என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் பொய்யின் அடிப்படையில் ஆட்சி நடத்துகிறார்கள்.
    • பிரதமர் மோடி பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தார்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் மந்திரி சிவராஜ் தண்டகி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக உறுதி அளித்தார். ஆனால் அவர் அதை கொடுக்கவில்லை. இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும். 10 ஆண்டுகளில் 20 கோடி வேலை வாய்ப்புகளை பா.ஜ.க. அரசு வழங்க தவறியதால் பிரதமரை புகழ்ந்து மோடி, மோடி என்று கோஷமிடும் அவரது இளம் ஆதரவாளர்களை கன்னத்தில் அறைய வேண்டும்.


    கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் பொய்யின் அடிப்படையில் ஆட்சி நடத்துகிறார்கள். மேலும் அவர்கள் இன்னும் 5 ஆண்டுகளுக்கு முட்டாள் ஆக்கலாம் என்று நினைக்கிறார்கள். இந்தியாவில் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். அவை எங்கே உள்ளது? ஒரு பெயரை கூறுங்கள்.

    பிரதமர் மோடி பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தார். அவர் ஒரு புத்திசாலி. நன்றாக உடை அணிகிறார். புத்திசாலித்தனமாக பேசுகிறார். மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். தேர்தலில் ஓட்டு கேட்க அவர்கள் வெட்கப்பட வேண்டும். ஒரு வளர்ச்சி பணியை கூட செய்ய திறமையற்ற இவர்கள் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மோடி, மோடி என கோஷம் எழுப்புபவர்களை கன்னத்தில் அறைய வேண்டும் என்ற சிவராஜ் தண்டகியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    • தென் மாநிலங்களில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா தற்போது உறுதியாக உள்ளது.
    • வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து, பா.ஜனதா மாநில தலைவர் சுரேந்திரன் களம் இறக்கப்பட்டுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    தென் மாநிலங்களில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா தற்போது உறுதியாக உள்ளது. இதற்காக வேட்பாளர்களை தேர்வு செய்து தீவிர களப்பணியாற்றியும் வருகிறது.

    பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடியும், தமிழகம் மற்றும் கேரளாவிற்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ரோடு ஷோவிலும் பங்கேற்றார். 

    இந்த நிலையில் அவர் மீண்டும் கேரளா வர இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து, பா.ஜனதா மாநில தலைவர் சுரேந்திரன் களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரதமர் மோடி விரைவில் கேரளா வர இருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் கட்சியின் தேசிய தலைவர் நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ் நாத்சிங் உள்ளிட்டோரும் பிரசாரத்திற்காக கேரளா வர உள்ளதால் பாரதிய ஜனதா தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    • ஆரணி தொகுதி விஷ்ணு பிரசாத்திற்கு கிடைக்காததால் அவர் கடலூர் தொகுதியை பெற்றுள்ளார்.
    • பா.ம.க. மற்றும் த.மா.கா. இடையே தொகுதி உடன்பாடு செய்வதில் சிக்கல் நீடித்தது.

    சென்னை:

    தேர்தல் கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததில் ஏற்பட்ட ருசிகர சம்பவம் வெளியாகியுள்ளது.

    இன்னும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட மயிலாடுதுறை, திருநெல்வேலி தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வு முடிந்த பட்டியல் இல்லை. இதுதொடர்பாக விசாரித்த போது பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு கடலூர் தொகுதியை ஒதுக்கிய நிலையில் அந்த தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்குவதாக பேசி இருக்கிறார்கள். அந்த தொகுதியில் பா.ம.க.வின் நட்சத்திர வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை களமிறக்க முடிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஆரணி தொகுதி விஷ்ணு பிரசாத்திற்கு கிடைக்காததால் அவர் கடலூர் தொகுதியை பெற்றுள்ளார்.

    விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் வேட்பாளராக இருந்தாலும் பா.ம.க. தலைவர் அன்புமணியின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    எனவே அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த பா.ம.க. தயங்கியது. அதனால் தான் கடைசி நேரத்தில் பா.ம.க. மயிலாடுதுறை தொகுதியை கேட்டது.

    அந்த தொகுதி த.மா.கா.விற்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால், பா.ம.க. மற்றும் த.மா.கா. இடையே தொகுதி உடன்பாடு செய்வதில் சிக்கல் நீடித்தது. கடைசியில் மயிலாடுதுறை தொகுதி பா.ம.க.விற்கு ஒதுக்கப்பட்டது. இந்த பிரச்சினைகளால் பா.ம.க. சார்பில் ஏ.கே.மூர்த்தி போட்டியிட முடியாமல் போனது.

    ஏற்கனவே மற்ற தொகுதிகளுக்கு தொகுதி முடிவாகி போனதால் கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

    • திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • வேட்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.

     திமுக சார்பில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்.

    நல்லா இருக்கீங்களா? உங்கள் எழுச்சி ஆரவாரம் எனக்கு உற்சாகத்தை தருகிறது. ஏப்ரல் 19-ந் தேதி எப்போது வரும் என நீங்கள் காத்திருக்கிறீர்கள். அதிலும் தாய்மார்கள் முடிவெடுத்துவிட்டால் யார் நினைத்தாலும் அதை மாற்ற முடியாது.

    முதல்அமைச்சர் மு. க.ஸ்டாலின் ஆட்சியின் பயன்கள் பெண்களுக்கு தான் நன்றாக தெரியும். கட்டணம் இல்லாத இலவச பஸ்களை இப்போது பெண்கள் செல்லமாக ஸ்டாலின் பஸ் என சொல்கிறார்கள். ஸ்டாலின் பஸ் வருகிறது என்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

    தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை பெற்றோர் மனமுவந்து பாராட்டி தைரியமா வயக்காட்டு வேலைக்கு போறாங்க. அதே போல் 1.65 கோடி பெண்களுக்கும் நிச்சயம் மகளிர் உரிமை தொகை கிடைக்கும்.


    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை என்று சொல்லி நானாவது ஊருக்கு ஊர் செங்கல்லை தூக்கி காட்டுகிறேன். ஆனால் 2019 ஜனவரி 27-ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டிய போது மோடியுடன் நின்ற பழனிசாமி ஆட்சி முடிகிற வரைக்கும் அதே மாதிரி தானே பல்லை காட்டி நின்றார்.

    புயல் மழை வெள்ளத்துக்கு தமிழகம் வராத பிரதமர் தேர்தல் ஜுரத்தில் இப்போது தமிழகத்தில் வலம் வருகிறார். பா.ஜ.க. ஆட்சியால் அதானி கொடிதான் பறக்குது. இதற்கெல்லாம் ஏப்ரல் 19 தான் பதில் சொல்லும்.

    இந்தியா கூட்டணி தான் ஆட்சிக்கு வரப்போகுது.பாஜகவை நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • பொதுமக்கள், வியாபாரிகளிடம் அங்கு நின்ற கனிமொழி எம்.பி.யை காண்பித்து இவர் யார் என்று தெரிகிறதா என்று கேட்டார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாருக்கு வாக்களிப்பீர்கள் என கேட்டபோது தி.மு.க.விற்கு என பதில் கூறினர்.

    தூத்துக்குடி:

    பாராளுமன்ற தேர்தலை யொட்டி தி.மு.க. மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    நேற்று நெல்லை, கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி சென்றார். நேற்று இரவு சத்யா ரிசார்ட்டில் ஓய்வெடுத்தார்.

    வழக்கமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் அதிகாலையில் அங்குள்ள சாலைகளில் நடைபயிற்சி செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் வாக்கு சேகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று காலை 7.35 மணிக்கு ரிசார்ட்டில் இருந்து புறப்பட்டார்.

    தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே உள்ள ராஜாஜி பூங்காவையொட்டிய சாலைகள் வழியாக சென்று தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். 

    தொடர்ந்து பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே உள்ள காய்கறி மார்க்கெட்டுக்குள் சென்றார். அப்போது ஒவ்வொரு கடைகளாக சென்று வியாபாரிகளிடம் நலம் விசாரித்து தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். மேலும் காய்கறி வாங்க வந்து பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கைகளை கேட்டு வாக்கு சேகரித்தார்.

    அப்போது பொதுமக்கள், வியாபாரிகளிடம் அங்கு நின்ற கனிமொழி எம்.பி.யை காண்பித்து இவர் யார் என்று தெரிகிறதா என்று கேட்டார். அதற்கு அவர்கள் கனிமொழி எம்.பி. எனவும், தொகுதி வளர்ச்சிக்கு நன்றாக செயல்படுவதாகவும் கூறினர்.

    அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாருக்கு வாக்களிப்பீர்கள் என கேட்டபோது தி.மு.க.விற்கு என பதில் கூறினர். அப்போது மறக்காமல் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.க்கு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து அவர் நடைபயணமாக மார்க்கெட் முழுவதும் சென்று பின்னர் அருகில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு சென்றார். அங்கு நின்றிருந்த இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள் என ஏராளமானோர் முதலமைச்சருக்கு கை கொடுத்தனர். அப்போது அவர்களிடம் எப்படி இருக்கிறீர்கள் என நலம் விசாரித்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்தவுடன் ஏராளமான பொதுமக்களும், வாலிபர்களும், இளம்பெண்களும் ஆர்வமுடன் தங்களது செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் பொறுமையுடனும், சிரித்த முகத்துடனும் நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்பி எடுத்துக்கொண்டார்.

    அப்போது கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தி.மு.க.வினர் உடன் இருந்தனர். 

    • எடப்பாடி பழனிசாமியின் வருகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    • இன்னிசை கச்சேரி, செண்டை மேளம் முழங்கி எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அ.தி.மு.க.-கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

    இந்நிலையில் அ.தி.மு.க. மற்றும் ஆதரவு கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் திருச்சியில் பிரசாரத்தை தொடங்கினார்.

    அதன்படி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணியை ஆதரித்து இன்று மாலை தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியில் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு இன்று காலை 11.30 மணிக்கு வந்து சேருகிறார். தொடர்ந்து அங்குள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்கும் எடப்பாடி பழனிசாமி, மாலை 4 மணிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நெல்லை வரும் எடப்பாடி பழனிசாமி, டவுன் வாகையடி முனையில் வைத்து நெல்லை பாராளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் ஜான்சி ராணிக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்னர் காரில் கன்னியாகுமரி புறப்படுகிறார்.

    எடப்பாடி பழனிசாமியின் வருகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். டவுன் வாகையடி முனையில் நடைபெறும் கூட்டத்திற்காக மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஏற்பாட்டில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இன்னிசை கச்சேரி, செண்டை மேளம் முழங்கி எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது வருகையையொட்டி டவுன் ரதவீதியில் மாலையில் இருந்து இரவு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரதவீதிகளில் அ.தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது.

    • அனைத்து தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் சக்திக்கேற்ப சொந்த பணத்தை செலவு செய்து வருகின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த தேர்தலில் தி.மு.க. 100 ஓட்டுக்கு ஒருவர் வீதம் ஆட்களை நியமித்து பணியாற்றி யார்-யார் எந்த கட்சியை சார்ந்தவர் என பட்டியல் எடுத்து அதற்கேற்ப வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு தெருவிலும் யார் யார் உள்ளூர்காரர் யார் வெளியூர்காரர் என எங்கு ஓட்டு போடுவார்கள் என்பதை அறிந்து வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பாராளுமன்றத் தேர்தலில் எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அதற்கு பொறுப்பானவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதால் ஒவ்வொருவரும் சொந்த பணத்தை செலவு செய்து கலக்கத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அரவணைத்து செல்ல வேண்டும் என்றும் கூடுதல் வாக்கு பெறும் பொறுப்பு மாவட்ட பொறுப்பு அமைச்சர்களையும் மாவட்டச் செயலாளர்களையும் சேரும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி இருந்ததுடன், அனைத்து தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இதன் காரணமாக உள்ளாட்சி பொறுப்பில் உள்ள பகுதி கழக, ஒன்றிய, நகர பேரூர் சட்டமன்ற கழக செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் சக்திக்கேற்ப சொந்த பணத்தை செலவு செய்து வருகின்றனர். முக்கியமான பணிகளுக்கு மட்டுமே வேட்பாளர் பணம் கொடுப்பதால் மற்ற தேர்தல் செலவுகளுக்கு அந்தந்த உள்ளூர் நிர்வாகிகளே பணம் செலவு செய்வதை காண முடிகிறது.

    • நான் அப்படி பேசியது உணர்வுகள், உணர்ச்சிகளின் வெளிப்பாடு. மனிதர்களிடம் இது இயல்பானது.
    • தேர்தல் கமிஷன் பா.ஜனதா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ வேட்புமனு தாக்கல் செய்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னால் முடிந்தவரை திருச்சி தொகுதியில் மக்கள் பணியாற்றுவேன். தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் சகோதரர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் ரகுபதி மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் ஒத்துழைப்புடன், வாழ்த்துகளுடன் எனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளேன்.

    நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நடந்த சம்பவம் தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. தொண்டர்கள் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தியதாக சொல்கிறீர்கள். அப்படி எந்த மனக்கசப்பும் ஏற்படவில்லை.

    அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நான் அப்படி பேசியது உணர்வுகள், உணர்ச்சிகளின் வெளிப்பாடு. மனிதர்களிடம் இது இயல்பானது.

    இங்கு என்னுடன் வந்திருக்கும் தி.மு.க. நிர்வாகிகளை பார்த்தாலே உங்களுக்கு அது தெரியும். எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுடன் நான் பேசவில்லை.

    மனு தாக்கல் செய்ய வருவதற்கு முன்னர் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.

    அப்போது வாசல் வரை வந்து என்னை வழி அனுப்பினார்.

    என்னை அவர் தனது மகனாக பாவித்து வெற்றி பெற்று நல்லபடியாக வரவேண்டும் என வாழ்த்தினார்.

    தேர்தல் கமிஷன் பா.ஜனதா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் எங்கள் கட்சிக்கு (ம.தி.மு.க.) முறையான சின்னம் ஒதுக்கப்படவில்லை.

    இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பம்பரம் தவிர்த்து வேறு சின்னங்களும் கொடுத்துள்ளோம். நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார்.
    • தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க. வேட்பாளராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தங்கையுமான கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் முதல் வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதனை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதியிடம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    இன்று மாலை 5 மணிக்கு எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரையில் கனிமொழி, ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோரை ஆதரித்து முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். இரவில் தூத்துக்குடி சத்யா ஓட்டலில் ஓய்வெடுத்தார். சிந்தலக்கரை பிரசாரத்தை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் புறப்பட்டு செல்கிறார்.

    இதேபோன்று தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார்.

    அவரை ஆதரித்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    ஒரே நாளில் தூத்துக்குடி தொகுதியில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதால் தூத்துக்குடி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அதேபோன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறல்கள் ஏதேனும் நடக்கிறதா? என்று கண்காணித்து வருகிறார்கள்.

    • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வெறுப்பு விதைகளை தூவி விடுவார்கள்.
    • பாஜக ஓரவஞ்சனை அரசாக செயல்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது, திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களான நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விளவங்கோடு வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

    கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். உங்கள் வாக்கு தான் ஜனவாயகத்தை காக்க உள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அமளியான இந்தியாவாக மாறிவிடும்.

    மணிப்பூர் மாநில மக்கள் அகதிகள் போல் உள்ளனர்.

    பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வெறுப்பு விதைகளை தூவி விடுவார்கள். புயல், வெள்ள பாதிப்பின்போது வராத பிரதமர், தற்போது வருவது ஏன்? அதற்கான நிவாரண நிதியை கூட மத்திய அரசு வழங்கவில்லை.

    புயல், வெள்ள பாதிப்பின்போது மக்களோடு மக்களாய் அமைச்சர்கள் இருந்தனர்.

    பாஜக ஓரவஞ்சனை அரசாக செயல்பட்டு வருகிறது. பாஜகவின் தோல்வி உறுதியாகிவிட்டது. வெள்ள நிவாரண நிதி குறித்து மத்திய நிதியமைச்சர் விமர்சனம் செய்கிறார்.

    நீதிமன்றத்தை நாடி வெள்ள நிவாரணத்தை பெறுவோம்.

    ஆட்சி, பதவி உள்ளது என்பதற்காக எதையும் பேச கூடாது. பாஜகவிற்கு, தமிழர்கள் மீது ஏன் இத்தனை கோபம். ஆட்சி, பதவி உள்ளது என்பதற்காக எதையும் பேச கூடாது.

    தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பு திட்டம் என்ன ? பட்டியலிட்டு பிரதமர் பேச வேண்டும்.

    எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. பூதக்கண்ணாடியை வைத்து தேடினாலும், எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை.

    தமிழக மீனவர்கள் கைதை, மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன ?

    எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சிப்பதையே, பிரதமர் செய்து வருகிறார். தமிழக மீனவர்கள் குறி்தது பலமுறை பாராளுமன்றத்தில் பேசியுள்ளோம். பாஜகவுக்கு எதிராக ஈபிஎஸ் ஒரு வார்த்தையாவது பேசினாரா?

    இந்தியா சிறப்பாக இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். பாஜகவுடன், அதிமுக மறைமுக கூட்டணியில் உள்ளது.

    திராவிட மாடல் அரசின் திட்டங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் வாய்ப்பு இந்த தேர்தல். ஒட்டுமொத்த இந்தியாவுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கையை வழங்கி உள்ளோம்.

    பாஜகவிற்கு அளிக்கும் வாக்கு, தமிழகத்திற்கு வைக்கும் வேட்டு. தமிழகத்திற்கும், தமிழ் இனத்திற்கும் எதிரான கட்சி பாஜக.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்களை பெற வேண்டும் எனப் பிரதமர் மோடி ஏன் கூறினார்
    • இந்துக்களை ஒடுக்கும் விதிகள் மற்றும் சட்டங்களை திருத்த அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டும்

    6 முறை எம்.பி.யாக இருந்த கர்நாடகாவைச் சேர்ந்த அனந்த்குமார் ஹெக்டேவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க பாஜக மறுத்துள்ளது.

    மார்ச் 9-ம் தேதி கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தின் சித்தாபுராவில் உள்ள ஹலகேரி என்ற கிராமத்தில், முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க எம்.பியுமான அனந்த் குமார் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

    அப்போது, "வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும். இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்களை பெற வேண்டும் எனப் பிரதமர் மோடி ஏன் கூறினார். தற்போது மக்களவையில் 2/3 பெரும்பான்மையாக நாம்தான் இருக்கிறோம். ஆனால், மாநிலங்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. மாநில அரசுகளிலும் நமக்குத் தேவையான பெரும்பான்மை இல்லை.

    எனவே, அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மாநில அரசுகளிலும் கணிசமான பெரும்பான்மையைப் பெறுவது அவசியம். இந்துக்களை ஒடுக்கும் விதிகள் மற்றும் சட்டங்களை திருத்த அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டும். அதற்கு, இந்த பெரும்பான்மை போதாது." எனப் பேசினார்.

    அரசியல் சாசனம் பற்றிய அவரது கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் ஏற்கனவே வெளியிட்டது.
    • மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    இதில், ஏற்கனவே தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

    அதன்படி, திருவள்ளூர் (தனி)- சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி- கே. கோபிநாத், கரூர்- ஜோதிமணி, கடலூர்- எம்.கே. விஷ்னு பிரசாத், சிவகங்கை- கார்த்தி சிதம்பரம், விருதுநகர்- மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரி- விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    ஆனால், திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாமல் இருந்தது.

    அதேபோல் புதுச்சேரிக்கும் இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. 

    இந்நிலையில், தமிழக காங்கிரஸ் இன்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுகிறார்.

    விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிடுகிறார். மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    ×