தி உருவான இயக்கம் ம.தி.மு.க. பல்வேறு கால கட்டங்களில் ஏற்பட்ட மனக்கசப்பை மறந்து மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளோம்.
    • காங்கிரஸ் ஜெயித்த திருச்சி தொகுதியை ம.தி. மு.க.வுக்காக ஒதுக்கி கொடுத்துள்ளது மிகப்பெரிய விசயம்.

    சென்னை:

    திருச்சியில் ம.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் வைகோவின் மகன் துரை வைகோவை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

    அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பேசும்போது, பிரசாரத்திற்கு குறைந்த கால கட்டமே உள்ளதால் துரைவைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிட்டால் பிரசாரம் சுலபமாக இருக்கும். வெற்றி வாய்ப்பும் மிக பிரகாசமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் துரைவைகோ பேசுகையில், செத்தாலும் சொந்த சின்னத்தில்தான் போட்டியிடுவேன். பதவிக்காக வேறு சின்னத்தில் போட்டியிட விரும்பவில்லை என திடீரென ஆவேசப்பட்டு பேசினார்.

    துரை வைகோ உணர்ச்சி வசப்பட்டு குரலை உயர்த்தி பேசிய தருணத்தில் அமைச்சர் கே.என்.நேரு செல்போனை நோண்டிய படி இருந்தார். ஒரு கட்டத்தில் துரை வைகோ அழத் தொடங்கியதும் அமைச்சர் கே.என்.நேரு அதை பொருட்படுத்தாமல் அருகில் இருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் ஏதோ கூறியபடி இருந்தார்.

    துரை வைகோ பேச்சு எரிச்சலூட்டும் வகையில் இருந்ததால் மேடையில் இருந்தவர்கள் தர்மசங்கடத்து டன் ஒன்றும் பேசாமல் இருந்தனர். இந்த கூட்டம் முடிந்ததும் தி.மு.க. நிர்வாகி கள் பலர் அமைச்சர்களிடம் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். தி.மு.க.வை பிளவுப்படுத்தி உருவான இயக்கம் ம.தி.மு.க. பல்வேறு கால கட்டங்களில் ஏற்பட்ட மனக்கசப்பை மறந்து மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளோம்.

    இந்த தருணத்தில் துரை வைகோ தி.மு.க.வினரின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் அவர் இஷ்டத்துக்கு பேசுவதா? என்று ஆதங்கப்பட்டனர். இந்த விசயத்தில் அமைச்சர் கே.என்.நேரு வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் அவரது முகபாவம் கடும் கோபத்தில் இருந்ததை காண முடிந்தது.

    தொலைக்காட்சியில் துரை வைகோவின் ஆவேசம் மாறி மாறி காண்பிக்கப்பட்டதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு பலரும் இதை பார்த்தனர்.

    திருச்சி தொகுதி தி.மு.க. வின் கோட்டையாக இருக்கும் சமயத்தில் தேவையில்லாமல் துரை வைகோ பேசியது இரு கட்சியினர் மத்தியிலும் கசப்புணர்வை ஏற்படுத்தி விடுமோ என கவலைப்பட்டார். இதனால் தனது கட்சிக்காரர்களை ம.தி.மு.க.வுடன் அனுசரித்து போகுமாறு அறிவுரை வழங்கி உள்ளார்.

    கூட்டணிக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது. நமது எண்ணம் எல்லாம் வெற்றியை நோக்கிதான் இருக்க வேண்டும் என்று மூத்த நிர்வாகிகளிடம் கூறியதாக தெரிகிறது.

    இதுகுறித்து தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    தி.மு.க.வை உடைத்து ம.தி.மு.க. வெளியேறிய சமயத்தில் எவ்வளவோ சோதனைகள் ஏற்பட்டது. இழப்புகள் ஏற்பட்டது. அதையெல்லாம் எதிர்கொண்டு தி.மு.க.வை கட்டிக்காத்தவர்கள் கலைஞரும், தளபதியும்தான்.

    கால மாற்றத்தால் கசப்புணர்வுகளை மறந்து ம.தி. மு.க.வை சகோதர கட்சியாக அரவணைத்து கூட்டணியிலும் கழக தலைவர் தளபதி இடம்பெற செய்து உள்ளார். இந்த சூழ்நிலையில் தி.மு.க.வினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் துரைவைகோ பேசுவது தேவைதானா? என்பதை அவர் சிந்திக்க வேண்டும்.

    காங்கிரஸ் ஜெயித்த திருச்சி தொகுதியை ம.தி. மு.க.வுக்காக ஒதுக்கி கொடுத்துள்ளது மிகப்பெரிய விசயம். அப்படி இருக்கும்போது செத்தாலும் பரவாயில்லை தனி சின்னம்தான் வேண்டும் என்று பேசினால் தி.மு.க. வினரின் மனது புண் படாதா? எனவே யாராக இருந்தாலும் யோசித்து பக்குவமாக பேச வேண்டும். அனைவரும் உழைத்தால்தான் வெற்றி பெற முடியும் இதுதான் உண்மை நிலை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கிடையில் துரை வைகோ, அவ்வப்போது அரசியலை விரும்பவில்லை என்று கூறுவது அவருடன் உள்ள நிர்வாகிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதாக கட்சிக்காரர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில்தான் துரை வைகோ வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு நிருபர்களிடம் பேசும்போது, தி.மு.க.-ம.தி.மு.க. தொண்டர்களிடையே எந்த மனக்கசப்பும் ஏற்படவில்லை. நான் பேசியது உணர்ச்சிகளின் வெளிப்பாடு. இது இயல்பானது என்று கூறி உள்ளார்.

    Next Story
    ×