search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இளமையாகும் தென்கொரியர்கள்: புதிய வயது கணக்கெடுப்பு முறையால் ஒரு வயது குறைகிறது
    X

    இளமையாகும் தென்கொரியர்கள்: புதிய வயது கணக்கெடுப்பு முறையால் ஒரு வயது குறைகிறது

    • ஒரு நபர் பிறந்தவுடனேயே ஒரு வயதுடையவராக கணக்கெடுக்கப்பட்டு ஜனவரி 1-ம் தேதி ஒரு வருடத்தைப் பெறுகிறார்
    • எண்ணும் வயது முறையில் ஒரு நபரை பிறக்கும் போது பூஜ்ஜிய வயதாக கருதி பிறகு ஜனவரி 1 அன்று ஒரு வருடத்தைக் கூட்டுகிறது

    தென் கொரியாவில் பிறக்கும் குழந்தைகளின் வயதை கணக்கெடுப்பதில் நீண்ட காலமாக இரண்டு முறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. தற்போது இவை இரண்டையும் தென்கொரிய அரசு நீக்கியுள்ளது. மற்ற நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறையை கொண்டு வருகிறது.

    இதனால், தென் கொரியர்கள் வயதில் ஒன்று குறையப்போகிறது.

    கொரியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட வயது கணக்கீட்டு முறைகளில் ஒன்று பல நூற்றாண்டுகள் பழமையான "கொரிய வயது" முறையாகும். இதன்படி, ஒரு நபர் பிறந்தவுடனேயே ஒரு வயதுடையவராக கணக்கெடுக்கப்பட்டு ஜனவரி 1-ம் தேதி ஒரு வருடத்தைப் பெறுகிறார். இந்த முறையில், டிசம்பர் 31-ம் தேதி பிறந்த ஒரு குழந்தைக்கு மறுநாள் 2 வயது ஆகும்.

    நாட்டில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் மற்றொரு தனி "எண்ணும் வயது" முறையில், ஒரு நபரை பிறக்கும் போது பூஜ்ஜிய வயதாக கருதி, பிறகு ஜனவரி 1 அன்று, ஒரு வருடத்தைக் கூட்டுகிறது.

    பொதுவாக, 28 ஜூன் 2023 நிலவரப்படி 29 ஜூன் 2003-ல் பிறந்தவர் சர்வதேச அமைப்பின் கீழ் 19 வயதுடையவராக கருதப்படுவார்.

    ஆனால், எண்ணும் வயது முறையின் கீழ் 20 வயதுடையவராகவும் மற்றும் கொரிய வயது முறையின் கீழ் 21 வயதுடையவராகவும் கருதப்படுவார்.

    கடந்த டிசம்பரில், இரண்டு பாரம்பரிய எண்ணும் முறைகளையும் ரத்து செய்ய ஆதரவாக அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

    இது ஒரு புறமிருந்தாலும், "எண்ணும் வயது" முறையின் அடிப்படையில் ஒரு நபரின் வயதைக் கணக்கிடும் பல சட்டங்கள் அங்கு அப்படியே இருக்கும். எடுத்துக்காட்டாக, தென் கொரியர்கள், சிகரெட் மற்றும் மதுபானங்களை 19 வயதாக கணக்கெடுக்கப்படும் வருடத்திலிருந்து வாங்கலாம்.

    உள்ளூர் நிறுவனமான ஹான்கூக் ரிசர்ச் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, 4 தென் கொரியர்களில் 3 பேர் தரநிலைப்படுத்தலுக்கு ஆதரவாக இருந்தனர்.

    தற்போது தென் கொரியாவின் வயது கணக்கெடுக்கப்படும் முறையில் உலக நடைமுறையை பின்பற்ற தொடங்கி விட்டதால், வெளிநாடுகளுக்கு செல்லும்போது கொரிய வயதை விளக்க வேண்டியதில்லை என்பதால், இதனை தென் கொரியர்கள் ஆதரிக்கின்றனர்.

    காப்பீட்டு தொகைகள் மற்றும் அரசாங்க உதவி திட்டங்களுக்கான தகுதியை நிர்ணயம் செய்தல் போன்ற விஷயங்களில் பல தேவையற்ற சர்ச்சைகள் எழுந்ததையடுத்து தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் இதற்கான் முயற்சிகளை தீவிரமாக கையிலெடுத்தார்.

    பாரம்பரிய வயது கணக்கிடும் முறைகள், மற்ற கிழக்கு ஆசிய நாடுகளாலும் ஒரு காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டன. ஆனால், காலப்போக்கில் பெரும்பாலானவை அதை கைவிட்டன.

    ஜப்பான் 1950-ல் சர்வதேச நடைமுறையை ஏற்றுக்கொண்டது என்பதும் வட கொரியா 1980-ல் சர்வதேச நடைமுறையை பின்பற்ற தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×