என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • ஸ்பெல்லிங் பீ இறுதிப் போட்டியில் 8 பேர் பங்கேற்றனர்.
    • இதில் இந்திய வம்சாவளி மாணவர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    வாஷிங்டன்:

    உலகப்புகழ் பெற்ற ஸ்பெல்லிங் பீ எனப்படும் சொற்களைச் சரியாக உச்சரிக்கும் போட்டி 1925-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஸ்பெல்லிங் பீ போட்டியின் நூற்றாண்டு விழா.

    இந்த ஆண்டு நடந்த போட்டியில் தகுதிச்சுற்றுக்கு 243 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள நேஷனல் ஹார்பர் பகுதியில் ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ-2025 இறுதிப்போட்டி நடந்தது.

    இந்தப் போட்டியின் இறுதியில் டெக்சாசைச் சேர்ந்த இந்திய வம்சாவளியின் 13 வயது மாணவர் பைசான் ஜகி சாம்பியன் பட்டம் வென்றார்.

    வெற்றி பெற்ற பைசான் ஜகிக்கு 50,000 டாலர் ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. பைசான் ஜகி கடந்தாண்டு நடந்த போட்டியில், சிறிய தவறால் சாம்பியன் பட்டத்தை இழந்து இரண்டாம் இடம் பிடித்தார்.

    • காசாவைத் தாக்க ஆயுதங்களை வழங்கும் இஸ்ரேலின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளரான எல்பிட் சிஸ்டம்ஸுடன் எம்ஐடி கூட்டணி வைத்துள்ளது.
    • மேகாவும் அவரது குடும்பத்தினரும் உடனடியாக நிகழ்ச்சியிலிருந்து அனுப்பப்பட்டனர்.

    பாலஸ்தீனத்திற்காக குரல் கொடுக்கும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒடுக்கும் முயற்சியை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ள நிலையில் இந்திய மாணவி ஒருவர் இஸ்ரேலுக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்துள்ளார்.

    புகழ்பெற்ற மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) பட்டம் பெற்ற இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி, பாலஸ்தீனத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

    வியாழக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், PG வகுப்பு தலைவரான மேகா வெமுரி, மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இஸ்ரேலிய இராணுவத்துடன் தொடர்ந்து உறவுகளைக் கொண்டுள்ளதை KANDITHAAR 

    அவர் கூறியதாவது, "இஸ்ரேல் பாலஸ்தீனத்தை பூமியிலிருந்து துடைத்தெறிய முயற்சிக்கிறது. எம்ஐடி அதன் ஒரு பகுதியாக இருப்பது வெட்கக்கேடானது. நாங்கள் பட்டம் பெற்று எங்கள் வாழ்க்கையைத் தொடரத் தயாராகி வரும் நிலையில், காசாவில் எந்தப் பல்கலைக்கழகமும் இல்லாத சூழல் உருவாகி உள்ளது.

    காசாவைத் தாக்க ஆயுதங்களை வழங்கும் இஸ்ரேலின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளரான எல்பிட் சிஸ்டம்ஸுடனான எம்ஐடியின் கூட்டாண்மையை முடிவுக்குக் கொண்டுவர இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாணவர்கள் அழுத்தம் கொடுத்தோம்.

    எம்ஐடி ஆராய்ச்சி உறவுகளைக் கொண்ட ஒரே வெளிநாட்டு இராணுவம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் மட்டுமே" என்று அவர் சுட்டிக்காட்டினார். அவரின் உரைக்கு மாணவர்கள் கோஷமிட்டு ஆரவாரம் செய்தனர்.

    காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் எல்பிட்டின் ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே பாலஸ்தீனத்தை ஆதரித்து MIT பற்றி மேகா கூறிய கருத்துக்களால் பல்கலைக்கழக வேந்தர் மெலிசா நோபல்ஸ் கோபமடைந்ததாக கூறப்படுகிறது. மேகாவும் அவரது குடும்பத்தினரும் உடனடியாக நிகழ்ச்சியிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மறுநாள் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தடை விதிப்பதாக மெகா வேமூரிக்கு நிர்வாகம் சார்பில் இமெயில் அனுப்பப்பட்டது. 

    • பென்சில்வேனியாவில் உள்ள இரும்பு ஆலையை ஆய்வு செய்த பின் இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார்
    • உங்களுக்காக உழைத்து உங்களுக்காகப் போராடும் அதிபராக நான் செயல்படு கிறேன் என்றார்.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி, அமெரிக்க பொருட்கள் மீது பல்வேறு நாடுகள் அதிக வரி விதிப்பதாகவும், அதற்கு பதிலடியாக அந்தந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

    இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் அறிவித்தார்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீதான வரி 50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

    பென்சில்வேனியாவில் உள்ள இரும்பு ஆலையை ஆய்வு செய்த பின் இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, அமெரிக்காவில் இரும்பு இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த போகிறோம். இது அமெரிக்காவில் இரும்பு தொழிலை மேலும் பாதுகாக்கும்.

    இன்று இங்குள்ள ஆண்களும் பெண்களும் அமெரிக்காவை சக்திவாய்ந்ததாகவும் வலுவாகவும் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் உழைக்கிறார்கள். இப்போது, இறுதியாக உங்களுக்காக உழைத்து உங்களுக்காகப் போராடும் அதிபராக நான் செயல்படு கிறேன் என்றார்.

    • ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாலஸ்தீனிய தூதர் பங்கேற்றார்.
    • காசாவின் நிலையை எடுத்துரைக்கும்போது அவர் கதறி அழுதது உருக்கத்தை ஏற்படுத்தியது.

    நியூயார்க்:

    இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

    சமீபத்தில் வெளியான தகவலின்படி உணவு மற்றும் மருந்துக்கு பற்றாக்குறை இருப்பதாகவும், உணவு வாகனங்கள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி அளிக்க வேண்டும் என கோரப்பட்டது. உணவு வாகனங்கள் செல்லாவிட்டால் பல ஆயிரம் குழந்தைகள் இறக்க நேரிடும் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பாலஸ்தீனிய தூதர் ரியாத் மன்சூர், காசாவில் குண்டுவெடிப்பு, தீப்பிழம்பு, பசி, பட்டினி ஆகியவற்றின் நடுவே மக்கள் தவிப்பதாக தெரிவித்தார்.

    அப்போது மனம் உடைந்து கதறி அழுத அவர், தனக்கும் பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். காசா குழந்தைகளின் நிலையைப் பார்க்க முடியவில்லை. காசாவின் குழந்தைகள் அண்டை நாடுகள் உள்ளிட்ட இடங்களிலும், அகதிகள் முகாமிலும் வாழ்வதைப் பார்க்க முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

    • அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.
    • அதிபரின் முடிவுக்கு தடை விதிப்பது ஆபத்தான போக்கு என்றும் குறிப்பிட்டார்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 2-ந்தேதி பரஸ்பர வரி விதித்தும்,கனடா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதித்தும் உத்தரவிட்டார்.

    மேலும் பல நாடுகளின் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத அடிப்படை வரி விதித்தும் டிரம்ப் உத்தரவிட்டார். 

    இந்த உத்தரவுக்கு எதிராக எதிர்கட்சியான ஜனநாயக கட்சியின் ஆட்சி நடைபெறும் 12 மாகாணங்கள் நியூயார்க் நகரில் உள்ள சர்வதேச வர்த்தக கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கையால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

    இதனை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று கூறி உலக நாடுகளின் மீதான பரஸ்பர வரி விதிப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

    நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கடுமையாக விமர்சனம் செய்தார். அரசின் வரி விதிக்கும் முறைக்கு தடை விதிப்பது நீதித்துறையின் அத்துமீறல் என்று விமர்சனம் செய்தார். மேலும் தேர்வு செய்யப்படாத நீதிபதிகள் அதிபரின் முடிவுக்கு தடை விதிப்பது ஆபத்தான போக்கு என்றும் குறிப்பிட்டார்.

    இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து அதிபர் டிரம்ப் நிர்வாகம் சார்பில் அந்நாட்டு உச்சநீதி மன்றத்தில் முறையிடப்பட்டது.

    வரி விதிப்பு விவகாரத்தில் வர்த்தக நீதிமன்றத்தின் தடைக்கு அவசர நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அரசின் முறையீட்டை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

    மேலும் வரிவிதிப்பை நிறுத்தி வைப்பது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிவித்து உச்சநீதிமன்றம் வரி விதிப்பு நடவடிக்கைக்கு தற்காலிக அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவு உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    • அணு ஆயுத பேச்சுவார்த்தை நடத்தும் போது, ​​தாக்குதலுக்கு எதிராக டிரம்ப் எச்சரிக்கிறார்.
    • யுரேனியம் செறிவூட்டலைக் கைவிட ஈரான் மறுத்தது.

    ஈரானை தாக்க வேண்டாம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

    அமெரிக்கா ஈரானுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தை நடத்தும் போது, தாக்குதலுக்கு எதிராக டிரம்ப் எச்சரிக்கிறார். இது குறித்து டிரம்ப் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கும் என்று செய்திகள் வந்தன. இதைத்தொடர்ந்து ஈரானுடனான பிரச்சினை தீர்க்கப்படும் தருவாயில் இருக்கும் நேரத்தில், ஈரானை தாக்குவது பொருத்தமற்றது என்று டிரம்ப் நெதன்யாகுவிடம் கூறினார்.

    ஈரான்-அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. ஆனால் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான சர்ச்சை இன்னும் நீடிக்கிறது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கப் போவதில்லை என்று முன்னர் கூறியது, ஆனால் யுரேனியம் செறிவூட்டலைக் கைவிட மறுத்தது குறிப்பிடத்தக்கது.

    • லோயர் மன்ஹாட்டனில் இந்திய திருமண ஊர்வலம் நடைபெற்றது.
    • இதில் பங்கேற்ற இந்தியர்கள் வால் ஸ்ட்ரீட் உள்ளிட்ட தெருக்களில் ஊர்வலமாகச் சென்று நடனமாடினர்.

    வாஷிங்டன்:

    இந்திய கலாசாரத்தில் திருமணங்களுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. கொண்டாட்டங்கள் அதிகம் நிறைந்த திருமணமாக இருக்கும். மணமகன், மணமகள் ஊர்வலங்களில் ஆட்டம் பாட்டத்திற்கும் ஒரு முக்கியமான இடம் இருக்கும்.

    இந்நிலையில், நியூயார்க்கில் நடந்த இந்திய திருமணம் ஒட்டுமொத்த அமெரிக்காவை வியக்க வைத்துள்ளது.

    நியூயார்க்கில் புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட்டில் இந்த திருமணத்திற்காக ஒரு பிரமாண்ட ஊர்வலம் நடந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

    லோயர் மன்ஹாட்டனில் நடந்த இந்த மணமகன் திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற சுமார் 400-க்கும் மேற்பட்டோர் வால் ஸ்ட்ரீட் உள்ளிட்ட தெருக்களில் ஊர்வலமாகச் சென்று நடனமாடினர்.

    பாரம்பரிய இந்திய உடை அணிந்திருந்த இவர்கள், டிஜே பாடல் போட உற்சாகமாக நடனமாடிக் கொண்டே சென்றனர். டிஜே ஒரு வண்டியில் அமர்ந்து கொண்டு பாடல்களைப் போட, ஊர்வலத்தில் இருந்த அனைவரும் ஆட்டம் போட்டனர். இந்த ஊர்வலம் வால் ஸ்ட்ரீட்டை இந்தியத் திருமணம் நடக்கும் இடத்தை போலவே மாற்றிவிட்டது.

    மணமகன், மணமகளையும் தூக்கி வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டனர். இதை அங்கிருந்த அமெரிக்கர்கள் வியப்போடு பார்த்தனர். சுமார் 400 பேர் பங்கேற்ற இந்த ஊர்வலத்திற்காக வால் ஸ்ட்ரீட்டே கொஞ்ச நேரம் முடங்கியது என்றால் மிகையல்ல.


    • அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக டாட்ஜ் என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது.
    • அதன் செயல் தலைவராக டெஸ்லா நிறுவன அதிபரான எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக 'டாட்ஜ்' என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது.

    அதன் செயல் தலைவராக உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவன அதிபருமான எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார். தொடர்ந்து நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் விதமாக பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டார்.

    அரசு ஊழியர்கள் பணியை விட்டு நீக்குதல், அரசு செலவுகளைக் குறைத்தல் உள்ளிட்டவற்றில் மஸ்க் தலைமையிலான 'டாட்ஜ்' துறை தீவிரமாக ஈடுபட்டது. இதனால் அரசுக்கு ஒருநாள் செலவில் இருந்து ரூ.34 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார். ட்ரம்ப் அளித்த பதவியில் பணியாற்ற 130 நாட்கள் மஸ்க் ஒப்புக்கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த பொறுப்பில் இருந்து அவர் விலகியுக்ள்ளார்.

    இது தொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில், "சிறப்பு அரசாங்க ஊழியர் என்ற எனது பணிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது; தேவையற்ற செலவினங்களை குறைக்கும் பணியில் ஈடுபட வாய்ப்பளித்த ட்ரம்பிற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

    டிரம்பின் புதிய வரி மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிபர் டிரம்ப் கல்வி, வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.
    • அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் சேர்கின்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளார்.

    அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் சேர்கின்றனர். இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்திய மாணவர்கள்.

    இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய விசா நேர்காணல்களை நிறுத்திவைக்கும்படி அந்நாட்டு வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ உத்தரவிட்டுள்ளார்.

    விசா கோரியுள்ள மாணவர்களின் பேஸ்புக், எக்ஸ், லிங்க்ட்இன், டிக்டாக் சமூக வலைதளங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. அதில் பயங்கரவாத ஆதரவு மற்றும் யூத எதிர்ப்பு பதிவுகள் காணப்பட்டால், அவர்களின் விசா மறுக்கப்பட வாய்ப்புள்ளது.

    • 30 நிமிடங்களுக்குள் ராக்கெட்டுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
    • எரிபொருள் கசிவு காரணமாக ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

    அமெரிக்கப் பணக்காரர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் ஒன்பதாவது ஏவுதல் தோல்வியடைந்தது.

    டெக்சாஸிலிருந்து ஏவப்பட்ட 30 நிமிடங்களுக்குள் ராக்கெட்டுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த ராக்கெட் இறுதியில் இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

    எரிபொருள் கசிவு காரணமாக ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டான் ஹவுட் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

    ஸ்டார்ஷிப் என்பது விண்வெளிப் பயணம் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வரை பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஒரு ராக்கெட் ஆகும்.

    முன்னதாக கடந்த ஜனவரியில் நடைபெற்ற முந்தைய ஏழாவது ஸ்டார்ஷிப் ஏவுதல் சோதனையும், மார்ச் 6 அன்று நடைபெற்ற எட்டாவது சோதனையும் தோல்வியடைந்தன.

    மார்ச் 6 அன்று எட்டாவது சோதனையின் போது ஸ்டார்ஷிப் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து அருகிலுள்ள நான்கு விமான நிலையங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 240 விமானங்கள் பாதிக்கப்பட்டன. 

    • நான் மட்டும் இல்லையென்றால் ரஷியாவிற்கு நிறையமோசமான விஷயங்கள் நடந்திருக்கும்
    • புதின் பைத்தியமாகி விட்டார் என்று டிரம்ப் தெரிவித்தார்

    ரஷிய அதிபர் புதின் நெருப்போடு விளையாடுகிறார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காட்டமாக தெரிவித்துள்ளார்.

    தனது சமூக ஊடக பதவியில் டிரம்ப் கூறியதாவது, "நான் மட்டும் இல்லையென்றால் ரஷியாவிற்கு நிறையமோசமான விஷயங்கள் நடந்திருக்கும் என்பதை விளாடிமிர் புடின் உணரவில்லை. நான் சொல்வது மிகவும் மோசமானது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நெருப்போடு விளையாடுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

    அண்மையில், பல உக்ரேனிய நகரங்களில் ரஷிய விமானப்படை நடத்திய கடுமையான தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து புதின் பைத்தியமாகி விட்டார் என்று டிரம்ப் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர்.
    • நடவடிக்கைக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் எப்போதும் விசா வழங்கப்படாது.

    அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்கள் அனைவரும் உரிய தகவல் கொடுக்காமல் இடைநின்றால், மாணவர் விசா ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தினால், வகுப்புகளை புறக்கணித்தால், அல்லது உங்கள் கல்லூரிக்கு தெரிவிக்காமல் நீங்கள் இடைநின்றால், உங்கள் மாணவர் விசா ரத்து செய்யப்படும். மேலும், நடவடிக்கைக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் எப்போதும் விசா வழங்கப்படாது. ஆகவே எந்தவொரு பிரச்சினையையும் தவிர்க்க எப்போதும் உங்கள் விசாவின் விதிமுறைகளைப் பின்பற்றி உங்கள் படிப்பை தொடருங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×