என் மலர்
உலகம்
- தரவுகளை சேகரிக்கவோ அல்லது சேமிக்கவோ நாங்கள் எந்த நிறுவனத்தையும் ஒருபோதும் கேட்டதில்லை.
- சீன நிறுவனங்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை நாங்கள் உறுதியாகப் பாதுகாப்போம்.
உலக அளவில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. அமெரிக்க நிறுவனமான ஓபன் ஏஐ உருவாக்கிய சாட்ஜிபிடி, கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ, மெட்டா ஏஐ, கார்க் ஏஐ ஆகியவற்றுடன் தற்போது சீனாவின் டீப்சீக் ஏஐ புதிதாக அறிமுகமாகியுள்ளது.
ஏஐ செயலியை பயன்படுத்தும்போது தரவுகள் திருடப்படலாம், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என சில நாடுகள் அச்சம் அடைகின்றன. குறிப்பாக டீப்சீக் ஏஐ குறித்து அச்சம் கொண்டுள்ளன.
இதனால் அமெரிக்க பாராளுமன்ற ஊழியர்கள் கணினி மற்றும் செல்போன்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என பாராளுமன்ற அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய நிதித்துறை அமைச்சகம் சாட்ஜிபிடி, டீப்சீக் உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்பங்களை அலுவலக பயன்பாட்டுக்கு உபயோகிக்க வேண்டாம் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவற்றால் அரசின் பாதுகாக்கப்பட்ட தரவுகள், ஆவணங்கள் ஆகியவற்றின் ரகசியத்தன்மை சீர்குலையும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளும் இதுபோன்ற பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி டீப்சீக் பயன்பாட்டை தடைசெய்துள்ளன.
இந்த நிலையில் டீப்சீக் செயலிக்கு கட்டுப்பாடு விதித்துள்ள நாடுகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
"சட்டங்களுக்கு எதிராக தரவுகளை சேகரிக்கவோ அல்லது சேமிக்கவோ நாங்கள் எந்த நிறுவனத்தையோ அல்லது தனி நபரையோ ஒருபோதும் கேட்டதில்லை, ஒருபோதும் கேட்க மாட்டோம்.
தேசிய பாதுகாப்பு என்ற கருத்தை மிகைப்படுத்தவோ அல்லது வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகளை அரசியலாக்கவோ எடுக்கும் நடவடிக்கைகளை சீனா எப்போதும் எதிர்த்து வருகிறது. சீன நிறுவனங்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை நாங்கள் உறுதியாகப் பாதுகாப்போம்" என சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
- ஜனவரி 2024 நிலவரப்படி, சுமார் 7,000 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இருந்தன.
- தினமும் 4 முதல் 5 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் செயலிழந்து வருகின்றன.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மூலம் இணைய தள வசதியை வழங்கி வருகிறது. இந்த செயற்கைக்கோள்கள் புவி வட்டப்பாதையில் ஒரு குறிப்பட்ட தொலைவில் நிலைநிறுத்தப்படும். ஜனவரி 2024 நிலவரப்படி, சுமார் 7,000 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இருந்தன.
இந்நிலையில், ஜனவரி மாதத்தில் மட்டும் 120க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் செயலிழந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்து தீப்பற்றி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமும் நான்கு முதல் ஐந்து ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மீண்டும் வளிமண்டலத்திற்குள் நுழைந்து எறிந்துவிடுவதாக வானியலாளர் ஜொனாதன் மெக்டோவல் பதிவிட்டுள்ளார்.
- காசாவில் ஓரினச்சேர்க்கை என்பது சட்டவிரோதமானது.
- ஹமாஸ் முன்னாள் தளபதி மஹ்மூத், ஓரினச்சேர்க்கை உறவு வைத்திருந்ததாகக் கூறி கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் நாட்டிற்குள் கடந்த 2023-ம் ஆண்டு நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.
பின்னர் அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்காரணமாக 2023 நவம்பர் மாதம் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது.
அப்போது 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப்பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன இளைஞர்கள், பெண்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஆண் இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி, தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்த தனது சொந்த அமைப்பினரை ஹமாஸ் சித்திரவதை செய்து தூக்கிலிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசாவில் ஓரினச்சேர்க்கை என்பது சட்டவிரோதமானது. இதற்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.
ஹமாஸ் முன்னாள் தளபதி மஹ்மூத் இஷ்டிவி, ஓரினச்சேர்க்கை உறவு வைத்திருந்ததாகக் கூறி 2016 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். ஹமாஸ் அவரை ஒரு வருடத்திற்கு சிறையில் அடைத்து சித்திரவதை செய்து, அவரது மார்பில் மூன்று முறை சுட்டு கொலை செய்தனர்.
- காதலனை கரம்பிடிக்க பாகிஸ்தானுக்கு வந்த ஓனிஜா மனமுடைந்தார்.
- பேட்டி வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கை சேர்ந்தவர் ஓனிஜா ஆண்ட்ரு ராபின்சன். 33 வயதான இவருக்கு ஆன்-லைன் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நிடல் அகமது மேமன் என்ற 19 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சமூக வலைதளம் மூலம் பேசி காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஓனிஜா ஆண்ட்ரு ராபின்சன் தனது காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு வந்துள்ளார். ஆனால் மேமனின் பெற்றோர் இந்த காதலை ஏற்கவில்லை. இதனால் அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டனர். எனவே காதலனை கரம்பிடிக்க பாகிஸ்தானுக்கு வந்த ஓனிஜா மனமுடைந்தார்.
ஆனால் அவர் அமெரிக்காவுக்கு திரும்பி செல்ல விரும்பவில்லை. மாறாக பாகிஸ்தானிலேயே இருக்க போவதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில், பாகிஸ்தானை புனரமைக்க வேண்டும் என்பதே எனது திட்டம். இதற்காக எனக்கு அரசாங்கம் ரூ.1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.87.39 லட்சம்) வேண்டும். இந்த வார இறுதிக்குள் குறிப்பிட்ட தொகையை ரொக்கமாக தர வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். இங்குள்ள தெருக்கள் எனக்கு பிடிக்கவில்லை. அதனை சரி செய்ய வேண்டும். பாகிஸ்தானுக்கு புதிய பஸ்கள், டாக்சிகள் மற்றும் கார்கள் தேவை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். அவரது இந்த பேட்டி வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- வீடு சிறியதாக இருந்த போதும் அதன் மாத வாடகை 2 ஆயிரம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.7 லட்சம்) என கூறுகிறார்.
- வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நியூயார்க் நகரிலேயே இதுதான் மிகச்சிறிய குளியலறையாக இருக்கலாம் என்று பதிவிட்டனர்.
உலகின் முக்கிய நகரங்களில் வீட்டு வாடகை மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள ஒரு மிகச்சிறய வீட்டிற்கு ரூ.1.7 லட்சம் வாடகை என இளம்பெண் பதிவு செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
எமிலி பொனானி என்ற பெண் இதுதொடர்பாக டிக்-டாக்கில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் லோயர் ஈஸ்ட் சைடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவரது வீடு இருப்பதை காட்டுகிறார். சுமார் 2.5 அடி முதல் 3 அடி வரை மட்டுமே இருக்கும் அந்த இடத்தில் மிகச்சிறிய குளியலறை மட்டுமே உள்ளது. வீடு சிறியதாக இருந்த போதும் அதன் மாத வாடகை 2 ஆயிரம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.7 லட்சம்) என கூறுகிறார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நியூயார்க் நகரிலேயே இதுதான் மிகச்சிறிய குளியலறையாக இருக்கலாம் என்று பதிவிட்டனர். மேலும் வாடகை வீடு தொடர்பான சவால்களை பற்றி பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டதால் எமிலியின் இந்த பதிவு விவாதத்தை ஏற்படுத்தியது.
- மனித மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல்
- சராசரியாக, ஆய்வு செய்யப்பட்ட மூளை மாதிரிகளில் சுமார் 7 கிராம் மைக்ரோபிளாஸ்டிக் இருந்துள்ளன
உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மனிதர்களுடைய மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது
நேச்சர் மெடிசின் என்ற ஆய்விதழில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பேசிய நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் ரீஜண்ட்ஸ் பேராசிரியரும் மருந்து அறிவியல் பேராசிரியருமான மாத்யூ காம்பன், "குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளில் மனித மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவது 50% அதிகரித்துள்ளது. சராசரியாக, ஆய்வு செய்யப்பட்ட மூளை மாதிரிகளில் சுமார் 7 கிராம் மைக்ரோபிளாஸ்டிக் இருந்துள்ளன. இது ஒரு பிளாஸ்டிக் ஸ்பூனில் எடைக்கு சமம் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "சிறுநீரகம் மற்றும் கல்லீரலை விட மூளையில் 7 முதல் 30 மடங்கு அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் உள்ளதாகவும் சராசரியாக 45 அல்லது 50 வயதுடைய சாதாரண நபர்களின் மூளை திசுக்களில் ஒரு கிராமுக்கு 4,800 மைக்ரோகிராம்கள் மைக்ரோபிளாஸ்டிக் இருந்தது என்றும் டிமென்சியா எனும் மராத்தி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் இதை விட 10 மடங்கு அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் இருந்ததாக" அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
- ரூ.45 லட்சம் கடன் வாங்கி அமெரிக்காவுக்கு அனுப்பினோம்.
- சட்ட விரோதமாக அனுப்பிய ஏஜென்டுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியேறிய வெளிநாட்டினர் விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், அமெரிக்காவில் ஆவணங்களின்றி சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 104 இந்தியர்கள் அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அந்த விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குருராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மதியம் தரை இறங்கியது.
இதில் பஞ்சாப், குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 104 பேர் வந்தனர். அவர்களிடம் அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக சென்றது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய பஞ்சாப்பின் ஹோஷியார்பூர் என்ற மாவட்டத்தை சேர்ந்த ஹர்விந்தர்சிங் கூறுகையில், அமெரிக்காவில் வேலைக்கான விசா தருவதாக ஒரு ஏஜென்டு கூறியதை நம்பி ரூ.42 லட்சம் கொடுத்தேன். கடைசி நிமிடத்தில் விசா கிடைக்கவில்லை.
பின்னர் டெல்லியில் இருந்து கத்தார் சென்றேன். பின்னர் அங்கிருந்து பிரேசில் சென்றேன். அதன்பிறகு டாக்சி மூலம் கொலம்பியா, பனாமா சென்றேன். அதன்பிறகு நடந்தே மெக்சிகோ எல்லை நோக்கி புறப்பட்டேன். அப்போது என்னுடன் மேலும் சிலரும் படகில் வந்தனர்.
4 மணி நேர கடல் பயணத்தில் எங்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். நாங்கள் உயிர் பிழைத்தோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
தாராப்பூர் கிராமத்தை சேர்ந்த சுப்பால்சிங் கூறுகையில், நாங்கள் கடல் வழியாக சுமார் 15 மணி நேரம் பயணம் செய்தோம். பின்னர் பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட மலைகள் வழியாக 45 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்றோம்.
இந்த பயணத்தின்போது வழியில் பலர் சடலங்களை கண்டோம் என்றார். இந்த தகவல்களை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட பஞ்சாப்பை சேர்ந்த குர்ப்ரீத் சிங் குடும்பத்தினர் கூறுகையில், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து ரூ.45 லட்சம் கடன் வாங்கி அவரை 6 மாதத்திற்கு முன்பு அமெரிக்காவுக்கு அனுப்பினோம்.
கடனை அடைக்க முடியாமல் தற்போது வீட்டை இழந்து விட்டோம். அரசு உதவி செய்தால் மட்டுமே எங்களால் உயிர் வாழ முடியும் என்றனர்.
இதேபோல ஆகாஸ்திப்சிங் என்ற வாலிபர் அமெரிக்காவுக்கு செல்ல ரூ.60 லட்சம் வரை செலவு செய்து ஏமாந்ததாக கூறினர்.
அமெரிக்காவுக்கு அனுப்புவதற்காக வாலிபர்களிடம் ரூ.60 லட்சம் வரை கட்டணம் பெற்று சட்ட விரோதமாக அனுப்பிய ஏஜென்டுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை முடிவில் சட்ட விரோதமாக வாலிபர்களை அமெரிக்காவுக்கு அனுப்பிய ஏஜென்டுகள் கைது செய்யப்படுவார்கள் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
- சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான டீப் சீக் புதிய ஏஐ மாடல் ஒன்றை அறிமுகப்டுத்தியது.
- சாட்ஜிபிடி கொடுத்து வந்த அனைத்து நவீன வசதிகளையும் டீப்சீக் ஏஐ இலவசமாகவே வழங்குகிறது.
அமெரிக்காவை சேர்ந்த ஓபன் ஏஐ நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கிய சாட்ஜிபிடி ஏஐ உலகளவில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் சமீபத்தில் சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான டீப் சீக் புதிய ஏஐ மாடல் ஒன்றை அறிமுகப்டுத்தியது. மற்றவற்றைக்காட்டிலும் இதை உருவாக்க வெறும் 6 மில்லியன் டாலர்கள் மட்டுமே செலவானதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
இதனால் உலகளவில் சாட்ஜிபிடி உள்ளிட்ட அமெரிக்க ஏஐ மாடல்கள் கடும் பின்னடைவை சந்தித்தது. பிரீமியம் முறையில் சாட்ஜிபிடி கொடுத்து வந்த அனைத்து நவீன வசதிகளையும் டீப்சீக் ஏஐ இலவசமாகவே வழங்குகிறது. இதனால் ஏஐ தொழில்துறையில் சர்வதேச அளவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு டீப்சீக் தலைவலியாக மாறியுள்ளது.
இதனிடையே டீப் சீக் ஏஐ நிறுவனத்தின் சி.இ.ஓ. லியாங் வென்ஃபெங் என்று ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஆனால் அப்புகைப்படம் டீப் சீக் ஏஐ நிறுவன சி.இ.ஓ.-ன் புகைப்படம் இல்லை என்று தெரியவந்துள்ளது.
சீன கட்டுமான பொருட்கள் நிறுவனத்தின் இயக்குநர் லியாங் வென்ஃபெங் புகைப்படத்தை டீப் சீக் ஏஐ நிறுவன சி.இ.ஓ. என தவறாக பரப்பியுள்ளனர்.
டீப் சீக் ஏஐ நிறுவன சி.இ.ஓ.-ன் பெயரும் லியாங் வென்ஃபெங் என்று இருந்ததே இந்த குழப்பத்திற்கு காரணம். டீப் சீக் ஏஐ வெளிவரும் வரை லியாங் வென்ஃபெங் தனது ப்ரோபைலில் தன்னை பற்றிய போதுமான விவரங்களை அவர் குறிப்பிடவில்லை. டீப் சீக் ஏஐ வெளிவந்தவுடன் இது தொடர்பாக கடந்த வாரம் அவர் பேசியபோது தான் பலருக்கும் அவரை பற்றி தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆயுதங்களை சேமித்து வைத்திருப்பதாக இந்தியா மீது ஷெரீப் குற்றம்சாட்டினார்.
- ஆயுதங்களை சேமித்து வைப்பது அமைதியைக் கொண்டுவராது என்றும் தெரிவித்தார்.
காஷ்மீர் உட்பட இந்தியாவுடனான அனைத்துப் பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாக முசாபராபாத்தில் நடைபெற்ற காஷ்மீர் ஒற்றுமை தினத்தின் போது பாகிஸ்தன் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
காஷ்மீரிகளுக்கு ஆதரவைக் காட்ட இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சனைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
ஆகஸ்ட் 5, 2019 அன்றைய சிந்தனையிலிருந்து இந்தியா வெளியே வந்து, ஐ.நா.விற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தைதான் என்றார்.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த போதிலும், ஆயுதங்களை சேமித்து வைத்திருப்பதாக இந்தியா மீது ஷெரீப் குற்றம்சாட்டினார். மேலும் ஆயுதங்களை சேமித்து வைப்பது அமைதியைக் கொண்டுவராது என்றும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தாலும், வன்முறையில் ஈடுபடும் குழுக்களை ஆதரிப்பதாக விமர்சிக்கப்படுகிறது. இந்தியாவின் அணுகுமுறை அமைதியை மையமாகக் கொண்டுள்ளது. இப்போதைக்கு, இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்திவிட்டு அமைதியான சூழலை உருவாக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்று இந்தியா வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது.
- கார்டெல் வன்முறையை தூண்டும் மெக்சிகோவிற்குள் அமெரிக்க துப்பாக்கிகளை கடத்துவதற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா உறுதியளித்தது.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இவரது அறிவிப்பு உலகளவில் வர்த்தக போர் ஏற்படும் அச்சத்தை தூண்டியது.
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் அமெரிக்க - மெக்சிகோ எல்லைக்கு 10 ஆயிரம் துருப்புகளை அனுப்புவதாக மெக்சிகோ ஒப்புக் கொண்டது. இதைத் தொடர்ந்து தான் வரி விதிக்கும் நடைமுறையை ஒருமாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இதே போல் கனடாவும் வரி விதிப்பை ஒத்திவைக்கும் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது.
இந்நிலையில் மெக்சிகோ வடக்கு எல்லைக்கு 10,000 துருப்புக்களை அனுப்பத் தொடங்கியது. தேசிய காவல்படை மற்றும் ராணுவ லாரிகள் டெக்சாஸின் சியுடாட் ஜுவரஸ் மற்றும் எல் பாசோ இடையேயான பகுதியில் ரோந்து சென்றன.
சியுடாட் ஜுவாரெஸ் அருகே எல்லையில் முகமூடி அணிந்து ஆயுதம் ஏந்திய தேசிய காவல்படை துருப்புக்கள், தற்காலிக ஏணிகள் மற்றும் கயிறுகளை அகழிகளில் இருந்து அகற்றி லாரிகளில் ஏற்றினர். டிஜுவானாவுக்கு அருகிலுள்ள பிற எல்லைப் பகுதிகளிலும் ரோந்துகள் காணப்பட்டன.
அமெரிக்க அதிபர் மெக்சிகோ மீது கடுமையான வரி விதிப்பை குறைந்தபட்சம் ஒரு மாதமாவது தாமதப்படுத்த முடிவு செய்ததை அடுத்து, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஃபெண்டானில் கடத்தலை எதிர்த்துப் போராடவும் தேசிய காவல் படையை பயன்படுத்துவதாக உறுதியளித்தார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இடம்பெயர்வு மற்றும் ஃபெண்டானில் ஓவர்டோஸ் குறிப்பிடத்தக்க சரிவை கண்டபோதிலும் அதிபர் டிரம்ப் எல்லை பகுதியில் அவசரநிலையை அறிவித்தார். இதற்கு பதிலடியாக, கார்டெல் வன்முறையை தூண்டும் மெக்சிகோவிற்குள் அமெரிக்க துப்பாக்கிகளை கடத்துவதற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா உறுதியளித்தது.
- ஆயிரக்கணக்கான ஆண் கைதிகள் சிறையில் இருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.
- சம்பவம் குறித்து மேலும் விசாரிக்க ஐ.நா. அமைதிப் பேச்சுவார்த்தை குழுவினரால் சிறைக்குள் செல்ல முடியவில்லை.
காங்கோவின் கோமா நகரில் உள்ள மன்சென்ஸ் சிறையில் நூற்றுக்கணக்கான பெண் கைதிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
ருவாண்டா ஆதரவு கிளர்ச்சிக் குழுக்கள் கடந்த வாரம் காங்கோ நகரத்திற்குள் நுழைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின் போது மன்சென்ஸ் சிறையில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஆண் கைதிகள் சிறையில் இருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, பெண் கைதிகள் நூற்றுக்கணக்கானோர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த சிறை பகுதி தீவைத்து கொளுத்தப்பட்டதில் ஏராளமான பெண்கள் உடல் கருகி உயிரிழந்ததாக ஐ.நா.அமைதிப் பேச்சுவார்த்தை குழுவின் துணை தலைவர் விவியன் வான் டி பெர்ரேவின் தெரிவித்துள்ளார்.
ருவாண்டா ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சியாளர்கள் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, சம்பவம் குறித்து மேலும் விசாரிக்க ஐ.நா. அமைதிப் பேச்சுவார்த்தை குழுவினரால் சிறைக்குள் செல்ல முடியவில்லை.
இந்த சம்பவம் குறித்து அதிக விவரங்கள் இல்லை என்றாலும், கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் சமீபத்தில் நடந்த M23 தலைமையிலான மோதலில் இந்த அட்டூழியங்கள் மிக மோசமானவை என்று கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சிறை வளாகப் பகுதியில் சுமார் 2,000 உடல்கள் அடக்கம் செய்யப்படுவதற்காக வைக்கப்பட்டிருப்பதாக விவியன் வான் டி பெர்ரேவின் கூறினார்.
- ஷேக் ஹசீனா நேரலையாக ஆன்லைனில் உரையாற்ற இருப்பதாக தகவல்.
- போராட்டக்காரர்கள் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உருவப்படத்தை சேதப்படுத்தினர்.
டாக்கா:
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மாணவர்கள் போராட்டம் நடந்தது. இதனால் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் மீது இனப்படுகொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
மேலும் கோர்ட்டும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவிடம் வங்காளதேச இடைக்கால அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவான சத்ரா லீக், ஷேக் ஹசீனா ஆன்லைன் வாயிலாக உரை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தது. தற்போது நடந்து வரும் ஆட்சிக்கு எதிராக ஷேக் ஹசீனா தனது கருத்தை பதிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஷேக் ஹசீனா நேரலையாக ஆன்லைனில் உரையாற்ற இருப்பதாக தகவல் பரவிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவாமி லீக் கட்சியை தடை செய்யக் கோரி, திடீரென்று போராட்டம் வெடித்தது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் டாக்காவில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமரும், ஷேக் ஹசீனா தந்தையுமான ஷேக் முஜிபுர் ரகுமான் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இந்த வீட்டை முஜிபுர் ரகுமான் நினைவு இல்ல அருங்காட்சியகமாக ஷேக் ஹசீனா மாற்றி இருந்தார்.

அந்த வீட்டை சூறையாடிய போராட்டக்காரர்கள் 2-வது மாடியில் ஏறி கடப்பாரைகள், மரக்கட்டைகளால் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உருவப்படத்தை சேதப்படுத்தினர்.
பின்னர் வீட்டின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவம், போலீசார் அங்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர்.
வங்காளதேசத்தில் பொதுத்தேர்தல் இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலோ நடைபெறலாம். இதில் அவாமி லீக் கட்சி அனுமதிக்கப்பட மாட்டாது என்று இடைக்கால அரசு திட்டவட்டமாக கூறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






