என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: எடப்பாடி பழனிசாமி
- மக்களுக்கான குரலாக பாராளுமன்றத்தில் ஒலிப்பதுதான் எங்களுக்கு முக்கியம்.
- இந்தியாவிலேயே பெரிய ஊழல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தான்.
திருச்சி:
திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்கப்போகிறது என்று மு.க.ஸ்டாலின் சொல்லி வருகிறார். இவர்கள் கூட்டணியில் இதுவரை யார் பிரதமர் என்று கூறவில்லை. கூட்டணியிலேயே ஒற்றுமையாக இல்லாதபோது, இவர்கள் எப்படி பிரதமரை தேர்வு செய்வார்கள்.
மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் சேரவில்லை என்றால் அந்த கூட்டணி நன்றாக இருந்திருக்கும். அவர் அந்த கூட்டணியில் சேர்ந்ததால் ஒவ்வொருவராக வெளியேறிவிட்டனர். அந்த கூட்டணி வலுவாக இருப்பதுபோல் மக்களிடம் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். ஆனால் தமிழகத்தில் இந்தியா கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. டெபாசிட் வாங்காது.
நாம் பா.ஜனதா கட்சியுடனான கூட்டணியில் இருந்து வெளியேறியது பொறுக்காமல் அந்த கட்சியுடன் அ.தி.மு.க. கள்ளக்கூட்டணி அமைத்துள்ளது என்று அவர் விமர்சிக்கிறார். எங்களுக்கு ஆட்சி அதிகாரம் முக்கியம் இல்லை. மக்கள் தான் எங்களுக்கு முக்கியம். மக்களுக்கான குரலாக பாராளுமன்றத்தில் ஒலிப்பதுதான் எங்களுக்கு முக்கியம்.
தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அது கட்சி கிடையாது. இந்த தேர்தலில் தி.மு.க. என்ற தீய சக்தியை ஒழிக்க வேண்டும். தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
10 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த நாம் (அ.தி.மு.க.) பல எண்ணற்ற திட்டங்களை மக்களுக்கு கொடுத்துள்ளோம். 14 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்றிருந்த தி.மு.க. தமிழகத்துக்கு என்ன செய்தது. 3 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த மு.க.ஸ்டாலின் 3½ லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் 3 ஆண்டு காலத்தில் தமிழகத்துக்கு மு.க.ஸ்டாலின் ஒன்றும் செய்யவில்லை.
இந்த 3 ஆண்டு காலத்தில் தமிழகத்துக்கு அவர் என்ன செய்தார் என்று கூறமுடியுமா? அது முடியாததால் தான், எதை எதையோ கூறி மக்களை திசைதிருப்பி வருகிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி, தி.மு.க. ஆட்சி மட்டும்தான். இந்தியாவிலேயே பெரிய ஊழல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தான்.
அ.தி.மு.க. அரசு கொண்டுவந்த தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் போன்ற ஏழை எளிய குடும்பத்தினர் பயனடையும் வகையில் கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் தி.மு.க. அரசு முற்றிலும் நிறுத்திவிட்டது. மடிக்கணினி கிடைக்காத மாணவர்கள் இந்த தேர்தலில் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்கள் இந்த தேர்தலில் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.






