என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • தென்சென்னை பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ்செல்வம், பால்கனகராஜ் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
    • சென்னையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் மோடி 2 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார்.

    வருகிற 9-ந்தேதி (செவ்வாய்) மகாராஷ்டிர மாநிலத்தில் பிரசாரம் செய்யும் பிரதமர் மாலையில் கோண்டியாவில் இருந்து விமானப் படை விமானம் மூலம் சென்னை வருகிறார்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு கிண்டி, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் வழியாக ஜி.என்.செட்டி ரோடு வழியாக பனகல் பார்க் வருகிறார்

    ஜி.என். செட்டி ரோட்டில் வேலூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத் தின் முன்பு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் காரில் பனகல் பார்க் சென்றடைகிறார். அங்கிருந்து ரோடு ஷோ தொடங்குகிறது. பாண்டிபஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை ரோடு ஷோ நடக்கிறது.

    தென்சென்னை பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ்செல்வம் (மத்திய சென்னை), பால்கனகராஜ் (வடசென்னை) ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    ரோடு ஷோ நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் மோடி கிண்டி கவர்னர் மாளிகையில் இரவு தங்குகிறார். மறுநாள் காலையில் சென்னை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர், செல்கிறார். காலை 10.30 மணிக்கு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் 11.50 மணிக்கு சென்னை வருகிறார். சென்னையில் இருந்து விமானப்படை விமானம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு செல்கிறார். அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமர் மோடி நீலகிரி தொகுதி பா.ஜனதா வேட்பாளரான மத்திய மந்திரி எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    நிகழ்ச்சியை முடித்துவிட்டு கோவை திரும்பும் பிரதமர் மோடி விமானப்படை விமானம் மூலம் மகாராஷ்டிர மாநிலம் செல்கிறார்.

    சென்னையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார். பனகல் பூங்காவில் இருந்து தேனாம்பேட்டை சிக்னல் வரை பார்வையிட்டு வரவேற்பு ஏற்பாடுகள், பொதுமக்கள் திரளும் இடங்களில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பற்றி கட்சியினருடன் ஆலோசித்தார்.

    பிரதமரின் வருகை, சுற்றுப்பயணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை, வேலூர், நீலகிரி மாவட்ட நிர்வாகங்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

    • கச்சத்தீவு பற்றி பேசும் முழு உரிமை அ.தி.மு.க.வுக்குத்தான் உண்டு.
    • மீனவர்களின் உரிமையைப் பெற்றுக்கொடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா. ஜெயபெருமாள் மண்டபம் கேம்ப் மற்றும் பாம்பன் ஆகிய மீனவ கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது வழியெங்கும் பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வாழ்த்தினர். மக்கள் மத்தியில் வேட்பாளர் பா.ஜெயபெருமாள் பேசியதாவது:-

    நான் சாதாரன விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனது பையனுக்கு ராமேஸ்வரத்தில் பெண் எடுத்துள்ளேன். நான் அடிக்கடி ராமேஸ்வரத்துக்கு வந்து செல்கிறேன். மீனவர்களின் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். மீனவ கிராமங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மேம்படுத்தியது அ.தி.மு.க. ஆட்சிதான். கச்சத்தீவு பற்றி பேசும் முழு உரிமை அ.தி.மு.க.வுக்குத்தான் உண்டு. கச்சத்தீவை தாரைவார்த்தவர்களே கச்சத்தீவு குறித்து பிதற்றுகிறார்கள். மீனவர்களின் உரிமையைப் பெற்றுக்கொடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன்.

    நான் உங்களில் ஒருவன். மீனவர் நலனில் அக்கரை உள்ளவன். இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என வாக்குகள் சேகரித்தார். வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, மணிகண்டன், தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.பி. எம்.எஸ். நிறைகுளத்தான், எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கே.சி.ஆணிமுத்து, மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் சசிவணன், திருவாடனை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆசை ராமநாதன், வடக்குஒன்றிய செயலாளர் ஏ.ஆண்டவர், தெற்கு ஒன்றிய செயலாளர் சி.இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் செ.நாகராஜன் ராஜா மற்றும் தே.மு.தி.க., எஸ். டி.பி.ஐ., புதிய தமிழகம், மருது சேனா நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மக்களுக்கான குரலாக பாராளுமன்றத்தில் ஒலிப்பதுதான் எங்களுக்கு முக்கியம்.
    • இந்தியாவிலேயே பெரிய ஊழல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தான்.

    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்கப்போகிறது என்று மு.க.ஸ்டாலின் சொல்லி வருகிறார். இவர்கள் கூட்டணியில் இதுவரை யார் பிரதமர் என்று கூறவில்லை. கூட்டணியிலேயே ஒற்றுமையாக இல்லாதபோது, இவர்கள் எப்படி பிரதமரை தேர்வு செய்வார்கள்.

    மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் சேரவில்லை என்றால் அந்த கூட்டணி நன்றாக இருந்திருக்கும். அவர் அந்த கூட்டணியில் சேர்ந்ததால் ஒவ்வொருவராக வெளியேறிவிட்டனர். அந்த கூட்டணி வலுவாக இருப்பதுபோல் மக்களிடம் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். ஆனால் தமிழகத்தில் இந்தியா கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. டெபாசிட் வாங்காது.

    நாம் பா.ஜனதா கட்சியுடனான கூட்டணியில் இருந்து வெளியேறியது பொறுக்காமல் அந்த கட்சியுடன் அ.தி.மு.க. கள்ளக்கூட்டணி அமைத்துள்ளது என்று அவர் விமர்சிக்கிறார். எங்களுக்கு ஆட்சி அதிகாரம் முக்கியம் இல்லை. மக்கள் தான் எங்களுக்கு முக்கியம். மக்களுக்கான குரலாக பாராளுமன்றத்தில் ஒலிப்பதுதான் எங்களுக்கு முக்கியம்.

    தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அது கட்சி கிடையாது. இந்த தேர்தலில் தி.மு.க. என்ற தீய சக்தியை ஒழிக்க வேண்டும். தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

    10 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த நாம் (அ.தி.மு.க.) பல எண்ணற்ற திட்டங்களை மக்களுக்கு கொடுத்துள்ளோம். 14 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்றிருந்த தி.மு.க. தமிழகத்துக்கு என்ன செய்தது. 3 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த மு.க.ஸ்டாலின் 3½ லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் 3 ஆண்டு காலத்தில் தமிழகத்துக்கு மு.க.ஸ்டாலின் ஒன்றும் செய்யவில்லை.

    இந்த 3 ஆண்டு காலத்தில் தமிழகத்துக்கு அவர் என்ன செய்தார் என்று கூறமுடியுமா? அது முடியாததால் தான், எதை எதையோ கூறி மக்களை திசைதிருப்பி வருகிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி, தி.மு.க. ஆட்சி மட்டும்தான். இந்தியாவிலேயே பெரிய ஊழல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தான்.

    அ.தி.மு.க. அரசு கொண்டுவந்த தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் போன்ற ஏழை எளிய குடும்பத்தினர் பயனடையும் வகையில் கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் தி.மு.க. அரசு முற்றிலும் நிறுத்திவிட்டது. மடிக்கணினி கிடைக்காத மாணவர்கள் இந்த தேர்தலில் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்கள் இந்த தேர்தலில் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • வாக்காளர் எவரொருவரின் ஜனநாயக உரிமையும் மறுக்கப்பட்டு விடக்கூடாது.
    • புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் சிலிப் வழங்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வாக்காளர் எவரொருவரின் ஜனநாயக உரிமையும் மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் தேர்தல் ஆணையம் கூடுதல் ஏற்பாடு செய்துள்ளது. வாக்காளர் அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறு எழுத்துப்பிழைகள் இருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஒருவேளை வாக்காளர் அட்டையில் உள்ள புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிப்பதற்காக 12 ஆவணங் களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவை வருமாறு:

    1. ஆதார் அட்டை

    2. பான் கார்டு

    3. ரேஷன் அட்டை

    4. வங்கி அல்லது அஞ்சல் பாஸ்புக்

    5. ஓட்டுநர் உரிமம்

    6. பாஸ்போர்ட்

    7. புகைப்படத்துடன் கூடிய பென்ஷன் ஆவணம்

    8. புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர் அடையாள அட்டை

    9. எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி. அதிகாரப் பூர்வ அடையாள அட்டை

    10. சமூக நீதித்துறையின் அங்கீகாரம் பெற்ற மாற்றுத்திறனாளி சான்றிதழ்

    11. மத்திய அரசின் வேலை வாய்ப்பு அடையாள அட்டை

    12. தொழிலாளர் அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு

    • சமூக வலை தளங்களில் அவரை கேலிப் பொருளாக்கியவர்கள் எல்லாம் இப்போது புகழ் பாடுகிறார்கள்.
    • மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற அவரது எண்ணத்தை வரும் காலங்களில் நிச்சயம் செயல்படுத்துவோம்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா மாலைமலருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:-பாராளுமன்ற தேர்தல் களம் எப்படி உள்ளது?

    பதில்:-தேர்தல் களம் எங்களுக்கு என்றும் புதிது இல்லை. 19 ஆண்டுகளாக பார்க்கும் அதே தேர்தல் களம்தான். தேர்தல் என்றாலே போர்தான். போர் களத்தில் போர் வீரர்கள் எப்படி சண்டை போடு வார்களோ அப்படித்தான் இருக்கும். தேர்தலில் பண பலம், அதிகார பலம் ஆகியவற்றோடுதான் வருவார்கள். அதையெல்லாம் சந்திக்க வேண்டியது தான்.

    மக்களிடம் இன்று மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்து நமது வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்வார்கள் என்று வாக்குறுதிகளை சொல்லி வருகிறோம். அடுத்தவர்களை குறை சொல்லி பேசாமல் தொகுதிக்கு நல்லது செய்வது பற்றியே மக்களிடம் பேசி வருகிறோம்.

    தேர்தல் களம் நிச்சயமாக நன்றாக உள்ளது. நாளை நமதே... 40-ம் நமதே.. எங்களது வேட்பாளர்கள் உறுதியாக வெற்றி பெறுவார்கள். மக்கள் விரும்பும் கூட்டணியாக எங்கள் கூட்டணி உள்ளது. தொண்டர்கள் இணைந்து வேலை செய்து வருகிறார்கள். அதனால் மாபெரும் வெற்றியை பெறுவோம்.

    கேள்வி:-தே.மு.தி.க.வின் வளர்ச்சிக்கு எதிர்கால திட்டங்கள் என்ன வைத்துள்ளீர்கள்?

    பதில்:-தே.மு.தி.க.வில் உள்கட்சி தேர்தலை ஏற்கனவே நடத்தி முடித்துவிட்டோம். கேப்டன் மறைந்து 100 நாள்தான் ஆகிறது. அந்த சோகத்தில் இருந்து இன்னும் நாங்கள் வெளியே வரவில்லை. தேர்தல் என்கிற மிகப்பெரிய சவால் எங்கள் முன்பு இருப்பதால் அதை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தேர்தல் பணிகள் முடிந்து முடிவுகள் வந்த பின்னர் கட்சியை மேலும் வலுப்படுத்த உள்ளோம்.

    கேப்டன் எப்படி மிகப்பெரிய வலிமையோடு கட்சியை நடத்தினாரோ, அதே போல மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து மக்களுக்காக உழைப்போம்.

    கேள்வி:-அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும் சேர்ந்திருந்தால் மேலும் வலுவாக இருந்திருக்கும் என்கிற கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:-தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் ஏற்கனவே 10 ஆண்டுகள் இருந்தோம். நீங்கள் குறிப்பிடும் கட்சியும் அப்போது கூட்டணியில் இருந்தது. ஆனால் பெரிய வெற்றி எதையும் பெற முடியவில்லையே.

    இந்த முறை எங்கள் மாவட்ட செயலாளர்கள் அனைவருமே அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்க வேண்டும் என்றே கூறினார்கள். அதுவே அவர்களது முடிவாகவும் இருந்தது. அந்த வகையிலேயே அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்கிற நிலைப்பாட்டை எடுத்தோம். அண்ணன் எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு உரிய மரியாதையை அளித்தார்.

    ஆரம்பத்திலேயே எங்களை அணுகி பேசியதால் அ.தி.மு.க. கூட்டணி சிறப்பாக அமைந்துள்ளது. இது மக்கள் விரும்பும் கூட்டணியாக உள்ளது. தொண்டர்கள் விரும்பும் கூட்டணியாகவும் எங்கள் கூட்டணியை பார்க்கிறேன். அதனால் பெரிய வெற்றி எதிர் பார்க்கிறோம்.

    கேள்வி:-அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:-அ.தி.மு.க.வில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இறந்த போது ஒரு பிளவு ஏற்பட்டது. அதன் பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் பிளவு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் இது ஒன்றும் புதிது அல்ல. இந்த கேள்விக்கு நான் பதில் சொல்வதை விட அ.தி.மு.க. நிர்வாகிகள் பதில் அளித்தால்தான் சரியாக இருக்கும்.

    அதே நேரத்தில் அது உள்கட்சி பிரச்சினை. சேருவதும், சேராததும் அவர்களது விருப்பம். எப்போதும் ஒன்றாக இருந்தால் அது நல்லது தானே? அதில் மாற்று கருத்து இல்லையே. இந்த விஷயத்தில் அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

    கேள்வி:-கூட்டணி விஷயத்தில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அணுகுமுறை எப்படி உள்ளது?

    பதில்:-மிக மிக சிறப்பாக உள்ளது. அதனை எல்லா கூட்டங்களிலுமே நீங்கள் பார்க்கலாம். எல்லா பிரசாரத்திலும் நான் சொல்லி வருகிறேன். அண்ணன் எடப்பாடி பழனிசாமி மிக மிக மரியாதையோடு கூட்டணியை வழி நடத்துகிறார். எப்போது போன் செய்தாலும் எடுத்து பேசுவார். அன்பாக கனிவாக பேசுவது, வழி நடத்துவது எல்லாமே மிக மிக அபாரமாக உள்ளது. பாராட்டுதலுக்குரிய எதிர்க்கட்சி தலைவராகவே எடப்பாடி பழனிசாமியை நான் பார்க்கிறேன்.

    கேள்வி:-விஜய பிரபாகரன் தேர்தல் களத்தில் புதிதாக இறங்கியுள்ளார். எதிர் காலத்தில் கட்சியில் அவரது பங்கு என்னவாக இருக்கும்?

    பதில்:-தேர்தல் களத்துக்குத்தான் விஜயபிரபாகரன் புதியவர். ஆனால் பிறந்ததில் இருந்தே அப்பாவையே பார்த்து வளர்ந்தவர் அவர். எனவே அவருக்கு எதுவும் புதிது அல்ல. அப்பாவோடும் என்னோடும் தேர்தல் பிரசாரத்துக்கு வந்துள்ளார். கட்சிக்குள் நடக்கும் அனைத்து விழாக்களிலும் அவர் பங்கேற்றுள்ளார். ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார். இதுவரை கட்சியில் அவருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படாமலேயே உள்ளது. ஆனால் கட்சியில் அனைவரும் விஜய பிரபாகரனுக்கு பதவி வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

    கேப்டன் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுச் செல்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக தேர்தல் வந்ததால் சவாலுடன் எதிர்கொண்டுள்ளோம். அனைவரும் விஜயபிரபாகரன் போட்டியிட வேண்டும் என்றே விரும்பினார்கள். எனவே எங்களது பூர்வீக தொகுதியான விருதுநகர் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

    எங்களது மாமனார், மாமியர் பிறந்த ஊர் அங்குதான் உள்ளது. எங்கள் குல தெய்வமும் அங்கேதான் இருக்கிறது. திருப்பரங்குன்றத்தில்தான் எங்கள் திருமணம் நடந்தது. இப்படி எங்கள் வாழ்க்கையே விருதுநகரில்தான் தொடங்கியுள்ளது. எனவே விஜய பிரபாகரன் அங்கு நிற்க வேண்டும் என்று விருதுநகர் தொகுதி மக்களும் விரும்பினார்கள். கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் விரும்பினார்கள். இப்படி அனைவரின் விருப்பத்துக்கும் இணங்கவே விருதுநகரில் அவர் போட்டியிடுகிறார்.

    தொகுதி மக்கள் விஜயபிரபாகரனை தங்களது செல்லப்பிள்ளையாகவே பார்க்கிறார்கள். தேர்தல் முடிநதவுடன் விஜய பிரபாகரனுக்கு வழங்கப்பட வேண்டிய பொறுப்பு பற்றி முடிவெடுத்து அறிவிக்க உள்ளோம்.

    கேள்வி:-விஜயகாந்த் மறைவில் இருந்து எப்படி மீண்டு வருகிறீர்கள்?

    பதில்:-கேப்டன் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுச் செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது மறைவில் இருந்து இன்னமும் மீண்டு வர முடியாமலேயே உள்ளோம். 3 மாதங்களாக வெளியில் எங்கும் செல்லாமலேயே இருந்தேன். அலுவல கம், வீட்டை தாண்டி எங்கேயும் போகவில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீங்களும் பிரசாரத்துக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் கூட்டணி தர்மத்தை மதித்து பிரசாரம் செய்து வருகிறேன். கேப்டன் எங்களிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். கட்சியை எதிர்காலத்தில் நன்றாக வழிநடத்தி அவர் கண்ட கனவை எட்டுவதற்கு உழைப்போம்.

    எப்போதும் மக்களை பற்றியே சிந்தித்து வந்த அவர் முதல்-அமைச்சராகி நலத்திட்டங்களை செய்ய விரும்பினார். ஆனால் சமூக வலை தளங்களில் அவரை கேலிப் பொருளாக்கியவர்கள் எல்லாம் இப்போது புகழ் பாடுகிறார்கள்.

    விஜயகாந்தை முதல்-அமைச்சராக்காமல் விட்டுவிட்டோமே என்று மக்கள் இப்போது வருத்தப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற அவரது எண்ணத்தை வரும் காலங்களில் நிச்சயம் செயல்படுத்துவோம்.

    இவ்வாறு பிரேமலதா கூறினார்.

    • ஒய்.எஸ். சர்மிளா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார்.
    • தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட பாபுவுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் பூத்தலப்பட்டு தொகுதி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. எம்.எஸ். பாபுவிற்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு, முன்னாள் எம்.எல்.ஏ. சுனில் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதனால் அதிருப்தியில் இருந்த எம்.எஸ். பாபு கடப்பாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஒய்.எஸ். சர்மிளா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார்.

    இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட பாபுவுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    • தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அதிமுக உடன்பிறப்புகளும், இவருக்கும் முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணிகளை ஆற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை மாவட்ட பாராளுமன்றத் தொகுதிக்கான கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக வி.எஸ்.பாபு நியமிக்கப்படுகிறார். அ.தி.மு.க. நிர்வாகிகளும், அ.தி.மு.க. உடன்பிறப்புகளும், இவருக்கும் முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணிகளை ஆற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
    • பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கி உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வடசென்னை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பால்கனகராஜுக்கு ஆதரவாக, மத்திய பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி நேற்று பிரசாரம் செய்தார்.

    வடசென்னை தொகுதிக்குட்பட்ட திரு.வி.க.நகர் சட்டசபை தொகுதி நம்மாழ்வார்பேட்டை சந்தை பகுதியில் இருந்து திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று அவர் வாக்கு சேகரித்தார்.

    பேரணியின்போது, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, வருகிற பாராளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி நாங்கள் ஓட்டு கேட்டு வருகிறோம். ஆனால், தலைமை இல்லா 'இந்தியா' கூட்டணி, யார் பிரதமர் வேட்பாளர் என்பதை முன்னிறுத்தாமல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை கூற முடியுமா?

    கேரளாவில் இந்தியா கூட்டணியினர் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். ஆனால், டெல்லியில் கட்டித்தழுவிக்கொண்டிருக்கின்றனர். நாட்டிலேயே கலாசாரம் மிக்க பூமியாக தமிழகம் திகழ்கிறது. ஆனால், தி.மு.க. சனாதன தர்மத்தை எதிர்க்கிறது. இதற்கு நாடே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கி உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி தமிழகத்துக்கு வழங்கிய நலத்திட்டங்களை சொல்ல முடியுமா? பா.ஜனதா தொண்டர்கள் நாட்டின் ஜனநாயகத்தை காக்க கடுமையாக பணியாற்ற வேண்டும். பா.ஜனதாவுக்கு மக்கள் ஓட்டு போடுவதற்காக நாம் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த பிரசாரத்தின்போது வட சென்னை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சதீஷ், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு 5 கிலோ எடை கொண்ட மீன் வழங்கி வரவேற்றார்.

    இதேபோல் திருவள்ளூர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன் பாலகணபதிக்கு ஆதரவு திரட்டி திருநின்றவூரில் ஸ்மிரிதி இரானி பிரசாரம் மேற்கொண்டார்.

    • தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
    • நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50,000-க்கு மேல் பணம் வைத்திருப்போர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் கார்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், தாம்பரம் ரெயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய அதிரடி சோதனையில் 6 பைகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க வைத்துள்ளேன்.
    • நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன்

    திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதி காக்காயம்பட்டி நால்ரோடு பகுதியில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது:

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.

    இந்த புத்தகம் எல்லாருடைய வெற்றிக்கும் வந்து சேர்ந்திருக்கும். இல்லையென்றாலும் விரைவில் வரும். மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை.

    ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வேலை உங்களின் பிரச்சனைகளை பாராளும்னறத்தில் பேசுவது. உங்களின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு 17 கோடி கொடுத்தது. அந்த 17 கோடி ரூபாயை எனது பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில், பள்ளிக்கூடங்களில், ஏனைய தேவை உள்ள அத்தனை இடங்களிலும் மனுக்களாக பெறப்பட்டு அவர்களின் தேவைகளை முழுவதுமாக செய்து கொடுத்துள்ளேன்.

    அரசு பள்ளிக்கூடங்களுக்கு வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளேன். இதேபோல் சமூக கூடங்கள், நியாயவிலை கடைகள், கழிவு நீர் தொட்டி மற்றும் பலவற்றை செய்துள்ளோம்.ஆகவே அந்த 17 கோடியை முழுவதுமாக செவழித்து விட்டு உங்கள் முன்பு நிற்கிறேன்.

    ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகளாக ஆக்கியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 118 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.

    நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன். குறிப்பாக இதய நோய், சிறுநீரக செயல் இழப்பு, போன்ற பல லட்சம் செய்ய கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன் .

    இந்த 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து இந்த சிகிக்சை கிடைக்க வழிவகை செய்வேன். மீண்டும் 1200 மாணவர்களுக்கு உயர் கல்வி பெற வழிவகை செய்வேன்.

    நாமக்கல் - பெரம்பலூர் - அரியலூர் புதிய ரயில்பாதை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுத்து முடித்து வைப்பேன்.

    வேட்டை நாயக்கர்கள் என்கிறவர்கள் அவர்களது ஜக்கம்மா தெய்வத்திற்கு முயல் ரத்தம் வைத்து வழிபடுகிறார்கள். காட்டுக்குள் வேட்டைக்கு செல்ல கூடாது என அந்த சமூகத்தினருக்கு ஆயிரக்கணக்கில் காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர். இதற்காக அந்த சமூகத்தை சேர்ந்த 50 பேரை டெல்லிக்கு அழைத்து சென்று ஒரு வாரம் அங்கி வைத்திருந்து பாராளுமன்றத்தை காட்டி, தாஜ் மஹாலை காட்டி. அதற்கான மந்திரியிடம் பேச வைத்து அவரிடம் புகைப்படம் எடுத்து பிரச்சனையை சொன்னோம்.

    இதன் பிறகு பாராளுமன்றத்தில் இருந்து பதில் வந்தது. அதில் வேட்டை நாய்கள் தடுக்கப்பட்ட விலங்கினங்கள் அல்ல. அவற்றை பயன்படுத்தலாம் என்று பதில் வந்தது. எனவே நீங்கள் தைரியமாக வேட்டை நாய்களை பயன்படுத்தலாம். அதையும் மீறி வனத்துறையினர் தடுத்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். நான் பார்த்து கொள்கிறேன்.

    சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விட்டு கல்விக்கடவுளான சரஸ்வதி அமர்ந்திருக்கும் தாமரை சின்னத்தில் எனக்கு வாக்களித்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பாரிவேந்தர் பேசினார்.

    • சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
    • மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா போட்டியிடுகிறார்.

    சிதம்பரம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு மேல் சிதம்பரம் அருகே லால்புரத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா ஆகியோரை ஆதரித்து நடந்து வரும் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    2, 3 தலைமுறைகளாகத்தான் நம் வீடுகளில் இருந்து இன்ஜினியர்கள், டாக்டர்கள் வருகிறார்கள். முன்பெல்லாம் அத்திபூத்தார்போல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உருவாவார்கள். இப்போது அப்படியல்ல. இப்போது நிறைய பேர் பதவிக்கு வருகின்றனர்.

    இதெல்லாம் பாஜக-வின் கண்களை உறுத்துகிறது. 'இந்த வேலைக்கு இவர்களெல்லாம் வந்துடறாங்களே' என நினைக்கிறார்கள். 'எரியுதுடி மாலா... அந்த ஃபேனை போடு'என கதறுவார்கள்.

    இடஒதுக்கீட்டை நம்மிடம் இருந்து தட்டிப்பறித்து, நம்முடைய குழந்தைகள் படித்து வேலைக்குச் செல்வதை கெடுக்க, என்ன என்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட பாஜகவுடன்தான் - பாமக கூட்டணி அமைத்துள்ளது

    இந்தியா கூட்டணி, மக்களுக்கான கூட்டணி. இந்தியா கூட்டணிதான், சமூக நீதி கூட்டணி.

    வளர்ச்சி அடைந்த நாடு உருவாக இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

    மோடிக்கும், சமத்துவத்திற்கும் சம்பந்தம் இல்லை. பலரின் தியாகத்தால் கிடைத்தது தான் சமூக நீதி. இட ஒதுக்கீட்டை பறிக்க பா.ஜ.க பல வழிகளில் முயற்சித்து வருகிறது.

    மதச்சார்பின்மை பற்றி மோடி பேசுவதில்லை. பன்முகத்தன்மையை மாற்ற நினைக்கும் மோடி வேண்டாம். பா.ஜ.க-பா.ம.க சந்தர்ப்பவாத கூட்டணி.

    மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. மோடி மீண்டும் பிரதமரானால் மக்களை சிந்திக்கவிட மாட்டார்கள்.

    பா.ஜ.க.வின் திட்டங்கள் மிகவும் மோசமானது, ஆபத்தானது.

    இரண்டாம் விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுத நமக்கு கிடைத்த வாய்ப்புதான் இந்தியா கூட்டணி என தெரிவித்தார்.

    • பெங்களூர் தெற்கு தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த தொகுதியில் 1991லிருந்து பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
    • ரூ.4.1 கோடி சொத்து மதிப்பு கொண்ட பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவுக்கு சொந்தமாக வீடு, கார் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

    பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு, 5 ஆண்டுகளில் 3150% உயர்ந்துள்ளது.

    2019 பாராளுமன்ற தேர்தலில் தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு ₹13.46 லட்சமாக இருந்த நிலையில், தற்போது தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ₹4.10 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். டெல்லி, பெங்களூரு காவல் நிலையங்களில் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சூர்யாவின் மொத்த சொத்து ரூ.4.10 கோடியில் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.1.99 கோடி முதலீடு மற்றும் ரூ.1.79 கோடிக்கு மேல் பங்குகளில் முதலீடு ஆகியவை அடங்கும்.

    ரூ.4.1 கோடி சொத்து மதிப்பு கொண்ட பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவுக்கு சொந்தமாக வீடு, கார் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூர் தெற்கு தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த தொகுதியில் 1991லிருந்து பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கு தொடர்ந்து எம்பியாக தேர்வாகி வந்த அனந்த குமார் கடந்த 2018ல் உயிரிழந்த நிலையில், 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேஜஸ்வியை பாஜக களமிறக்கியது. இவர் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-லிருந்து கட்சிக்கு வந்தவர்.

    தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையில் நெருங்கிய நண்பரான இவர், பாஜக இளைஞரணியின் தேசிய தலைவராக இருந்திருக்கிறார்

    பெங்களூர் சட்ட ஆய்வுகள் கழகத்தின் முன்னாள் மாணவரும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞருமான இவர், பா.ஜ.க தலைவர் மற்றும் பசவனகுடி ரவி சுப்ரமணியாவின் மருமகன் ஆவார். என்பது குறிப்பிடத்தக்கது.

    ×