என் மலர்
உலகம்
- கடும் பனிப்பொழிவு காரணமாக விமான விபத்து நடந்ததாக தெரிகிறது.
- கடந்த 10 நாட்களில் 3-வது விமான விபத்து நடந்து உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உன லக்லீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு செஸ்னா 208பி என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 10 பேர் பயணம் செய்தனர்.
பெரிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம், புறப்பட்ட 40 நிமிடங்களில் ரேடாரில் இருந்து தொடர்பை இழந்து மாயமானது.
நார்டன் சவுண்ட் அருகே உள்ள மலைப்பகுதியில் விமானம் சென்றபோது கடும் பனிப்பொழிவு நிலவியது. அப்போது விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
இதில் ஹெலிகாப்டர்கள், ஹெச்-130 ஹெர்குலஸ் விமானம் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால், மோசமான வானிலை காரணமாக, விமானத்தை தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது.
நோம் நகரிலிருந்து தென்கிழக்கே சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் விமானம் காணாமல் போனதாக கடலோர காவல்படை தெரிவித்தது. இதையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது.
இந்த நிலையில் மாயமான விமானம் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. அந்த விமானம் அலாஸ்கா கடலில் உறைந்திருந்த பனியில் விழுந்து நொறுங்கி கிடந்தது. அதில் பயணித்த 10 பேரும் பலியாகி இருந்தனர். அவர்களது உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர்.
இதுகுறித்து அமெரிக்க கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் மைக் சலெர்னோ கூறும் போது, விமானத்தின் கடைசி சிக்னல் பகுதியில் மீட்புப் பணியாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் அறியப்பட்ட இடத்தைத் தேடிய போது விமானத்தின் நொறுங்கிய பாகங்களை கண்டுபிடித்தனர் என்றார்.
கடும் பனிப்பொழிவு காரணமாக விமான விபத்து நடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
அமெரிக்காவில் கடந்த 10 நாட்களில் 3-வது விமான விபத்து நடந்து உள்ளது. கடந்த 29-ந்தேதி வாஷிங்டனில் நடுவானில் பயணிகள் விமானம்-ராணுவ ஹெலிகாப்டர் மோதி கொண்டதில் 67 பேர் உயிரிழந்தனர். 31-ந்தேதி பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் கீழே விழுந்த தில் 6 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் எந்த நாட்டு குடிமக்களையும் வரவேற்பதாக லத்தீன் அமெரிக்க நாடான எல்- சால்வடோர் தெரிவித்தது .
- இந்த மக்கள் ஒருபோதும் நல்லவர்களாக இருக்கப் போவதில்லை, எனவே அவர்களை அங்குள்ள சிறைக்கு அனுப்புவது சிறந்தது
சட்டவிரோத குடியேற்றம்
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வருபவர்களை நாடு கடத்த அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்றும் அவர்களால் அமெரிக்காவில் பல்வேறு குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன என்றும் நாடுகடத்தலை டிரம்ப் நியாயப்படுத்தி வருகிறார். பிரேசில், கொலம்பியா, இந்தியா ஆகிய நாட்டினர் நூற்றுக்கணக்கானோர் ஏற்கனவே நாடுகடத்தப்பட்டனர்.
அமெரிக்காவில் ஆவணங்களின்றி தங்கியுள்ளவரை தேடும் பணியில் அந்நாட்டு குடிவரவு (கஸ்டம்ஸ்) அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் எந்த நாட்டு குடிமக்களையும் வரவேற்பதாக லத்தீன் அமெரிக்க நாடான எல்- சால்வடோர் தெரிவித்தது .

எல்- சால்வடோர் ஒப்பந்தம்
கடந்த திங்கள்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, எல் சால்வடோர் அதிபர் நயீப் புக்கேல் (Nayib bukele) சந்திப்பு நிகழ்ந்தது.
இதன்பின் பேசிய மார்கோ ரூபியோ, அமெரிக்காவில் உள்ள எந்தவொரு சட்டவிரோத வெளிநாட்டினரையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஆபத்தான கைதிகளையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக நயீப் புக்கேல் உறுதி அளித்துள்ளார்.
அவர்களை தங்கள் நாட்டு சிறையில் அடைத்து வைக்கும் திட்டத்தை புக்கேல் முன்வைத்துள்ளார் . அவ்வாறு எல் சால்வடோருக்கு நாடு கடத்தப்படுபவர்கள் CECOT எனப்படும் மிகப்பெரிய அதி பாதுகாப்பு வாய்ந்த சிறையில் அடைக்கும் திட்டத்தை புக்கேல் டிரம்பிடம் முன்மொழித்துள்ளார் என்று தெரிவித்தார்.

இங்கு கைதிகள் ஜன்னல்கள் இல்லாத அறைகளில் அடைக்கப்படுவர். மெத்தை இல்லாமல் இரும்புப் படுக்கைகளில்தான் தூங்க வேண்டும். உறவினர்கள், நண்பர்கள் என யார் வந்து பார்ப்பதற்கும் தடை விதிக்கப்படும். அவர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவர்.
இந்த திட்டம் குறித்து தனது ஓவல் அலுவலகத்தில் பேட்டியளித்த டொனால்டு டிரம்ப், குற்றவாளிகளை எல் சால்வடாருக்கு அனுப்புவது தனியார் சிறைகளுக்கு நாம் செலுத்தும் கட்டணத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த கட்டணமாக இருக்கும். இந்த மக்கள் ஒருபோதும் நல்லவர்களாக இருக்கப் போவதில்லை, எனவே அவர்களை அங்குள்ள சிறைக்கு அனுப்புவது சிறந்தது. இந்த திட்டத்தை பரிசீலித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

ஆனந்த் மஹிந்திரா
இந்நிலையில் இதுகுறித்து இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கருத்து தெரிவித்துள்ளார். எல் சால்வடார் அதிபர் நயீப் புக்கேல் எக்ஸ் பதிவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, இது ஒரு [மோசமான] அவுசோர்சிங் வாய்ப்பு, இந்தியா இதுபோன்ற வாய்ப்பை [அமெரிக்காவுக்கு] வழங்காது என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா சென்று டிரம்பை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள் கை கால்கள் விலங்கிடப்பட்டு கீழ்த்தரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க அரசின் செயல்திறனை மேம்படுத்தும் DOGE என்ற துறை உருவாக்கப்பட்டது.
- சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்படும்" என மஸ்க் அறிவித்தார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசின் செயல்திறனை மேம்படுத்தும் DOGE என்ற துறை உருவாக்கப்பட்டு அதற்கு தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
விவேக் ராமசாமி தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில் எலான் மஸ்க் கட்டுப்பாட்டுக்கு DOGE முழுமையாக சென்றுள்ளது. அரசு மற்றும் பொதுமக்களின் முக்கிய தரவுகளை அணுகும் சுதந்திரம் DOGE துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
டிரில்லியன் கணக்கான டாலர் சலுகைகள், மானியங்கள் மற்றும் வரி வசூலுக்கான அரசாங்கத்தின் கட்டண அமைப்பு தரவுகளை அணுக கருவூலத் துறை DOGE-க்கு அனுமதி அளித்தது. மேலும் வகைப்படுத்தப்பட்ட (Classified material) முக்கியமான விவரங்கள், கோப்புகள், ஆவணங்கள், அதி ரகசிய வீடியோ, ஆடியோகளையும், லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுக DOGE-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்க செலவினங்களை ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர் முதல் 2 டிரில்லியன் டாலர் வரை குறைக்கும் திட்டத்தை மஸ்க் முன்மொழிந்தார்.
இதனையடுத்து "சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்படும்" என மஸ்க் தன்னிச்சையாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய பில் கேட்ஸ், "அமெரிக்கா தனது பட்ஜெட்டில் 1% க்கும் குறைவாகவே வெளிநாட்டு உதவிக்காக செலவிடுகிறது என்றாலும், இந்த நிதி லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுகிறது. ஆகவே சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூலமாக மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் வளர்ச்சி நிதி நிறுத்தப்பட்டால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு வழிவக்கும்" என்று தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு, சுகாதாரத் திட்டங்கள் மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட உதவிகளை பல நாடுகளுக்கு சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் செய்து வருகிறது. USAID நிறுவனத்துடன் இணைந்து பில் கேட்சின் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை பல்வேறு நாடுகளுக்கு உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- இதுவரை 18 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்துள்ளது
- இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
ஜெருசலேம்:
இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர். அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.
கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மேலும் விடுவிக்கப்பட உள்ள 3 பிணைக்கைதிகளின் பெயர் பட்டியலை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டது. அதன்படி ஒஹட் பென் அமி, இலி ஷராபி, ஆர் லிவி ஆகிய 3 பேரை இன்று விடுதலை செய்வதாக ஹமாஸ் தெரிவித்தது. இந்த 3 பேருக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களில் 183 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.
போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பிணைக்கைதிகளில் 18 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக தற்போதுவரை 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
- சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்தில் சிக்கியது.
- இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பிரேசிலா:
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பிரேசில். இந்நாட்டின் சாவ் பாலோ என்ற நகரில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் விமானி, விமான உரிமையாளர் என 2 பேர் பயணம் செய்தனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென பிசியான சாலையில் மோதியது.
இந்த விபத்தில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
- பாகிஸ்தானில் பாதுகாப்புப்படை தாக்குதல் நடத்தியது.
- இந்தத் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பெஷாவர்:
பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வசிரிஸ்தானின் ஹசன் கெல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் அங்கு பாதுகாப்புப் படையினர் சென்று சோதனை நடத்தினர். அப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்தது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- கொலம்பியா - பனாமா எல்லையில் 'டேரியன் கேப்' எனும் சதுப்பு நிலக் காடு அமைந்துள்ளது.
- 'VIP சுரங்கப்பாதை' என்று கூறப்படும் இந்த சுரங்கப்பாதைகள் மிகவும் குறுகியது,
ஆவணங்களின்றி சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வருபவர்களை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
அவ்வாறு இந்தியாவைச் சேர்ந்த 18,000 இந்தியர்களை அமெரிக்கா கண்டறிந்துள்ளது. முதற்கட்டமாக 100க்கும் மேற்பட்டோரை ராணுவ விமானம் மூலம் அமெரிக்கா நாடுகடத்தியது. அவர்கள் பஞ்சாப் விமான நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர். அவர்களின் கை கால்கள் விலங்கிடப்பட்டு அழைத்துவரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்காதது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

உலக வல்லரசான அமெரிக்காவில் பிழைப்பதற்காக பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களும் அந்நாட்டின் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர்.
இந்தியாவைச் சேர்ந்தவர்களும் சிறந்த வாழ்க்கையை தேடி இவ்வாறு சட்டவிரோதமாக அமெரிக்கா செல்கின்றனர். அதற்கு அவர்கள் பயணிக்கும் பாதை மிகவும் ஆபத்தானது. பல நாடுகளை கடந்த பின்னரே அமெரிக்காவை அடைய முடியும். குறிப்பாக கொலம்பியா - பனாமா எல்லையில் உள்ள 'டேரியன் கேப்' என்னும் சதுப்பு நிலக் காட்டை அவர்கள் கடக்க வேண்டும்.
இவ்வாறு சட்டவிரோதமாக எல்லைகளைக் கடக்கும் எந்த ஒரு பாதையும் 'டாங்கி ரூட்' [donkey route] என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தை பஞ்சாபி மொழியில் இருந்து மருவிய ஒன்று. இந்த பாதையில் மக்களை காசு வாங்கிக்கொண்டு அழைத்துச் செல்ல முகவர்கள் செயல்படுகின்றனர்.
அமெரிக்காவிற்கோ அல்லது வேறு ஐரோப்பிய நாட்டிற்கோ நுழைய விரும்பும் இந்தியர்கள், சட்டப்பூர்வ வழியால் அவ்வாறு செய்ய முடியாத நிலையில், மற்ற நாடுகள் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய உதவும் இந்த முகவர்களுக்கு பெரும் தொகையை செலுத்துகிறார்கள்.
இந்தியக் குடிமக்களுக்கு, கயானா, பொலிவியா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் சுற்றுலா விசா எளிதாக கிடைக்கும். அதன்பின் இந்த பாதை வழியாக இந்தியர்கள் பெரும்பாலும் கொலம்பியாவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பனாமாவுடன் ஒப்பிடும்போது, கொலம்பியா, அமெரிக்க எல்லைக்கு அருகில் உள்ளது.
கொலம்பியா - பனாமா எல்லையில் உள்ள 'டேரியன் கேப்' என்னும் சதுப்பு நிலக் காடு, கரடு முரடான நிலப்பரப்பு, மாறுபட்ட தட்பவெப்பம், சிறுத்தைகள், பாம்புகள், ஏராளமான விஷ பூச்சிகள், வழிப்பறி கொள்ளையர்கள், உள்ளூர் ரவுடிகள் என பல்வேறு ஆபத்துக்களை உள்ளடக்கியது.
97 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த அடர்ந்த காட்டுப்பகுதியின் ஆபத்துகள் அனைத்திலுமிருந்து உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றிக்கொண்டு தப்பித்து, எட்டு முதல் பத்து நாட்களில் கோஸ்டாரிகா மற்றும் நிகரகுவாவை அடைவார்கள்.
கோஸ்டாரிகா மற்றும் நிகரகுவாவிலிருந்து, இந்தியர்கள் குவாத்தமாலா வழியாக மெக்சிகோவின் தெற்கு எல்லையை அடைகிறார்கள். இங்கிருந்து, அவர்கள் மெக்சிகோவிற்குள் நுழைந்து பின்னர் அமெரிக்காவிற்குள் நுழைகிறார்கள்.

கடந்து செல்லும் நாடுகளில் அரசியல் சூழ்நிலை, வானிலை, மனித கடத்தல் மற்றும் பிற குற்ற வழிகளைக் கருத்தில் கொண்டு, 'டாங்கி ரூட்' வழியாக அமெரிக்காவை அடைய இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆகலாம். அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையிலான எல்லைப் பகுதிகளுக்கு அருகில் பல சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
'VIP சுரங்கப்பாதை' என்று கூறப்படும் இந்த சுரங்கப்பாதை மிகவும் குறுகியது, இருண்டது, பூச்சிகள், பாம்புகள் நிரம்பியது. இது மெக்சிகோவின் சியுடாட் ஜுவாரெஸை அமெரிக்க மாகாணமான டெக்சாஸின் எல் பாசோவுடன் இணைக்கிறது.
இதைப் பயன்படுத்த கார்டெல்களுக்கு 6,000 டாலர்கள்(ரூ.5.25 லட்சத்திற்கு மேல்) கொடுக்க வேண்டும். கார்டெலுக்குப் பணத்தைச் செலுத்தியவுடன், பயணிப்பவர்களுக்கு ஒரு குறியீடு வழங்கப்படுகிறது. இது மெக்சிகோவில் உள்ள பிற கார்டெல்கள் மற்றும் போலீஸ் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க பயன்படுகிறது. இதன்மூலம் அவர்கள் அமெரிக்காவிற்குள் எளிதாக நுழைய முடியும்.
- போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- போலீசார் லீயை பிடித்து விசாரித்தனர்.
இளம்பெண்கள் தங்களை மேலும் அழகுபடுத்திக் கொள்ள விரும்புவார்கள். அதற்காக காது, உதடு அணிகலன்கள் உள்பட அழகுசாதன பொருட்கள் வாங்குவதற்கு அதிக ஆசைப்படுவார்கள். இவ்வாறு உதடு அணிகலன் வாங்க ஆசைப்பட்ட இளம்பெண் ஒருவர் அதற்காக தனது தாயின் ரூ.1.2 கோடி மதிப்புள்ள நகைகளை திருடி ரூ.700-க்கு விற்ற சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
அங்குள்ள வாங் என்ற பெண் தனது வீட்டில் இருந்த 1 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1.2 கோடி) மதிப்பிலான வளையல், நெக்லஸ் மற்றும் ரத்தின கற்கள் உள்ளிட்ட நகைகள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது வாங்கின் மகள் லீ தான் அந்த நகைகளை திருடி விற்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் லீயை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, எனக்கு உதடு அணிகலன்கள் வாங்க பணம் தேவைப்பட்டது. இதனால் வீட்டில் இருந்த நகைகளை கவரிங் என நினைத்து எடுத்து சென்று அவற்றை ரூ.700-க்கு விற்று ஒரு ஜோடி உதடு அணிகலன் வாங்கியதாக கூறி உள்ளார். பின்னர் அவர் விற்பனை செய்த கடைக்கு சென்று நகைகளை மீட்டு போலீசார் வாங்கிடம் ஒப்படைத்தனர்.
- ஜனநாயக கட்சி தலைமை வகிக்கும் 22 மாகாண நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
- விசா பெற்று கிரீன் கார்டுகளுக்காக காத்திருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு நிம்மதியளிக்கும்.
டிரம்ப் உத்தரவு:
கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் பல்வேறு தடாலடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். குறிப்பாக அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை டிரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டார்.
பிப்ரவரி 19 முதல் இந்த தடை நடைமுறைக்கு வரும்என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் உள்ளிட்ட 22 ஜனநாயக கட்சி தலைமை வகிக்கும் மாகாண நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதைத்தொடர்ந்து டிரம்பின் உத்தரவுக்கு வாஷிங்டன் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் சியாட்டில் நீதிமன்றத்திலும் இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதி, அரசியலமைப்புடன் டிரம்ப் "கொள்கை விளையாட்டுகளை" விளையாடுகிறார். தனிப்பட்ட நலனுக்காக சட்டத்தின் ஆட்சியைத் அவர் மதிப்பிழக்க செய்ய முயல்கிறார் என்று கண்டித்தார். டிரம்பின் உத்தரவுக்கு காலவரையின்றி தடை விதித்து உத்தரவிட்டார். முன்னதாக மேரிலாந்து நீதிமன்றமும் இதே தீர்ப்பை வழங்கியிருந்தது.
இந்த தீர்ப்பு அமெரிக்காவில் விசா பெற்று கிரீன் கார்டுகளுக்காக காத்திருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.
குடியுரிமை பிறப்புரிமை:
1868-ல் இயற்றப்பட்ட சட்டவிதியின்படி பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலையைப் பொருட்படுத்தாமல், அமெரிக்காவில் பிறக்கும் எந்த ஒரு குழந்தைக்கும் அமரிக்க குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் அமெரிக்காவில் பிறந்த குழந்தை குடியுரிமை பெற, குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அமெரிக்க குடிமகனாக, சட்டப்பூர்வ நிரந்தர குடியேறியாக (கிரீன் கார்டு வைத்திருப்பவர்) அல்லது அமெரிக்க ராணுவத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று டிரம்பின் உத்தரவு குறிப்பிடுகிறது.

அமெரிக்க வாழ் இந்தியர்கள்:
டிரம்பின் உத்தரவு அமலுக்கு வந்தால் அமெரிக்க வாழ் இந்தியர்களை அதிக அளவில் பாதிக்கும். அமெரிக்க மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 4.8 மில்லியனுக்கும் அதிகமான இந்திய-அமெரிக்கர்கள் வாழ்கின்றனர்.
அதில் கணிசமானோர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்கள். எனவே டிரம்பின் உத்தரவு அமலுக்கு, தற்காலிக வேலை விசாவில் இருக்கும் (எச்-1பி விசா உள்ளிட்டவை) அல்லது கிரீன் கார்டுகளுக்காகக் காத்திருக்கும் இந்தியர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இனி தானாகவே அமெரிக்கக் குடியுரிமையைப் பெற முடியாத நிலையை உருவாக்கும் அபாயம் நிலவியது. ஆனால் தற்போது டிரம்பின் உத்தரவுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள தடையால் இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
- உலக வெப்பநிலையை தணிக்கக் கூடிய ‘லா நினோ’ வளிமண்டலப் போக்கு நிலவியது.
- ஆர்க்டிக் கடல் பனி ஜனவரி மாதத்திற்கான மிகக் குறைந்த அளவை எட்டியது.
உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவானது. இந்நிலையில் 2025 அந்த சாதனையை முறியடிக்க உள்ளது. ஆண்டில் தொடக்கத்திலேயே அதற்கான முன்னறிவிப்பாக ஜனவரி மாதத்தின் சாதனை அமைந்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் நிதியுதவி பெற்ற கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற ஆய்வு நிறுவனம்(C3S) நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி ஜனவரி 2025 உலக வரலாற்றில் மிக வெப்பமான மாதமாக பதிவாகியுள்ளது.
2025 ஜனவரியில் உலக வெப்பநிலையை தணிக்கக் கூடிய 'லா நினோ' வளிமண்டலப் போக்கு நிலவினாலும், புவியின் வெப்பநிலை இதுவரை எந்தவொரு ஜனவரி மாதமும் இல்லாத அளவில் பதிவாகியுள்ளது

2025 ஜனவரி மாதத்தில் சராசரி வெப்பநிலை, தொழில்துறை புரட்சிக்கு முன் (1850 க்கு முன்) பூமியின் சராசரி வெப்பநிலையை விட 1.75 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. 1991-2000 ஜனவரி சராசரி வெப்பநிலையை விட 2025 ஜனவரி சராசரி வெப்பநிலை 0.79 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.
ஆர்க்டிக் கடல் பனி ஜனவரி மாதத்திற்கான மிகக் குறைந்த அளவை எட்டியது. இது சராசரியை விட 6% குறைவாகும். "ஜனவரி 2025 விசித்திரனமான மாதம்" என்று C3S இன் துணை இயக்குநர் சமந்தா பர்கெஸ் தெரிவித்துள்ளார்.
- சர்வதேச நீதிமன்றத்திற்கு தடை விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
- அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இதனை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கடந்த மாதம் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறார்.
அந்த வரிசையில் தான் தற்போது சர்வதேச நீதிமன்றத்திற்கு தடை விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேலை குறிவைத்து தொடர் விசாரணைகளை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து இருப்பதன் மூலம் தனது அதிகாரத்தை நீதிமன்றம் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னதாக பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்காவில் வைத்து அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அமெரிக்காவின் புதிய உத்தரவு காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு உதவியதாகக் கருதப்படும் எவருக்கும் எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் பிறப்பித்துள்ளது.
பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வருகைக்குப் பிறகு இந்த தடை உத்தரவுகள் வெளியாகி உள்ளன. இவை வெளிப்படையாகவே அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
முன்னதாக காசாவை கையகப்படுத்தி பாலஸ்தீனியர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப திட்டம் கொண்டிருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்தார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் அல்ல. இது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
- நிலநடுக்கத்தால் இதுவரை பெரிய சேதம் எதுவும் பதிவாகவில்லை.
- சாண்டோரினி தீவிலிருந்து 11 ஆயிரம் பேர் வெளியேறி விட்டனர்.
ஐரோப்பாவின் தென்கிழக்கே உள்ள கிரீஸ் நாட்டின் சாண்டோரினி தீவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. புதன்கிழமை இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் இதுவரை பெரிய சேதம் எதுவும் பதிவாகவில்லை.
கடந்த ஒரு வாரத்திற்குள் 7,700 நிலநடுக்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், புதன்கிழமை இரவு பதிவான நிலநடுக்கமே சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கருதப்படுகிறது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்த நிலையில், அவசர நிலை பிரகடனம் படுத்தப்பட்டது. இந்த அவசர நிலையானது மார்ச் 3-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சாண்டோரினி தீவிலிருந்து 11 ஆயிரம் பேர் வெளியேறி விட்டனர். சுமார் 7ஆயிரம் பேர் படகு மூலமாகவும், 4ஆயிரம் பேர் விமானம் மூலமாகவும் புறப்பட்டனர்.






