ஜூலை 21-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நேபாள பிரதமர் சர்மா ஒலி

நேபாளத்தின் பிரதமராக நான்காவது முறையாக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார்.பிரதிநிதிகள் சபையில் 30 நாளுக்குள் நேபாள பிரதமர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
ஜூலை 21-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நேபாள பிரதமர் சர்மா ஒலி
Published on

காத்மண்டு:

நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை எந்தக் கட்சியும் பெறவில்லை. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சி தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

அதன்பின் கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி திரும்பப் பெற்றதால், நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் பிரசந்தா நீடித்தார்.

இதற்கிடையே, சில வாரங்களுக்கு முன் நேபாளத்தின் மிகப் பெரிய கட்சிகளான நேபாள காங்கிரஸ் மற்றும் சிபிஎன்-யுஎம்எல் இடையே கூட்டணி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டது. இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைக்க ஒப்புக் கொண்டதால், பிரதமர் பிரசந்தா பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை நேபாள பிரதிநிதிகள் சபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசந்தா தோல்வி அடைந்தார். அவருக்கு ஆதரவாக 63 வாக்குகள் மட்டும் கிடைத்தன. எதிராக 194 வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து, நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி. சர்மா ஒலி சமீபத்தில் பதவியேற்றார். நேபாள அரசியலமைப்பு விதியின்படி, பிரதிநிதிகள் சபையில் 30 நாளுக்குள் பிரதமர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தற்போது கூட்டணி அமைத்துள்ள நேபாளி காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்-யுஎம்எல் கட்சியும் 167 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதால் சர்மா ஒலி நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நேபாள பாராளுமன்றத்தில் பிரதமர் சர்மா ஒலி அரசு மீது ஜூலை 21-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com