என் மலர்
உலகம்
- ராணுவ நெருக்கடி நிலையின்போது ஆங் சான் சூகி அடைக்கப்பட்டிருந்த வீடு கையகப்படுத்தப்பட்டது.
- ஏலம் விடப்பட்ட அந்த வீட்டை யாரும் வாங்க முன்வரவில்லை.
நேபிடாவ்:
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் இருந்து போராடியவர் ஆங் சான் சூகி. இதற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருந்தார். இவருடைய தொடர் போராட்டம் காரணமாக அங்கு ராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு 2015-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி வெற்றி பெற்று அந்த நாட்டின் தலைவராக பதவியேற்றார். தொடர்ந்து 2020-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்லில் 81 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார். 2021-ம் ஆண்டு அந்த நாட்டை மீண்டும் ராணுவம் ஆட்சிக்குள் கொண்வரப்பட்டது. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் உள்ள ஆங் சான் சூகியை விடுதலை செய்யக்கோரி அங்கு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது அந்த நாட்டின் ராணுவம் கோர முகத்தை காட்டி அடக்கி வருகிறது. மியான்மரில் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வரும்நிலையில் ஆங் சான் சூகிக்கு சொந்தமான சொத்துகளை ராணுவம் விற்று பொருளாதார இழப்பை சரிகட்டி வருகிறது.
ராணுவ நெருக்கடி நிலையின்போது ஆங் சான் சூகி அடைக்கப்பட்டிருந்த வீடு கையகப்படுத்தப்பட்டது. மேலும் அதனை ஏலம் விட ராணுவம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் ஏலம் விடப்பட்ட அந்த வீட்டை யாரும் வாங்க முன்வரவில்லை.
வரலாற்று சிறப்பு வாய்ந்த நினைவு சின்னமாக கருதப்படும் அந்த குட்டி பங்களா, யங்கூனில் உள்ள இனியே ஏரிக்கரையில் கட்டப்பட்டது. சூகியின் தந்தையும், அந்த நாட்டின் விடுதலை போராட்ட வீரரான ராணுவ தளபதி ஆங் சாங்கும் வசித்து வந்த பூர்வீக வீடாக அது உள்ளது. அந்த வீடுதான் ஆங் சான் சூகி 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டு அறவழியில் போராட வழிவகுத்தது.
மேலும் நோபல் பரிசையும் பெற்று தந்தது. அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், ஐ.நா சபை முன்னாள் பொதுச்செயலாளர் பான்-கி-மூன் முதலியவர்கள் அந்த வீட்டில் வைத்துதான் ஆங் சான் சூகியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஏலம் விடும் முயற்சி தோல்வியில் முடிந்தது அந்த நாட்டின் ராணுவத்துக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
- ஐரோப்பிய யூனியன் உறுதி கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
- காசா எதிர்கால பாலஸ்தீனத்தின் ஒருங்கிணைந்த பகுதி.
பாலஸ்தீன அரசின் இன்றியமையாத பகுதியாக காசா இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு கொள்கை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் பாலஸ்தீனியர்களுக்கு இருநாட்டு தீர்வை வழங்க ஐரோப்பிய யூனியன் உறுதி கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
"அதிபர் டிரம்பின் கருத்துக்களை கவனத்தில் கொண்டிருக்கிறோம். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு நீண்டகால அமைதியை வழங்குவதற்கான ஒரே வழி இருநாட்டு தீர்வு மட்டும் தான் என்பதை உறதியாக நம்புகிறோம். காசா எதிர்கால பாலஸ்தீனத்தின் ஒருங்கிணைந்த பகுதி," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட காசாவை கையகப்படுத்தி, அங்குள்ள பாலஸ்தீனியர்களை வேறு நாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். அதிபர் டிரம்பின் கருத்துக்கு உலகளவில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இதுதவிர அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகுவதாக அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. முதலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து இஸ்ரேல் விலகுவதாக அறிவித்தார்.
- யூத விரோதத்தைப் பரப்புவதில் கவனம் செலுத்தியுள்ளது.
- இஸ்ரேல் இனி இந்த பாகுபாட்டை ஏற்றுக்கொள்ளாது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து இஸ்ரேல் விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார். இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகும் அதிபர் டிரம்பின் முடிவை இஸ்ரேல் வரவேற்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இஸ்ரேலும் இணைந்து கொள்கிறது. மேலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் (UNHRC) இஸ்ரேல் பங்கேற்காது," என குறிப்பிட்டுள்ளார்.
"மனித உரிமைகளை மீறுபவர்களை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பாதுகாத்து அவர்களை ஒளிந்து கொள்ள அனுமதிப்பதன் மூலம், UNHRC மத்திய கிழக்கில் உள்ள ஒரே ஜனநாயகமான இஸ்ரேலை பேய்த்தனமாக சித்தரிக்கிறது. இந்த அமைப்பு மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, ஒரு ஜனநாயக நாட்டைத் தாக்குவதிலும், யூத விரோதத்தைப் பரப்புவதிலும் கவனம் செலுத்தியுள்ளது".
"எங்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்படுவது தெளிவாகத் தெரிகிறது. UNHRC-யில், இஸ்ரேல் மட்டுமே அதற்கென மட்டுமே உருவாக்கப்பட்ட தனி விதிகளை கொண்ட ஒரே நாடு. இஸ்ரேல் 100க்கும் மேற்பட்ட கண்டனத் தீர்மானங்களுக்கு உள்ளாகியுள்ளது. இது கவுன்சிலில் இதுவரை நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களிலும் 20% க்கும் அதிகமானவை. ஈரான், கியூபா, வட கொரியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு எதிரானதை விட அதிகம். இஸ்ரேல் இனி இந்த பாகுபாட்டை ஏற்றுக்கொள்ளாது!" என்று அவர் மேலும் கூறினார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
- ஷேக் ஹசீனா ஆன்லைனில் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.
- அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன.
டாக்கா:
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நடந்த மாணவர் போராட்டத்தில் பெரிய வன்முறை வெடித்ததன் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அங்கு இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பு வகித்து வருகிறார்.
வங்கதேசத்தில் நடைபெறவுள்ள பொதுத்தோ்தலில் போட்டியிட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அனுமதிக்கப்பட மாட்டாது என இடைக்கால அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
இதற்கிடையே, அவாமி லீக்கின் தற்போது கலைக்கப்பட்ட மாணவர் பிரிவான சத்ரா லீக், ஷேக் ஹசீனா ஆன்லைன் வாயிலாக உரை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி நேற்று இரவு ஷேக் ஹசீனா உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் பிரதமர் ஷேக் ஹசீனா நேரலையாக ஆன்லைனில் உரையாற்ற இருப்பதாக தகவல் பரவியது.
இந்நிலையில், வங்கதேசத்தில் அவாமி லீக்கை தடை செய்யக் கோரி, டாக்காவில் உள்ள ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடம் மற்றும் வீட்டை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி தீ வைத்தனர்.
போராட்டக் குழு டாக்காவில் உள்ள அவரது வீட்டை சேதப்படுத்தி தீ வைத்தது. போராட்டக்காரர்கள் பலர் வீட்டின் இரண்டாவது மாடியில் ஏறி, கடப்பாரைகள் மற்றும் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உருவப்படத்தை சேதப்படுத்தினர்
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- நைஜீரியாவில் உள்ள பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது.
- இதில் 17 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அபுஜா:
நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தின் கவுரன் நமோதா பகுதியில் இஸ்லாமிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.
நேற்று இரவு இப்பள்ளி அருகில் இருந்த வீட்டில் தீப்பிடித்தது. இது அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவி பள்ளிக்கூடத்தையும் தாக்கியது.
இரவு நேரமானதால், குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்ததால் தீப்பிடித்தது தெரியவில்லை. இதனால் தீயில் கருகி 17 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.
- பாகிஸ்தான்- சீனா எப்போதும் நட்பு நாடுகளாக இருக்கும். எந்த காலத்திலும் நட்பு நாடுகளாக இருக்கும்.
- உலகில் எத்தனை பயங்கரவாதங்கள், எத்தனை பிரச்சனைகள் எழுந்தாலும் பாகிஸ்தான் மக்கள் சீன மக்களுடன் நிற்பார்கள்.
பாகிஸ்தான்- சீனா இடையிலான நட்பை பயங்கரவாத தாக்குதலால் முடிவுக்கு கொண்டு வரமுடியாது என பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆசிஃப் அலி சர்தாரி கூறுகையில் "பாகிஸ்தான்- சீனா எப்போதும் நட்பு நாடுகளாக இருக்கும். எந்த காலத்திலும் நட்பு நாடுகளாக இருக்கும். உலகில் எத்தனை பயங்கரவாதங்கள், எத்தனை பிரச்சனைகள் எழுந்தாலும் நான் நிற்பேன், பாகிஸ்தான் மக்கள் சீன மக்களுடன் நிற்பார்கள்.
இரு நாடுகளுக்கு இடையிலான நட்பில் ஏற்றம் இறக்கும் இருக்கும். ஆனால், இது பயங்கரவாத தாக்குதல்களால் உடையாது" என்றார்.
4 நாள் சுற்றுப் பயணமாக பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி சீனா சென்றுள்ளார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த பல ஊழியர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் நடைபெற்ற இரண்டு தனித்தனி தாக்குதல்களில் சீனாவைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர். இதனைக் கருத்தில் கொண்டுதான் ஆசிஃப் அலி சர்தாரி அவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பல கோடி ரூபாய் அளவிலான போக்குவரத்து கட்டமைப்பு பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளில் சீனா ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
- அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, எல் சால்வடோர் அதிபர் நயீப் புக்கேல் சந்திப்பு நிகழ்ந்தது.
- ஆவணங்களின்றி தங்கியுள்ளவரை தேடும் பணியில் அந்நாட்டு குடிவரவு (கஸ்டம்ஸ்) அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வருபவர்களை நாடு கடத்த அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்றும் அவர்களால் அமெரிக்கவில் பல்வேறு குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன என்றும் நாடுகடத்தலை டிரம்ப் நியாயப்படுத்தி வருகிறார். பிரேசில், கொலம்பியா, இந்தியா ஆகிய நாட்டினர் நூற்றுக்கணக்கானோர் ஏற்கனவே நாடுகடத்தப்பட்டனர்.
அமெரிக்காவில் ஆவணங்களின்றி தங்கியுள்ளவரை தேடும் பணியில் அந்நாட்டு குடிவரவு (கஸ்டம்ஸ்) அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் எந்த நாட்டு குடிமக்களையும் வரவேற்பதாக லத்தீன் அமெரிக்க நாடான எல்- சால்வடோர் தெரிவித்துள்ளது. ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது.
கடந்த திங்கள்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, எல் சால்வடோர் அதிபர் நயீப் புக்கேல் (Nayib bukele) சந்திப்பு நிகழ்ந்தது.

இதன்பின் பேசிய மார்கோ ரூபியோ அமெரிக்காவில் உள்ள எந்தவொரு சட்டவிரோத வெளிநாட்டினரையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஆபத்தான கைதிகளையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக நயீப் புக்கேல் உறுதி அளித்துள்ளார்.
அவர்களை தங்கள் நாட்டு சிறையில் அடைத்து வைக்கும் திட்டத்தை புக்கேல் முன்வைத்துள்ளார் . அவ்வாறு எல் சால்வடோருக்கு நாடு கடத்தப்படுபவர்கள் CECOT எனப்படும் மிகப்பெரிய அதி பாதுகாப்பு வாய்ந்த சிறையில் அடைக்கும் திட்டத்தை புக்கேல் டிரம்பிடம் முன்மொழித்துள்ளார் என்று தெரிவித்தார்.
இங்கு கைதிகள் ஜன்னல்கள் இல்லாத அறைகளில் அடைக்கப்படுவர். மெத்தை இல்லாமல் இரும்புப் படுக்கைகளில்தான் தூங்க வேண்டும். உறவினர்கள், நண்பர்கள் என யார் வந்து பார்ப்பதற்கும் தடை விதிக்கப்படும். அவர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவர்.

இந்த திட்டம் குறித்து தனது ஓவல் அலுவலகத்தில் பேட்டியளித்த டொனால்டு டிரம்ப், "அதைச் செய்ய எங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை இருந்தால், நான் அதை மனப்பூர்வமாக செய்வேன். இது நமது சிறைச்சாலை முறையை விட வேறுபட்டதல்ல, மேலும் இது மிகவும் மலிவானதாக இருக்கும்.
குற்றவாளிகளை எல் சால்வடாருக்கு அனுப்புவது தனியார் சிறைகளுக்கு நாம் செலுத்தும் கட்டணத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த கட்டணமாக இருக்கும். இந்த மக்கள் ஒருபோதும் நல்லவர்களாக இருக்கப் போவதில்லை, எனவே அவர்களை அங்குள்ள சிறைக்கு அனுப்புவது சிறந்தது. இந்த திட்டத்தை பரிசீலித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
- கேக்கை வாங்கிய காதலி ஆசை ஆசையாக சாப்பிட்டுள்ளார்.
- அவரது வாயில் ஏதே வித்தியாசமாக கடிபடுவதை உணர்ந்தார்.
காதலர்கள் தங்கள் துணையின் மனம் கவர்வதற்காக வித்தியாசமான வழிகளை கையாள்வார்கள். அந்த வகையில் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி கேக் ஒன்றை தயாரித்து அதற்குள் தங்க மோதிரம் ஒன்றையும் வைத்துள்ளார். பின்னர் காதலியை வீட்டிற்கு வரவழைத்து கேக் கொடுத்துள்ளார். அதை வாங்கிய காதலி ஆசை ஆசையாக சாப்பிட்டுள்ளார். அப்போது அவரது வாயில் ஏதே வித்தியாசமாக கடிபடுவதை உணர்ந்தார்.
பின்னர் சுதாரித்து கொண்டு அதை வெளியே எடுத்து பார்த்த போது தான், தனது காதலர் இன்ப அதிர்ச்சியாக கேக்கில் மோதிரத்தை மறைத்து வைத்தது தெரிய வந்தது. இதனால் அவரது காதல் முன்மொழிவு நிகழ்ச்சி கலகலப்பாக இருந்ததாக கூறி வாலிபர் இந்த சம்பவத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அது வைரலாக பரவியது.
- ஆலோசகர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
- ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவோம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும்போது, ஈரான் என்னைக் படுகொலை செய்தால் அதை அழிக்க வேண்டும் என்று எனது ஆலோசகர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
அங்கு எதுவும் மிஞ்சாது. அணு ஆயுதங்களை உருவாக்கும் விவகாரத்தில் ஈரானுக்கு எதிராக அதிகபட்ச அழுத்தம் கொள்கையை மீண்டும் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளேன்.
ஈரானுக்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகள் கொள்கையை மீண்டும் அமல்படுத்தும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். இது எனக்கு மிகவும் எரிச்சலூட்டும் ஒன்று.
எல்லோரும் நான் கையெழுத்திட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது ஈரானுக்கு மிகவும் கடினமானது. இதை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை என்று நம்புகிறேன்.
நான் அதை செய்வதில் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் நாம் வலுவாக இருக்க வேண்டும். ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவோம், அனைவரும் ஒன்றாக வாழலாம் என்றார்.
- பால்ஸ்தீன நகரமான காசாவை அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியுள்ளார்.
- இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்காவுக்கு சென்றுள்ள்ளார்.
கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.
முன்னதாக ஜெனீவா காலநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். பல்வேறு வளரும், பின்தங்கிய நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த யுஎன்- எய்ட் நிதியை நிறுத்தினார்.
இந்நிலையில் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) உட்பட ஐக்கிய நாடுகள் (ஐநா) சபையின் பல்வேறு அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பான நிர்வாக உத்தரவில் நேற்று அவர் கையெழுத்திட்டார். மேலும் பாலஸ்தீனியர்களுக்கான ஐ.நா. நிவாரண அமைப்பு (UNRWA) நிதியையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) செய்லபாடுகள் குறித்த மறுஆய்வுக்கும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஐ.நா. அமைப்புகளுக்குள் "அமெரிக்க எதிர்ப்பு" இருப்பதாக கருதப்படுவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை செயலாளர் வில் ஷார்ஃப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்காவுக்கு சென்று நேற்று டிரம்பை சந்தித்ததும் பாலஸ்தீனியர்களுக்கான ஐ.நா. நிவாரண அமைப்பு (UNRWA) நிதியை டிரம்ப் நிறுத்திவைத்துள்ளது தற்செயலானது அல்ல.

UNRWA ஹமாஸ் அமைப்பினருக்கு அடைக்கலம் வழங்குகிறது என நேதன்யாகு ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் அதனை UNRWA திட்டவட்டமாக மறுத்தது. இதைத்தொடர்ந்து 2024 இல் அமெரிக்கா UNRWA நிதியை தாற்காலிகமாக நிறுத்தியது. இந்நிலையில் டிரம்ப் தற்போது அந்த தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
13 மாதகால போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 62 ஆயிரம் பேர் உயிரிழந்த காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளுக்குள் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை நோக்கி மீண்டும் திரும்பி வருகின்றனர்.

லட்சக்கணக்கானோருக்கு மருத்துவ உதவிகளும் மனிதாபினான உதவிகளும் தேவைப்படும் சூழலில் UNRWA நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. பால்ஸ்தீன நகரமான காசாவை அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தற்போது முட்டை விலை 7.08 அமெரிக்க டாலராக உள்ளது.
- முன்பு இருந்த விலையை விட 7 மடங்கு அதிகம்.
அமெரிக்காவில் முட்டை பற்றாக்குறை இருந்து வருகிறது. பறவை காய்ச்சல் காரணமாக லட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டதால் முட்டைக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஒரு டஜன் பெரிய முட்டைகள் தற்போது 7.08 அமெரிக்க டாலராக உள்ளது. இது 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலையை விட 7 மடங்கு அதிகம் என்று அமெரிக்க வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பென்சில்வேனியாவில் ஒரு விநியோக மையத்தில் இருந்து ஒரு லட்சம் முட்டைகளை கும்பல் ஒன்று திருடி சென்றுள்ளது. இதன் மதிப்பு 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். (இந்திய மதிப்பில் ரூ.34 லட்சம்) ஆகும். இந்த திருட்டு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காசாவை கைப்பற்றுவதாக அமெரிக்க அதிபர் அறிவிப்பு.
- பாலஸ்தீனியர்கள் வேறு நாடுகளுக்கு செல்ல டிரம்ப் வலியுறுத்தல்.
காசா பகுதியை அமெரிக்கா கைப்ற்றிக் கொள்ளும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். மேலும், கையகப்படுத்தும் காசா பகுதியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்திற்கு பிறகு அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிபர் டிரம்ப் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்த பிறகு பேசிய அதிபர் டிரம்ப், "அமெரிக்கா காசா பகுதியை எடுத்துக் கொண்டு, அங்கு ஒரு வேலையை செய்ய உள்ளது. நாங்கள் அதற்கு உரிமம் கொள்வோம். அங்குள்ள வெடிக்காத வெடிகுண்டுகளை பாதுகாப்பாக அகற்றுவோம். நலப்பரப்பை சீர்ப்படுத்துவோம்."
"இடிந்துபோன கட்டிடங்களை அகற்றுவோம். பொருளாதார வளர்ச்சியை கொண்டுவந்து, எண்ணற்ற வேலைவாய்ப்பை உருவாக்குவோம். அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுப்போம்," என்று கூறினார்.
போரால் பாதிக்கப்பட்ட காசாவில் இருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேறி எகிப்து அல்லது ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.






