என் மலர்
உலகம்
- போலீசார் அங்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வட-மத்திய பகுதியில் ஆயுதமேந்திய கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் அடிக்கடி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் வேஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் நள்ளிரவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கும்பல் புகுந்தது. அவர்கள் வாசின் ஜுராக் சமூகத்தில் உள்ள கிராம மக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 40 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. இந்த பிராந்தியத்தில் நாடோடி மேய்ப்பர்கள்-கிராம விவசாயிகளுக்கு இடையே நீர், நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இதில் இருதரப்புக்கு மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்களும் நடந்தன.
இதுபோன்ற தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வியட்நாமின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் டோ லாம் இன்று (மே 22) பதவியேற்றுக்கொண்டார்.
- முக்கிய அரசாங்க உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்த நிலையில் இந்த ஊழல் விவகாரம் வியட்நாம் அரசியலில் பூதாகரமாக வெடித்தது.
வியட்நாமின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் டோ லாம் இன்று (மே 22) பதவியேற்றுக்கொண்டார். முந்தைய ஜனாதிபதி வோ வான் துவோங் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் பதவி விலகினார்.
முக்கிய அரசாங்க உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்த நிலையில் இந்த ஊழல் விவகாரம் வியட்நாம் அரசியலில் பூதாகரமாக வெடித்தது.
ஊழல் தடுப்பு குழுவின் துணைத் தலைவராக தற்போது ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள டோ லாம் இருந்த நிலையில் தனது அரசியல் போட்டியாளர்களை வீழ்த்துவதற்காக இந்த ஊழல் விவகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டார் என்ற குற்றச்சாட்டும் அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது.

இன்று தனது பதவியேற்பின்போது உரையாற்றிய டோ லாம் கூறுகையில் ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்குத் தான் உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 66 வயதான டோ லாம், 2016 ஆம் ஆண்டு முதல் பொது பாதுகாப்பு அமைச்சராக இருந்து வருகிறார், மேலும் வியட்நாம் மனித உரிமை இயக்கங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் ஆவார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில், வியட்நாம் நான்கு நபர்களைக் கொண்ட தலைமைக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது, அதில் அதிபர், பிரதம மந்திரி மற்றும் தேசிய சட்டமன்றத்தின் தலைவர் ஆகியோர் அடங்குவர். அதிபரை அரசுப் பிரதிநிதிகளின் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுகின்றனர்.
முன்னதாக முந்தைய அதிபர் வோ வான் துவோங் அதிபராகி ஒரு வருடமே பதவியிலிருந்த நிலையில் ஊழலுக்காகத் தனது அதிகாரங்களை துஷ்ப்ரயோகம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு எதிரான ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் வலுவாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் ராஜினாமா செய்தார். அவரைத்தொடர்ந்து தேசிய சட்டமன்றத் தலைவரும் கடந்த மாதம் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

- இஸ்ரேல் நடத்தும் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
- இஸ்ரேல் மீது தென் ஆப்பிரிக்கா குற்றம் சாட்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இஸ்ரேல் மீது தென் ஆப்பிரிக்கா குற்றம் சாட்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையில் எந்தவொரு ஒற்றுமையும் இல்லை என்றார்.
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தும் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
காசாவில் இனப்படுகொலை நடப்பதாக இஸ்ரேல் மீது தென் ஆப்பிரிக்கா குற்றம் சாட்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் வாதிடும்போது, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் காலன்ட் மற்றும் ஹமாஸ் தலைவர்கள் இஸ்மாயில் ஹனியே, முகமது தியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரி, யாஹ்யா சின்வர் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும்" என்று கோரினார். இதற்கு பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கும் கோரிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, இஸ்ரேல் தலைவர்களுக்கு எதிரான கைது வாரண்டுகளுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விண்ணப்பத்தை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையில் எந்தவொரு ஒற்றுமையும் இல்லை என்றார்.
- மே 18-ந்தேதி தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக கடைபிடிக்க அங்கீகாரம்.
- இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வலுவான நாடாக கனடா உள்ளது.
விடுதலைப்புலிகள்- இலங்கை ராணுவத்திற்கு இடையிலான சண்டை 2009-ம் ஆணடு உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்த சண்டையில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இளைஞர்கள் மாயமானர்கள்.
விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவத்தின் நடவடிக்கை இனப்படுகொலை என அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தின. ஆனால் இலங்கை அரசு குற்றச்சாட்டை மறுத்து வருகின்றன.
இந்த நிலையில் மே 18-ந்தேதி தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக கடைபிடிக்க கனடா பாராளுமன்றத்தில் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில் "மோதலின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி மற்றும் பொறுப்பேற்றல், இலங்கையில் அனைவரும் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு நாங்கள் எப்போதும் வாதிடுவோம். 2023-ல், ஆயுதப்போரின் போது நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையில், நான்கு முன்னாள் இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக நாங்கள் பொருளாதாரத் தடைகளை விதித்தோம்.
இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வலுவான நாடாக கனடா உள்ளது. கனடா மதம், நம்பிக்கை மற்றும் பன்மைத்துவ சுதந்திரத்தை மதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தும்" என்றார்.
இதற்கு இலங்கை அரசு, வாக்கு வங்கி அரசியலுக்காக விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது இனப்படுகொலை நடைபெற்றதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டுகிறார் எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-
இனப்படுகொலை என்ற மூர்க்கத்தனமான குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் முந்தைய அனைத்து தகவல் தொடர்புகளிலும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், ஐ.நா சாசனத்தின் கொள்கைகளுக்கு மாறாக, தனிநாடு வலியுறுத்தி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட ஆயுதமேந்திய பிரிவினைவாத பயங்கரவாத மோதலின் முடிவுடன் தொடர்புடையது. விடுதலைப்புலிகள் இயக்கம் கனடா உட்பட உலகளவில் 33 நாடுகளில் பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்டதாகும்.
இவ்வாறு இலங்கை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் கார் விபத்து ஏற்பட்டது.
- இதில் 2 பெண் உள்பட இந்திய மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் படித்த 5 இந்திய மாணவர்கள் சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் ஆர்யன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா, அன்வி சர்மா ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணையில், கார் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கார் விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதில் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது.
- தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தாய்லாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம், தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புகிறோம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதில் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், போயிங் 777-300ER விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:45 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது என்றும் இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தாய்லாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம், தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புகிறோம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்ததாகத் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதைக் குறிப்பிடவில்லை. விபத்து தொடர்பான ரேடார் பதிவுகளில், விமானம் 37,000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது மூன்று நிமிடங்களில் 31,000 அடிக்குக் கீழே இறங்கியது. பின் அங்கிருந்து வேகமாக இறங்கி அரை மணி நேரத்திற்குள் பாங்காக்கில் தரையிறங்கியது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் இதுவரை இதுவரை மொத்தம் ஏழு விபத்துகளைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- தைவானை மிரட்டுவதை சீனா நிறுத்திக்கொள்ள வேண்டும் என அதிபர் லாய் எச்சரித்தார்.
- தைவானின் புதிய அதிபர் லாய் சிங் டேவுக்கு தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தைபே:
தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் சிங் டே சமீபத்தில் பதவியேற்றார். தைபே நகரத்தில் உள்ள அதிபர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
தைவான் நாட்டை சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது. சமீபகாலமாக சீனாவிடம் இருந்து தைவானுக்கு ராணுவ அழுத்தம் அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்றார். அவரை ஒரு பிரிவினைவாதி என சீனா விமர்சித்துள்ளது.
இதற்கிடையே, பதவியேற்பு விழாவின்போது பேசிய வில்லியம் லாய், தைவானை மிரட்டுவதை சீனா நிறுத்திக் கொள்ளவேண்டும். தைவானின் ஜனநாயகத்தை சீனா ஏற்றுக்கொள்ள வேண்டும். சீனாவின் அச்சுறுத்தலைக் கண்டு தைவான் பின்வாங்காது. தைவானுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில், தைவானின் புதிய அதிபர் லாய் சிங் டேவுக்கு தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தலாய் லாமா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தைவானில் ஜனநாயகம் எவ்வளவு உறுதியாக வேரூன்றியுள்ளது என்பதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. தைவான் மக்கள் ஒரு செழிப்பான, வலுவான ஜனநாயகத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், பெரும் செழுமையையும் அடைந்துள்ளனர், அதே நேரத்தில் அவர்களின் வளமான கலாசார பாரம்பரியங்களையும் பாதுகாத்துள்ளனர். தைவான் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் உள்ள சவால்களை சந்திப்பதில் நீங்கள் ஒவ்வொரு வெற்றியையும் பெற விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
- பனி சிகரத்தில் நடைபெற்ற பிரமாண்ட திருமண காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது.
- மணமக்களின் குடும்பத்தினர் மணமக்களை உற்சாகப்படுத்திய காட்சிகளும் அதில் உள்ளது.
திருமணத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலர் தங்களது திருமணம் பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் நடைபெற வேண்டும் என நினைப்பார்கள். சிலர் எளிமையான முறையில் திருமணத்தை நடத்துவார்கள். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பனி சிகரத்தில் நடைபெற்ற பிரமாண்ட திருமண காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஸ்னோ அல்பைன் சிகரங்களில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. 2,222 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பனி சிகரத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தின் போது மணமக்கள் ஐஸ்கியூப்பில் இருந்து வெளிப்படும் காட்சிகள் மற்றும் வீடியோவின் பின்னணியில் இசை தொகுப்பு ஆகியவை பயனர்களை கவர்ந்துள்ளது. மணமக்களின் குடும்பத்தினர் மணமக்களை உற்சாகப்படுத்திய காட்சிகளும் அதில் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை குவித்த நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சி இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
- தென்கிழக்கு ஆசியாவின் தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஐரோப்பா மற்றும் அதற்கு 17 நாடுகள் மற்றும் ஆறு கண்டங்களில் இருந்து 280 கரப்பான் பூச்சிகளின் மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
உலகம் முழுவதும் பரவியுள்ள ஜெர்மன் கரப்பான் பூச்சி இனம், சுமார் 2,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சி இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவின் தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஐரோப்பா மற்றும் அதற்கு 17 நாடுகள் மற்றும் ஆறு கண்டங்களில் இருந்து 280 கரப்பான் பூச்சிகளின் மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கரப்பான் பூச்சிகள் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவிலிருந்து மேற்கு நோக்கியும் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் நோக்கியும் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் சுமார் 270 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வீரர்கள் ஆசியாவிலிருந்து வர்த்தக பாதைகளில் ஐரோப்பாவிற்கு பயணித்த போது, அவர்களின் ரொட்டி கூடைகளில் கரப்பான் பூச்சிகள் ஏறி ஐரோப்பாவிற்குப் பயணித்து அங்கு அதிகம் பரவியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அந்த காலகட்டங்களில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட நீராவி இயந்திரம் மற்றும் கடிதத்துக்கு உட்புறமாகக் குழாய்கள் போன்ற கண்டுபிடிப்புகள் பூச்சிகள் மேலும் பயணிக்கவும், உட்புறமாக வசதியாக வாழவும் உதவியது. கரப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அவற்றின் பரவலை ஆராய்வது உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

- இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதலில் ஈடுபட்டது.
- போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது.
காசா:
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கானோரை பிணைக் கைதிகளாக சிறை பிடித்தது.
போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், போரை நிறுத்துங்கள் என பாலஸ்தீன சிறுவனின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக அந்த வீடியோவில் சிறுவன் கூறியதாவது:
தயவுசெய்து போரை நிறுத்துங்கள். இங்கு மனிதர்களை பார்க்க முடிவதில்லை. எங்களுக்கென எதுவும் இல்லை. நாங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறோம்.
காசாவில் மக்கள் மடிந்து வருகின்றனர். ஆனால் உலகம் எங்களிடம் பொய் சொல்லி வருகிறது. அவர்கள் இது ஆக்கிரமிப்பு எனக்கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் உண்மையை சொல்வதில்லை. என அழுதபடியே கூறுகிறார்.
போரை நிறுத்துங்கள் எனக்கூறும் காசா சிறுவனின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு மந்திரி உட்பட அனைவரும் விபத்தில் உயிரிழந்தது நேற்று (மே 20) காலை உறுதிசெய்யப்பட்டது.
- ஈரானின் அரசியலமைப்பின் 131வது பிரிவின்படி, அதிபர் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், துணை அதிபர் அவரின் கடமைகளைச் செய்ய அதிகாரமுடையவர் ஆவார்.
ஈரானின் 14 வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உட்பட அவருடன் வந்த முக்கிய அரசு உறுப்பினர்கள் அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே வர்சகான் கவுண்டி என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.
மோசமான வானிலைக்கு மத்தியில் ஹெலிகாப்டர் விழுந்த இடத்துக்கு மீட்டுப்படை சென்றது. பின் இந்த விபத்தில் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு மந்திரி உட்பட அனைவரும் விபத்தில் உயிரிழந்தது நேற்று (மே 20) காலை உறுதிசெய்யப்பட்டது. விபத்து தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரான் நாட்டின் தற்காலிக அதிபராகத் துணை அதிபர் முகமது மொக்பர் பதவியேற்றார். இந்நிலையில் ஈரான் நாட்டின் 14வது அதிபர் தேர்தல் ஜூன் 28ம் தேதி நடைபெறும் என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிபர் முகமது மொக்பர், நிதித்துறைத் தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி-எஜே மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் கலிபாஃப் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான துணைத் தலைவர் முகமது டெஹ்கான் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தேர்தல் தேதி தீர்மானிக்கப்பட்டது.

ஈரானின் அரசியலமைப்பின் 131வது பிரிவின்படி, அதிபர் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், துணை அதிபர் அவரின் கடமைகளைச் செய்ய அதிகாரமுடையவர் ஆவார். மேலும், அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய இடைக்கால அதிபர் கடமைப்பட்டவர் ஆவார். இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இந்தியா இன்று (மே 21) துக்க தினம் அனுசரிப்பது குறிப்பிடத்தக்கது.
- ஆளுங்கட்சி உடைந்து பிரசந்தா தலைமையிலான ஆட்சி கவிழும் வாய்ப்பு நிலவியது.
- ஒரு வாக்கு வித்தியாசத்தில் நேபாள பிரதமர் பிரசந்தா வெற்றி பெற்றார்.
காத்மாண்டு:
நேபாளத்தில் பிரதமர் புஷ்பா கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. கூட்டணி கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டதன் காரணமாக துணை பிரதமராக பதவி வகித்து வந்த கூட்டணி கட்சி தலைவர் உபேந்திரா யாதவ் திடீரென ராஜினாமா செய்தார். மேலும் தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சியையும் தொடங்கினார்.
இதனால் ஆளுங்கட்சி உடைந்து பிரசந்தா தலைமையிலான ஆட்சி கவிழும் வாய்ப்பு நிலவியது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வெற்றி பேற வேண்டிய கட்டாயத்தில் பிரசந்தாவின் ஆட்சி அமைந்தது. இந்தநிலையில் நேற்று நேபாள நாடாளுமன்றத்தில் பிரசந்தா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஒரு வாக்கு வித்தியாசத்தில் நேபாள பிரதமர் பிரசந்தா வெற்றி பெற்றார்.






