என் மலர்
உலகம்
- சூடான் உள்நாட்டு போரால் மிகப்பெரும் பசி , பட்டினி நிலை உருவாகி உள்ளது.
- மக்கள் உயிர் வாழ மண், இலைகளை சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே உள்நாட்டு போர் வெடித்தது. இந்த போர் தற்போது வரை குறைய வில்லை . இதனால் மக்கள் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர்.
சூடானில் தற்போது சுமார் 49 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 18 மில்லியன் மக்கள் உணவு தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்,

உள்நாட்டு போரில் காயம் அடைந்த 160- க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 60 - க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சூடானில் ஏற்பட்ட சண்டையால் விவசாய பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது இதனால் மக்கள் உணவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மக்கள் இடம் பெயர்வால் அங்கு மலேரியா மற்றும் பிற நோய்கள் பரவுகின்றன.

மேலும் சூடானுக்கு வரும் சர்வதேச உதவிகள் பட்டினியால் வாடும் பகுதிகளில் உள்ள மக்களை சென்றடைவதை ராணுவம் தடுத்து வருகிறது. சூடான் உள்நாட்டு போரால் மிகப்பெரும் பசி , பட்டினி நிலை உருவாகி உள்ளது.

உணவு பொருட்கள் அனைத்தும் தீர்ந்து விட்டதால், விவசாயிகள் நடவுக்காக வாங்கிய விதை தானியங்களை சாப்பிட்டுள்ளனர். மக்கள் உயிர் வாழ மண், இலைகளை சாப்பிடும் அவல நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.
- மூதாட்டி லிடியா ஸ்டெபனிவ்னா குண்டுவீச்சுக்கு மத்தியில் ஊன்றுகோல் உதவியுடன் 10 கிலோ மீட்டர் நடந்தே உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்றார்.
- உணவு, தண்ணீர் இல்லாமல் நடந்ததாகவும், பலமுறை விழுந்ததாகவும், ஆனால் தன்னம்பிக்கையுடன் நடந்து சென்றதாகவும் மூதாட்டி தெரிவித்தார்.
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ரஷிய படையால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் டொனெட்ஸ்கில் உள்ள ஓச்செரி டைன் பகுதியில் இருந்து 98 வயது மூதாட்டியான லிடியா ஸ்டெபனிவ்னா என்பவர் குண்டுவீச்சுக்கு மத்தியில் ஊன்றுகோல் உதவியுடன் 10 கிலோ மீட்டர் நடந்தே உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்றார். அவரை ராணுவத்தினர் மீட்டு தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றனர். தான் உணவு, தண்ணீர் இல்லாமல் நடந்ததாகவும், பலமுறை விழுந்ததாகவும், ஆனால் தன்னம்பிக்கையுடன் நடந்து சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
- ஏழு மாதங்களாக இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரகிறது.
- 150-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர்.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். சவுதி அரேபியா சென்றிருந்த அவர், இன்று இஸ்ரேல் சென்றார்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே சண்டை தொடங்கியதில் இருந்து ஏழாவது முறையாக இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் சென்றுள்ள அவர் அங்குள்ள முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசினார்.
அப்போது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கான உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இது பிணைக்கைதிகளை விடுவிக்கவும், ஏழு மாதங்களாக நடந்து வரும் போரை நிறுத்துவதற்கும் வழிவகுக்கும்.
பிணைக்கைதிகளை விடுவிக்கவும், போர்நிறுத்தத்தைப் கொண்டு வரவும், அதை இப்போதே நடைமுறை படுத்தவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அது அடையப்படாமல் இருப்பதற்கு ஒரே காரணம் ஹமாஸ்தான்.
பரிந்துரை மேசை மீது உள்ளது. தாமதம் இல்லை. சாக்குபோக்க இல்லை என நாங்கள் கூறுகிறோம். இதற்கான நேரம் இது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான உடன்படிக்கை உணவு, மருந்து பொருட்கள், குடிநீர் போன்றவை காசாவிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கும். இவ்வாறு பிளிங்கள் தெரிவித்துள்ளார்.
- எங்கு பெண்களுக்கு சமகல்வி, சம உரிமை அளிக்கிறதோ அங்கு பொருளாதார முன்னேற்றத்தை காணலாம்.
- தற்போதைய மத்திய அரசு இருக்கும்வரை இந்த விஷயங்களில் முற்போக்கான நிலைமை ஏற்படுமா என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
கொழும்பு:
கொழும்பில் நடைபெற்ற ரோட்டரி கழகத்தின் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இலங்கை சென்றார். அங்கு அவர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் 'வீரகேசரி' பத்திரிகைக்கு அவர் சிறப்பு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி: 2022-ம் ஆண்டு இலங்கை நிதி நெருக்கடியை சந்தித்து கொண்டிருந்தபோது, தமிழகத்தில் நீங்கள் நிதி நிர்வாகத்தில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி கொண்டிருந்தீர்கள். அது தொடர்பாக விளக்க முடியுமா?
பதில்: இந்த விஷயத்தில் நான் உலகத்தில் பெற்ற அனுபவத்தையோ, கல்வியையோ தாண்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆதரவும், பொறுப்பும்தான் இதற்கு காரணமாகும். 2016-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டுவரை எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசாங்க கணக்கு குழுவில் நான் அங்கம் வகித்தேன். அப்போது கிடைத்த அனுபவம்தான் எனக்கு கை கொடுத்தது. அதேபோல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் நோக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்தது. அதனால் அவர் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். இதன் காரணமாகவே 20 ஆண்டுகளில் ஏற்படுத்த முடியாத ஒரு மாற்றத்தை என்னால் 2 ஆண்டுகளில் மாற்றி அமைக்க முடிந்தது.
கேள்வி: நீங்கள் சமூக நீதி குறித்து பேசுகிறீர்கள். பெண்கள் கல்வி கற்றால் மட்டுமே ஒரு சமூகம் விரைவாக வளர்ச்சி அடைய முடியும் என்று கூறுகிறீர்கள். இதனை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கிறீர்கள்?
பதில்: எங்கு பெண்களுக்கு சமகல்வி, சம உரிமை அளிக்கிறதோ அங்கு பொருளாதார முன்னேற்றத்தை காணலாம். தமிழகத்தில் நீதி கட்சி ஆட்சியில் இருந்தபோதே அனைவருக்கும் கல்வி என்ற சட்ட திருத்தம் 1921-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.. அன்று முதல் இன்று வரை பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விஷயத்தில் எந்த கட்சியும் பின்வாங்கியதில்லை.
கேள்வி: பெங்களூரு, ஐதராபாத் போல் தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழகம் எப்போது முதன்மை இடம் பெறும்?
பதில்: கருணாநிதி ஆட்சி காலத்திலேயே தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியானது இயற்கையான வளர்ச்சியாக அமைந்துவிட்டது. தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழகம் பின்தங்கி இல்லை. அதில் தமிழகம் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. மாதந்தோறும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் இந்த துறையில் உருவாக்கப்படுகின்றன.
கேள்வி: 2030-ம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு கொண்டு வர முயற்சிக்கிறீர்கள். இது சாத்தியமா?
பதில்: இது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்த இலக்கு. அதை அடைவதற்காக நாங்கள் பணியாற்றி கொண்டிருக்கிறோம்.
கேள்வி: தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையில் பொருளாதார உறவை மேம்படுத்த முடியுமா?
பதில்: இது விஷயத்தில் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதல் மூலமே முன்னெடுக்கப்பட முடியும். தற்போதைய மத்திய அரசு இருக்கும்வரை இந்த விஷயங்களில் முற்போக்கான நிலைமை ஏற்படுமா என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இலங்கையும், தமிழகமும் சுற்றுலாத்துறையில் இணைந்து செயல்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை எட்ட முடியும். தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கலாசார தொடர்புகளின் அடிப்படையில் இதனை முன்னெடுக்கலாம்.
கேள்வி: கச்சத்தீவு விவகாரம் மீண்டும் களத்துக்கு வந்திருக்கிறது. இது மத்திய அரசின் விஷயம் என்றாலும், மாநில அரசின் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தை தமிழக அமைச்சர் என்ற முறையில் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம் குறித்து கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்தவர்கள் எதையும் செய்யவில்லை. தற்போது இதை அரசியலுக்காக பேசுகிறார்கள். கவனச்சிதறல் முயற்சியாகவே இது தெரிகிறது.
கேள்வி: இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது சாத்தியமா?
பதில்: சாத்தியம் இல்லை என்று கூற முடியாது. உலகளவில் இதை விட நீளமான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் பொருளாதார விளைவுகள் என்ன? செலவு என்ன என்பது முக்கியமாகும். பாதுகாப்பு விஷயங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும். பொறியியல் மற்றும் கட்டிடக்கலை அடிப்படையில் சாத்தியமானதுதான்.
இவ்வாறு பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார்.
- லாட்டரிக்கு ஜாக்பாட் பரிசாக 2 லட்சத்து 29 ஆயிரத்து 680 டாலர்கள்( இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.9 கோடி) பரிசு விழுந்துள்ளது.
- மகளும் உடனே லாட்டரியை வாங்கி பரிசு விழுந்த எண்ணை சரி பார்த்த போது அவருக்கு ஜாக்பாட் பரிசு விழுந்திருப்பது உண்மை என்பது தெரிய வந்தது.
கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். அதுபோன்றதொரு சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள மேரிலாண்ட் மாகாணத்தின் தலைநகரான அனாபொலிஸ் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த 22-ந்தேதி மேரிலாந்தில் உள்ள ராயல் பார்ம்ஸ் உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு சிக்கன் உணவு ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருந்தார். அந்த நேரத்தில் அவர் 10 டாலர் மதிப்புள்ள கேசினோ ராயல் ஸ்லாட்ஸ் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கினார். அந்த லாட்டரிக்கு ஜாக்பாட் பரிசாக 2 லட்சத்து 29 ஆயிரத்து 680 டாலர்கள்( இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.9 கோடி) பரிசு விழுந்துள்ளது.
இதையறிந்த அந்த மூதாட்டி தனது மகளிடம் லாட்டரி சீட்டை காட்டி எனக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என நினைக்கிறேன் என்று கூறி உள்ளார். அவரது மகளும் உடனே லாட்டரியை வாங்கி பரிசு விழுந்த எண்ணை சரி பார்த்த போது அவருக்கு ஜாக்பாட் பரிசு விழுந்திருப்பது உண்மை என்பது தெரிய வந்தது.
தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பெயரை நம்பிக்கையுள்ள பாட்டி என்று அடையாளப்படுத்திக் கொண்ட அந்த மூதாட்டி, பரிசுத்தொகையை என்ன செய்யலாம் என்று இன்னும் யோசிக்கவில்லை. நான் இன்னும் இன்பஅதிர்ச்சியில் இருக்கிறேன். நான் வாழ்க்கையை அனுபவிக்க போகிறேன். பரிசுத் தொகையில் பேரக்குழந்தைகளுக்கு உதவி செய்வேன் என்றார்.
- ஒரு சிறுமி பரபரப்பான சாலையில் சக்கர நாற்காலியில் ஒருவரை தள்ளிக் கொண்டு சாலையை கடக்கும் காட்சிகள் உள்ளது.
- சிறுமியின் இந்த கண்ணியமான செயலை பாராட்டி உள்ள ஆனந்த் மஹிந்திரா, ஏன் முழு உலகமும் இப்படி இருக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.
பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். இவரது பதிவுகள் பலருக்கு உந்துதலாக இருக்கும். அந்த வகையில் ஒரு சிறுமியின் கண்ணியமான செயல் தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு சிறுமி பரபரப்பான சாலையில் சக்கர நாற்காலியில் ஒருவரை தள்ளிக் கொண்டு சாலையை கடக்கும் காட்சிகள் உள்ளது. அப்போது வாகனங்கள் அனைத்தும் சாலையையொட்டி நிற்கும் நிலையில் சக்கர நாற்காலியில் முதியோரை தள்ளிக் கொண்டு செல்லும் சிறுமி ஒவ்வொரு 3 அடிகளிலும் போக்குவரத்து சிக்னலில் வாகனங்களில் காத்து நிற்கும் கார் டிரைவர்கள் முன்பு பணிந்து நின்று அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் காட்சிகள் உள்ளது.
சிறுமியின் இந்த கண்ணியமான செயலை பாராட்டி உள்ள ஆனந்த் மஹிந்திரா, ஏன் முழு உலகமும் இப்படி இருக்க முடியாது என பதிவிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ வைரலாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்தது. இதுவரை 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை குவித்த நிலையில் சிறுமியின் செயலை பாராட்டி பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
And every now & then you stumble on a video which makes you wish: Why couldn't the whole world be like this?? pic.twitter.com/OK4GcTAXIA
— anand mahindra (@anandmahindra) April 30, 2024
- இறுதியில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள அடிவார முகாமை 7 நாட்களில் சென்றடைந்தார்.
- 6 வயதில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் அடிவார முகாமை அடைந்த சிறுவன் இவானுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
துபாய்:
துபாயில் வசிக்கும் ரஷிய நாட்டை சேர்ந்தவர் டிமிட்ரி. இவரது மனைவி அல்லா கிராசியுகோவ். இந்த தம்பதிக்கு இவான் என்ற 6 வயது மகன் உள்ளார். துபாயில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் சிறுவன் இவான் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் தடகளம், அக்ரோபாட்டிக்ஸ், நீச்சல் மற்றும் நடனம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். பெற்றோரின் ஊக்கத்துடன் மலையேறும் பயிற்சியில் மிகுந்த ஈடுபாடு வந்ததும் அதற்கான பயிற்சியையும் சிறுவன் இவான் எடுத்துக்கொண்டார். இந்த நிலையில் தானும் எவரெஸ்ட் மலை மீது ஏறி சாதனை புரிய வேண்டும் என மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.
இதற்காக கடந்த மாதம் ரம்ஜான் பண்டிகை விடுமுறையில் பெற்றோருடன் சிறுவன் இவான் நேபாளத்துக்கு விமானம் மூலம் சென்றார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு கடுமையான குளிரில் சிறப்பு மலையேற்ற குச்சியை ஊன்றி மலையேற தொடங்கினார். இறுதியில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள அடிவார முகாமை 7 நாட்களில் சென்றடைந்தார். இதன் உயரம் 17 ஆயிரத்து 598 அடியாகும் (5,364 மீட்டர்). இந்த சாதனை குறித்து துபாயில் சிறுவன் இவான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பேஸ் கேம்ப்பை அடைந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அங்கு சென்ற உடன் கொஞ்சம் மகிழ்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. ஏனென்றால் எனது பயணம் முடிவுக்கு வந்து விட்டது. மீண்டும் நான் துபாய்க்கு விமானத்தில் வர வேண்டி இருந்தது. அங்குள்ள கும்பு பனிப்பாறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அழகாக இருந்தது. எனக்கு குளிர்காற்று மிகவும் சவாலாக இருந்தது.
அந்த காற்றினால் கைகள் உறைந்து விட்டன. எனது பயணத்தில் நீண்ட முடியுடைய யாக், எருதுகள், கழுதைகள் மற்றும் குதிரைகள் போன்ற விலங்குகளை பார்த்து மகிழ்ந்தேன். எதிர்காலத்தில் தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ, ரஷியாவில் உள்ள எல்பரஸ் ஆகிய மலைகளில் ஏற ஆசையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
6 வயதில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் அடிவார முகாமை அடைந்த சிறுவன் இவானுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
- வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
- ஆனால் அதை மீறி வழக்கில் தொடர்புடையவர்களை பொதுவெளியில் டிரம்ப் விமர்சித்து வந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். நடப்பு ஆண்டு இறுதியில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிபர் பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் டிரம்புக்கு மக்களிடையே ஆதரவு பெருகி காணப்படுகிறது.
தொழிலதிபரான டிரம்ப் 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, தன்னுடனான பாலியல் உறவுகளை மூடி மறைக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு ரூ.1 கோடி கொடுத்தது தொடர்பாக அவருக்கு எதிராக கோர்ட்டில் விசாரணை நடந்துவருகிறது.
இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என டிரம்புக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அவர் அதை மீறி வழக்கில் தொடர்புடையவர்களை பொதுவெளியில் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
இந்நிலையில், கோர்ட்டை அவமதித்ததாகக் கூறி டிரம்ப் நேற்று கோர்ட்டில் ஆஜா்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவருக்கு 9,000 டாலர் (சுமார் ரூ.7.5 லட்சம்) அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். கோர்ட்டு உத்தரவை மீண்டும் மீறினால் சிறையில் அடைக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
- பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீன கடலோர காவல்படை தண்ணீர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
- சீனாவின் அனுமதியின்றி இக்கடல் பகுதியில் எந்த கப்பலும் செல்ல கூடாது என மிரட்டி வருகிறது
தென் சீனக் கடலில் உள்ள பல சிறிய தீவுகளை மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. இதனால் அடிக்கடி தென் சீனக் கடலில் மோதல் நடக்கிறது.
பிலிப்பைன்சுக்கும் சீனாவுக்கும் இடையில் தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது.இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தென் சீனக் கடலில் சென்று கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பல் மீது சீன கடலோர காவல்படையின் கப்பல் தண்ணீர் பீரங்கிகள் மூலம் தண்ணீரை பீச்சியடித்து தாக்குதல் நடத்தியது. இதனால் தென் சீனக் கடலில் இன்று பதட்டம் ஏற்பட்டது.
இது குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டு அதிகாரி ஒருவர் கூறியதாவது :-
சீனாவின் கடலோரக் காவல்படை தென் சீன கடலில் சென்று கொண்டிருந்த எங்களது பிலிப்பைன்ஸ் கப்பலை இன்று காலையில் நீர் பீரங்கிகளால் 8 முறை சுட்டது. கப்பலின் உபகரணங்கள் சேதமாகி உள்ளது.

சீனாவின் அனுமதியின்றி இக்கடல் பகுதியில் எந்த கப்பலும் செல்ல கூடாது என சீன கடலோர காவல் படை மிரட்டி வருகிறது. சீன கடலோரக் காவல்படையின் துன்புறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்க தக்கது என தெரிவித்தார்.
#Philippines accuses #China's coast guard of damaging its vessel in #SouthChinaSea
— DD News (@DDNewslive) April 30, 2024
Two Chinese coast guard vessels used water cannons against the Philippine ship, which was patrolling together with a civilian fisheries vessel pic.twitter.com/Y95G3VNOCJ
- அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
- கொரோனா தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில், ரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்தும்.
லண்டன்:
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்தன. இதில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின.
இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. இதற்கிடையே அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதேபோல் 51 வழக்குகள் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்டன. இவ்வழக்குகள் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கோர்ட்டில் அளித்த ஆவணத்தில், கோவிட் தடுப்பூசி ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக தி டெலிகிராப் ஊடகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில், ரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு (டி.டி.எஸ்.) வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்தும். ஆனால் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்கும். எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
- குறிப்பிட்ட வீட்டை போலீசார் நெருங்கும்போது தேடப்படும் சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டார்.
- மோதலுக்குப் பிறகு அந்த வீட்டில் ஒரு பெண்ணும் 17 வயது ஆணும் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் சார்லோட் நகரில் உள்ள ஒரு வீட்டில் தேடப்படும் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்றனர்.
அப்போது அந்த வீட்டில் இருந்த 2 வாலிபர்கள், போலீசார் மீது திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். உடனே போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
மூன்று மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் 4 போலீசார் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய ஒரு நபர் உயிரிழந்தார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதுகுறித்து காவல்துறைத் தலைவர் ஜானி ஜென்னிங்ஸ் கூறும் போது, நமது சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சித்த சில ஹீரோக்களை இன்று நாம் இழந்து விட்டோம். குறிப்பிட்ட வீட்டை போலீசார் நெருங்கும்போது தேடப்படும் சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டார். அவர் வீட்டு வாசலில் கொல்லப்பட்டார்.
அவர் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றவாளியாகத் தேடப்படுபவர். மோதலுக்குப் பிறகு அந்த வீட்டில் ஒரு பெண்ணும் 17 வயது ஆணும் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
- தனது காதலியை தேடிய இவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சீட்வாட்டர் பகுதியில் 20 அடியில் விளம்பர பலகை வைத்துள்ளார்.
- எனக்கு ஓய்வூதிய வருமானம் இருக்கிறது. நான் என் வயதை பார்க்கவில்லை என்றார்.
டேட்டிங் கலாச்சாரம் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், காதலியை கண்டுபிடிக்க ஆன்லைன் தளங்களில் விண்ணப்பிக்கும் நிலையில், 70 வயது முதியவர் ஒருவர் தனது காதலியை கண்டுபிடிக்க வாரம் தோறும் ரூ.33 ஆயிரம் செலவிடுகிறார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் அல் கில்பெர்டி. கடந்த 2015-ம் ஆண்டு முதல் தனிமையில் வசித்து வரும் இவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக தனது காதலியை தேடிய இவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சீட்வாட்டர் பகுதியில் 20 அடியில் விளம்பர பலகை வைத்துள்ளார். இதற்காக வாரத்திற்கு 400 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.33 ஆயிரம்) கட்டணம் செலுத்துகிறாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு விசுவாசமான ஒருவர் வேண்டும். அவர் உண்மையானவராகவும், எனது நலனில் அக்கறை கொண்டவராகவும் இருக்க வேண்டும். சரியான நபரை சந்திக்க நான் ஐரோப்பா வரை செல்வதற்கும் தயாராக இருக்கிறேன். எனக்கு ஓய்வூதிய வருமானம் இருக்கிறது. நான் என் வயதை பார்க்கவில்லை என்றார். அவர் வைத்துள்ள விளம்பர பலகையை பார்த்து 400-க்கும் மேற்பட்ட அழைப்புகள், 50-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வந்துள்ளது. எனினும் அதில் பெரும்பாலும் பணம் கேட்டு வரும் நபர்களாகவே இருப்பதாகவும், சரியான காதலியை தேடிக்கொண்டிருப்பதாகவும் கில்பெர்டி கூறினார்.






