என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- இந்தியாவின் 2-வது தலைநகராக தமிழ்நாட்டை அறிவித்தல் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
- 3-ம் பாலினத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
சிதம்பரம்:
சிதம்பரம் அடுத்த ஜெயங்கொண்ட பட்டினத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி வேட்பாளருமான திருமாவளவன் வெளியிட்டார். இதனை தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்தறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கவர்னரை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கக் கூடாது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, மாநிலங்களுக்கான உரிய நிதிப்பகிர்வு, அனைத்து மொழிகளிலும் அம்பேத்கர் நூல்கள், அம்பேத்கர் பிறந்தநாளை அறிவுத்திருநாளாக அறிவிப்பு, ராமர் கோவில் கட்டுமானத்தில் ஊழல் குறித்த விசாரணை, கச்சத்தீவு மீட்பு, ஊழல் ஒழிப்பு, லோக்பால் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு, தேர்தல் ஆணையர் நியமன சட்டம் ரத்து, வாக்குபதிவு முறைக்கு பதிலாக பழையபடி வாக்குத் தாள் முறை விகிதாச்சாரப் பிரதிநிதுத்துவம், தொகுதி மறுசீரமைப்பில் தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதுகாப்பு, தேவையற்ற தேர்தல் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.
தமிழ்ச் செம்மொழி வாரக் கொண்டாட்டம், வறுமைக் கோட்டின் உச்சவரம்பினை உயர்த்துதல், 200 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி சட்டம், விவசாயம் மற்றும் நிலச்சீர்த்திருத்தம், விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம், ஜி.எஸ்.டி. வரி ஒழிப்பு, வருமான வரி சீரமைப்பு, விவசாயக் கடன் ரத்து , விவசாயத்திற்கு தனி பட்ஜெட், பெட்ரோலியப் பொருட்களின் மீது அரசின் விலைக் கட்டுப்பாடு, ராணுவத்தின் நிதியைக் குறைத்து கல்விக்கான நிதியை அதிகரிக்கப்படும்.
தனியார்மயமாதலை கைவிடுதல், நீதித்துறையில் இட ஒதுக்கீடு, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு, சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு, உயர்சாதி இட ஒதுக்கீடு ரத்து, அனைவருக்கும் வீடு அடிப்படை உரிமை, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையே ஒழித்தல், இடுகாடு பணியில் இருந்து தலித்துகளை விடுவித்தல், மாநில சுயாட்சி, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை , மாநில அரசுகளின் வழியே உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், வழக்காடு மொழியாக தமிழ், தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குதல், தமிழ்நாட்டிற்கென தனிக்கொடி, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், கோதவரி-காவிரி இணைப்புத் திட்டம், அணுமின் நிலையங்களை மூடுதல், வேலி காத்தான் ஒழிப்பு, இந்தியாவின் 2-வது தலைநகராக தமிழ்நாட்டை அறிவித்தல் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
பாதுகாப்பு அமைச்சரவையிலும், மேலவைகளிலும் இட ஒதுக்கீடு, ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம், பழங்குடியினருக்கு தனிப்பட்டா, தலித் கிறிஸ்த்தவர்களை பட்டியலில் இணைத்தல், பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, மீனவர்களுக்கு தனி அமைச்சகம், மதச் சிறுபான்மையினருக்கு தனி அமைச்சகம், 3-ம் பாலினத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
- மருத்துவரான நான் உங்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் தேவையான உதவிகள் செய்வதற்கு தயாராக உள்ளேன்.
- மக்கள் நலத்திட்டங்கள் கிடைக்க இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.
மேலூர்:
மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணன் மேலூர் அருகே வெள்ளலூர் நாட்டை சார்ந்த மட்டங்கி பட்டி, புலிமலைப் பட்டி, குறிஞ்சிப்பட்டி, அழகிச்சிபட்டி, கோட்டநத்தம்பட்டி, அம்பலகாரன்பட்டி, நயத்தான் பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
முன்னதாக வேட்பாளர் சரவணனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து குலவையிட்டு வரவேற்றனர். அப்போது சரவணன் பேசியதாவது:- கடந்த முறை வெற்றிப் பெற்ற வேட்பாளர் வெங்கடேசன் 4 ஆண்டுகளாக தொகுதி பக்கமே வராதவர். அவருக்கு சினிமாவிற்கு கதை எழுதுவதற்கு மட்டுமே நேரம் உள்ளது. மருத்துவரான நான் உங்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் தேவையான உதவிகள் செய்வதற்கு தயாராக உள்ளேன்.
அதிமுக அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் கிடைக்க இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் ராஜேந்திரன், கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிச்செழியன், பொருளாளர் அம்பலம் மற்றும் கட்சியினர் தீரளாக பங்கேற்றனர்.
- பாராளுமன்ற தொகுதி முழுவதும் மன்சூர் அலிகான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
- மன்சூர் அலிகானின் ஆதரவாளரை பா.ஜ.க.வை சேர்ந்த பிரமுகர் தாக்கியதாக கூறப்படுகிறது.
வேலூர்:
பிரபல நடிகரும் ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகானின் ஆதரவாளரை பா.ஜ.க.வை சேர்ந்த பிரமுகர் தாக்கியதாக கூறப்படுகிறது. தனது ஆதரவாளரை தாக்கிய பா.ஜ.க. பிரமுகரை கைது செய்யக்கோரி நடிகர் மன்சூர் அலிகான் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை நடிகர் மன்சூர் அலிகான் சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் முன்பாக தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அரசியலில் ஈடுபட எனக்கும் விருப்பம் உள்ளது.
- அமேதி தொகுதி மக்கள் கடந்த முறை மிகப்பெரிய தவறு செய்துவிட்டனர்.
அமேதி:
உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தோற்கடித்து பா.ஜனதாவின் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார். அதுவரை காங்கிரஸ் கோட்டையாக இருந்த அமேதி பா.ஜ.க. தொகுதியாக மாறியது.
இந்த தடவை அமேதி தொகுதியில் ராகுல் மீண்டும் போட்டியிடுவாரா? என்பதில் கேள்விகுறி எழுந்துள்ளது.
இந்த நிலையில் ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தெரிய வந்துள்ளது. சமீபத்தில் அவர் இதை சூசகமாக தெரிவித்தார். நேற்று மீண்டும் 2-வது முறையாக ராபர்ட் வதேரா தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தினார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், 'அமேதி தொகுதி மக்கள் என்னை மிகவும் விரும்புகிறார்கள். அங்கு வந்து போட்டியிடும்படி தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன' என்று கூறினார்.

ராபர்ட் வதேரா மேலும் கூறுகையில், 'நாடு முழுவதிலும் இருந்து என்னை காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். என்னை தீவிர அரசியலில் ஈடுபடும்படி வலியுறுத்துகிறார்கள். அதுபற்றி நானும் ஆலோசித்து கொண்டு இருக்கிறேன்.
அரசியலில் ஈடுபட எனக்கும் விருப்பம் உள்ளது. அமேதி தொகுதி மக்கள் கடந்த முறை மிகப்பெரிய தவறு செய்துவிட்டனர். இந்த தடவை அவர்கள் அதை சரி செய்ய வேண்டும்.
அமேதி தொகுதியில் நான் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன். மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
என்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பயந்து நான் தேர்தலுக்கு வருவதாக சொல்லவில்லை. அரசியலில் ஈடுபடவே விரும்புகிறேன். அமேதியில் ராகுல் போட்டியிட வேண்டும் என்பதே எனது விருப்பம்.
அமேதியில் ராகுல் போட்டியிட்டால் அவருக்காக நான் பிரசாரம் செய்வேன். ஒருவேளை அரசியலுக்கு வராவிட்டாலும் கூட மக்களுக்காக நான் தொடர்ந்து சேவை செய்வேன்' என்றார்.
- டீக்கடை முன்பு கூடியிருந்த பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு அவர் வாக்கு சேகரித்தார்.
- பால் உற்பத்தியாளர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் எல்.முருகன், அன்னூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கரியாக்கவுண்டனூர் கிராமத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த தொண்டர் பழனிசாமி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவர் தனது கடைக்கு தேநீர் அருந்த வருமாறு எல்.முருகனுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று எல்.முருகன் அந்த கடைக்கு சென்று டீ குடித்தார். சிறிது நேரம் டீக்கடைக்காரருடன் உரையாடி விட்டு தேநீருக்கு உரிய காசை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் டீக்கடை முன்பு கூடியிருந்த பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு அவர் வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து மத்திய மந்திரி எல். முருகன் அன்னூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூ ராம்பாளையம், கஞ்சப் பள்ளி, அல்லப்பாளையம், அ.மேட்டுப்பாளையம், பசூர், பட்டக்காரன்புதூர், மூக்கனூர், குப்பனூர், அக்கரை செங்கப்பள்ளி, கணுவக்கரை, ஆம்போதி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய அரசு சார்பில் கிராமப்புற மக்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் ரூ.400 மானியத்தில் விலையில்லா எரிவாயு இணைப்புகள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க.அரசு விவசாயிகளை ஒழிக்க வேண்டும், அவர்களது வாழ்வாதாரத்தை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டு தோறும் முப்பொழுதும் விளையும் நிலங்களை தாரை வார்க்க முயற்சி செய்கிறது. இதனை எதிர்த்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு தடுக்கப்பட்டது. அன்னூரில் சிப்காட் அமைக்க தி.மு.க. மீண்டும் முயற்சித்தால் பா.ஜ.க. சார்பில் ஒவ்வொரு தொண்டரும் தனது உயிரை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி வருகிறார்.
- பிரியங்கா கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்ட விரும்பியதால் அங்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. பிரசாரம் நிறைவடைய இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தமிழகத்தில் எல்லா கட்சிகளும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. தலைவர்களும் முற்றுகையிட்டு வருகிறார்கள்.
காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி வருகிறார். நெல்லை மற்றும் கோவையில் அவர் பிரசாரம் செய்கிறார்.
அதை தொடர்ந்து வருகிற 15-ந் தேதி பிரியங்கா காந்தி தமிழகம் வருகிறார். சேலம் பகுதியில் அவரது பிரசாரத்துக்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் பிரியங்கா கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்ட விரும்பியதால் அங்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
விமானத்தில் 15-ந்தேதி திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கரூர் செல்கிறார். கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் ரோடு ஷோ செய்கிறார். இதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார்கள்.
கரூர் பிரசாரத்தை முடித்துவிட்டு திருச்சி திரும்பும் பிரியங்கா அங்கிருந்து வேறு மாநில பிரசாரத்துக்கு செல்வதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
- எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
- கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உயதகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
திண்டுக்கல்:
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி தேனி, பங்களாமேடு பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உயதகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து திண்டுக்கல் மணிக்கூண்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். மேலும் தேனி, திண்டுக்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க திரளான தொண்டர்கள் கூடுவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு வருகிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மதுரையில் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாக தேனிக்கு புறப்பட்டு செல்கிறார்.
மதுரை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. கடந்த சில நாட்களாக தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இடையிடையே பிரசாரத்தின்போது, பொதுமக்களை நடந்து சென்று சந்திப்பது, மார்க்கெட் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வியாபாரிகளிடம் குறைகளை கேட்பது, நடைபயிற்சி சென்று வாக்கு சேகரிப்பது உள்ளிட்டவை பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தநிலையில் மதுரை , சிவகங்கை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் இன்று மாலை பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
இதற்காக மதுரையில் வண்டியூர் அருகே சுற்றுச் சாலையில் கலைஞர் திடலில் லட்சக்கணக்கானோர் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது . இங்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று மாலை 5.15 மணிக்கு விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார்.
விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் கோ.தளபதி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட முக்கிய தி.மு.க. பிரமுகர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அங்கிருந்து அவர் கார் மூலமாக புறப்பட்டு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் கலைஞர் திடலுக்கு மாலை 6.30 மணிக்கு வருகிறார்.
அங்கு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். மதுரையில் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாக தேனிக்கு புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நாளை தேனி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து தேனி அருகே லட்சுமிபுரம் மாவட்ட நீதிமன்றம் அருகே அமைந்துள்ள தேனி-பெரியகுளம் நெடுஞ்சாலையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்திற்கு சுமார் 6.5 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் திண்டுக்கல் தொகுதிகளிலிருந்து பிரசார கூட்டத்திற்கு வரும் வாகனங்கள் வசதிக்காக வாகனங்களை நிறுத்தவும் வந்து செல்லவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- அண்ணாமலையை'ஆட்டுக்குட்டி' என எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்வது வழக்கம்.
- பா.ஜ.க.வினர் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு செல்லும் வழியெங்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அண்ணாமலையை'ஆட்டுக்குட்டி' என எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்வது வழக்கம். கோவையில் தி.மு.க. வெற்றிப்பெற்ற பிறகு 'மட்டன் பிரியாணி' போடப்படும் என எதிர்க்கட்சியினர் அண்ணாமலையை குறிப்பிட்டு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்பு வைரலானது. மீம்ஸ்களில் அண்ணாமலையுடன் ஆட்டுக்குட்டி படத்தை இணைத்து டிரோல் செய்வது வழக்கம். இதுகுறித்து அண்ணாமலை முன்பு ரியாக்ட் செய்தார். நாளடைவில் இந்த மீம்ஸ் பற்றி அவர் கண்டுக்கொள்வதில்லை.
இந்நிலையில் பல்லடம் பிரசாரத்தில் அண்ணாமலை ஈடுபட்டிருந்த போது அவருக்கு விவசாயி ஒருவர் அன்பு பரிசாக ஆட்டுக்குட்டி ஒன்றை வழங்கினார். அதனை ஆசையோடு வாங்கிய அண்ணாமலை, குட்டி ஆடு என்பதால் அதனை தாயிடமே ஒப்படைத்து விடுங்கள் என தெரிவித்தார். இந்த காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது. அதனை பா.ஜ.க.வினர் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
- இந்தியாவில் உள்ள இந்துத்துவ சனாதன சக்திகள் ஒன்றிணைந்து மாநாடு நடத்தியது.
- வணிகர்கள் ஜி.எஸ்.டி. கொடுமையிலிருந்து மீட்கவும் இத்தேர்தல் அவசியமாக இருக்கிறது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலியை ஆதரித்து நேற்று மாலை தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பிற மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டை பின்பற்றுகிற வகையிலான ஆட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைத்துள்ளார். பள்ளி குழந்தைகள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இதை கனடா பிரதமரும் தன்னுடைய நாட்டில் கொண்டு வந்து பாராட்டுகிறார். உலக நாடுகளும் நம் மாநிலத்தை எடுத்துக்காட்டாக சொல்கிற அளவுக்கு காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார்.
இதேபோல, பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தையும் கொண்டு வந்துள்ளார். மேலும், 2.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்து விவசாயிகளின் கண்ணீரை துடைத்துள்ளார். ஜனநாயகமா, சர்வாதி காரமா, பாசிசமா, குடியரசு ஆட்சியா என்பதை தீர்மானிக்கிற ஒரு போர்க்களத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம். அவர்கள் வெற்றி பெற்று விடலாம் என்கிற ஆணவத்தில் இருக்கின்றனர்.
நம் நாட்டில் எத்தனையோ பிரதமர்கள் ஆட்சி செய்தனர். ஆனால், சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய திராவிட இயக்கத்தை அழித்து, ஒழித்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன் என பிரதமர் மோடி ஊருக்கு ஊர் பேசி வருகிறார். இது அவரது ஆணவத்தை காட்டுகிறது. இது பற்றி அவரை நேரில் சந்திக்கும்போது கேட்பேன்.
இத்தேர்தல் இந்தியாவின் ஜனநாயகம், எதிர்காலத்தை சார்ந்ததாக உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், வணிகர்கள் ஜி.எஸ்.டி. கொடுமையிலிருந்து மீட்கவும் இத்தேர்தல் அவசியமாக இருக்கிறது.
இந்தியாவில் உள்ள இந்துத்துவ சனாதன சக்திகள் ஒன்றிணைந்து மாநாடு நடத்தியது. இதில், அரசியல் சட்டத்தை தீயிட்டு கொளுத்திவிட்டு, மனு நீதியை சட்டமாகக் கொண்டு வருவோம் என்றும், நம் நாட்டின் தலைநகராக வாரணாசியை அறிவிப்போம் எனவும், முஸ்லீம்களுக்கு வாக்குரிமை கிடையாது எனவும் தீர்மானித்தனர்.
இவ்வளவு பேரபாயம் இருப்பதை அனைவரும் உணர்ந்து மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து ஜனநாயகத்தை காக்கும் கடமையை மேற்கொள்ள வேண்டும்.இத்தேர்தல் என்பது 2-வது சுதந்திர போரை போன்றது.
எனவே, ஒவ்வொருவரும் 10 வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க செய்யுமாறு கேட்டு கொள்ள வேண்டும். தஞ்சை தொகுதி வெற்றி வேட்பாளர் முரசொலியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தலைமை பதவிக்கு வாரிசாக வருவது தான் வாரிசு அரசியல்.
- மிச்சாங் புயல் முதற்கொண்டு அனைத்திலுமே பொய் சொல்லி வருகிறார் முதல்வர்.
மதுரை :
மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-
* தி.மு.க. ஒரு கார்பரேட் கம்பெனி.
* நான் தலைவன் அல்ல, தொண்டன். அ.தி.மு.க.வில் ஒரு தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியும். தி.மு.க.வில் வர முடியுமா?
* தலைமை பதவிக்கு வாரிசாக வருவது தான் வாரிசு அரசியல்.
* எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் என்று இருப்பது வாரிசு அரசியல் அல்ல.
* மிச்சாங் புயல் முதற்கொண்டு அனைத்திலுமே பொய் சொல்லி வருகிறார் முதல்வர்.
* 520 வாக்குறுதிகளில் 98 சதவீதம் நிறைவேற்றியதாக பொய் சொல்கிறார் முதல்வர்.
* நான் என்ன பொய் சொல்கிறேன் என்று அவர்கள் கூறட்டும், விளக்கம் அளிக்கிறேன்.
* தமிழகத்தில் 35 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க.வும், காங்கிரசும் வாரிசு அரசியல் நடத்துகின்றன.
- மோடி 3வது முறையாக பிரதமராக ஆட்சி அமைப்பார் என்பது உறுதி என்றார் ராஜ்நாத் சிங்.
நாமக்கல்:
நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று நாமக்கல்லில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற வாகன பேரணியில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங், திறந்த ஜீப்பில் நின்றவாறு பொதுமக்களை பார்த்து கையசைத்து, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அதன்பின், நாமக்கல் பஸ் நிலையம் அருகில் திறந்த ஜீப்பில் நின்றவாறு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசியதாவது:
தமிழ் கலாசாரம் மிகச்சிறந்த பாரம்பரியம் மிக்க கலாசாரம் ஆகும். காங்கிரஸ் ஆட்சியில் 30 ஆண்டுகளில் இந்தியாவுக்கு செய்ய முடியாத பல நலத்திட்டங்களை பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளார். அதனால் பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் அனைவரும் மரியாதை தருகின்றனர்.
2014-ம் ஆண்டுக்கு முன் இந்தியா பொருளாதாரத்தில் உலக அளவில் 11-வது இடத்தில் இருந்தது. தற்போது 5-வது இடத்திற்கு வந்து உள்ளது. 2027-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் உலக அளவில் 3-வது இடத்திற்கு வருவது உறுதி.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்கள் பெற்று ஆட்சி அமைத்தோம். இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, மோடி 3-வது முறையாக பிரதமராக ஆட்சி அமைப்பார் என்பது உறுதி.
தமிழகத்தில் உள்ள தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் வாரிசு அரசியல் நடத்திக்கொண்டு இருக்கின்றன. இதற்காக அவர்கள் கூட்டணி அமைத்து தங்களது குடும்பம் முன்னேறுவதற்காக பாடுபடுகின்றனர்.
நாம் உலக அளவில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல, நமது விமானப்படை, தரைப்படை உள்ள அனைத்து ராணுவ பிரிவுகளும் மிகவும் பலம் மிக்கது. நாம் ராணுவ தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். தற்போது எவ்வித ராணுவ தளவாடங்களும் இறக்குமதி செய்யப்படுவதில்லை.
பிரதமர் மோடி தலைமையில் வரும் 2047-ம் ஆண்டில் இந்தியா பொருளாதாரத்திலும், ராணுவத்திலும் அதிக சக்தி கொண்ட மிகப்பெரிய நாடாக மாறும். எனவே வரும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என தெரிவித்தார்.






