search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vote Of Confidence"

    • நேபாள பாராளுமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
    • மொத்தமுள்ள 268 வாக்குகளில் பிரசந்தாவுக்கு ஆதரவாக 157 வாக்குகள் பதிவாகின.

    காத்மாண்டு:

    நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

    அதன்பின் கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதையடுத்து, நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் நீடித்தார் பிரசந்தா.

    இதற்கிடையே, நேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேபாள காங்கிரசுடனான கூட்டணியை முறித்த பிரசந்தா, மீண்டும் சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.

    அரசியலமைப்பு விதிகளின்படி எந்தவொரு கூட்டணி கட்சியும் அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற பிறகு 30 நாட்களுக்குள் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். எனவே, வரும் 13-ம் தேதி பாராளுமன்றம் கூடும்போது, பிரதமர் பிரசந்தா நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்டாயம் அவையில் இருக்கவேண்டும் என அனைத்து உறுப்பினர்களுக்கும் கொறடா உத்தரவு பிறப்பித்தார்.

    இந்நிலையில், நேபாள பாராளுமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 268 வாக்குகளில் பிரசந்தாவுக்கு ஆதரவாக 157 வாக்குகளும், அவருக்கு எதிராக 110 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசந்தா வெற்றி பெற்றுள்ளார்.

    பிரசந்தா பிரதமர் ஆன பிறகு பாராளுமன்றத்தில் நடத்தப்படும் மூன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 174 வாக்குகளை பெற்று ஷெரிஃப் பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
    • பிலாவல் பூட்டோ சர்தாரி அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் நீதித்துறை மற்றும் அரசுக்கும் இடையே உள்ள கருத்து மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், திடீர் திருப்பமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

    பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி செய்வதை நிரூபிக்கும் நோக்கில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் வெளியுறவு துறை மந்திரியுமான பிலாவல் பூட்டோ சர்தாரி அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார். மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களில், இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 180 பேர் வாக்களித்தனர்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஷெரிஃப் பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட போது 174 வாக்குகளை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    "மியன் முகமது ஷெபாஸ் ஷெரிஃப் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்," என்று சபாநாயகர் ராஜா பெர்வைஸ் அஷ்ரஃப் அறிவித்தார்.

    சபாநாயகரின் இந்த அறிவிப்பின் போது அவை உறுப்பினர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் மேசையை ஆரவாரமாக தட்டினர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் ஷெரிஃப் அவையில் உரையாற்றிய போது தனக்கு ஆதராவக வாக்களித்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

    ×