என் மலர்tooltip icon

    உலகம்

    • பிலிப்பைன்ஸ் மீன்பிடி படகுகள் மீது சீன கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.
    • சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    மணிலா:

    பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தென்சீனக் கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடுகிறது. அதேசமயம் பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகளும் அந்த பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன. எனவே அந்த நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையே அவ்வப்போது அங்கு மோதல் ஏற்படுகிறது. குறிப்பாக அங்கு செல்லும் பிலிப்பைன்ஸ் மீன்பிடி படகுகள் மீது சீன கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.

    இந்த விவகாரத்தில் பிலிப்பைன்சுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கியது. எனவே சர்ச்சைக்குரிய அந்த பகுதியில் பிலிப்பைன்சுடன் இணைந்து அமெரிக்கா கூட்டுப்போர் பயிற்சியை நடத்துகிறது.

    இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இரு நாடுகளும் நேற்று மீண்டும் கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கின. இதில் அமெரிக்காவின் பி.1-பி குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் எப்.ஏ-50 போர் விமானங்கள் போன்றவை ஈடுபடுத்தப்பட்டதாக பிலிப்பைன்ஸ் விமானப்படை செய்தித்தொடர்பாளர் மரியா கான்சுலோ தெரிவித்துள்ளார்.

    • மாணவர்கள் பெரும்பாலானோர் தேர்வு முடிந்ததை அடுத்து தங்களின் வீடுகளுக்கு திரும்பினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் வயது வந்தோருக்கான பள்ளிக்கூடம் உள்ளது.

    கேம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா என்று அழைக்கப்படும் இந்தப் பள்ளி, 20 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கிறது. இந்த பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவர்கள் பெரும்பாலானோர் தேர்வு முடிந்ததை அடுத்து தங்களின் வீடுகளுக்கு திரும்பினர்.

    எனினும் ஒரு சில மாணவர்கள் பள்ளியில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் இந்த பள்ளிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 10 பேர் பலியானார்கள். அதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    • 2023-ம் ஆண்டு 18,78,543 சுற்றுலா பயணிகள் மாலத்தீவிற்கு வருகை தந்துள்ளனர். 2024-ல் 20,46,615 ஆக அதிகரித்தது.
    • 2023-ல் மாலத்தீவிற்கு 2,09,193 இந்திய சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில், 2024-ல் அது 1,30,805 ஆக குறைவு.

    சுற்றுலா என்றாலே சட்டென்று நினைவுக்கு வரும் தீவுகளில் ஒன்று மாலத்தீவு. ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் மாலத்தீவிற்கு சுற்றுலா வருகை தருகின்றனர்.

    இந்தியா- மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா வந்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. இதன்காரணமாக சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்த்த நாடுகள் பட்டியலில் 2023-ல் முதலிடம் வகித்த மாலத்தீவு, கடந்த ஆண்டு 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

    2023-ம் ஆண்டு 18,78,543 சுற்றுலா பயணிகள் மாலத்தீவிற்கு வருகை தந்துள்ளனர். 2024-ல் 20,46,615 ஆக அதிகரித்தாலும் சீனா முதல் இடத்தையும், ரஷியா 2-வது இடத்தையும் பிடித்துள்ளது.

    இந்த நிலையில் 2025-ல் 3 லட்சம் இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதை மாலத்தீவு இலக்காக நிர்ணயித்துள்ளது. இதற்காக மாதந்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தவும், கிரிக்கெட் முகாம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

    அத்துடன், முதல் முறையாக இந்திய ஊடகங்களில் விளம்பரம் செய்ய ஒரு பிராண்ட் தூதரை நியமிக்க இலக்கு வைத்துள்ளதாக மாலத்தீவு தெரிவித்துள்ளது.

    கொரோனா தொற்றுக்குப் பிறகு 2020-ல் இருந்து 2023 வரை இந்தியாவில் இருந்து ஏராளமானோர் மாலத்தீவிற்கு வருகை தந்தனர்.

    இந்திய பிரதமர் மோடி லட்சத்தீவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அதுதொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக மாலத்தீவின் மூன்று அமைச்சர்கள் தரக்குறைவான கருத்துகளை பதிவிட, இந்திய சுற்றுலா பயணிகள் மாலத்தீவை புறக்கணித்தனர்.

    இதன்விளைவாக 2023-ல் மாலத்தீவிற்கு 2,09,193 இந்திய சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில், 2024-ல் அது 1,30,805 ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

    • அரசாங்கத்தின் கட்டண அமைப்பு தரவுகளை அணுக கருவூலத் துறை DOGE-க்கு அனுமதி அளித்தது.
    • வருமாய் இழப்பை ஈடுக்கட்ட மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிறுத்த DODGE முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசின் செயல்திறனை மேம்படுத்தும் DODGE என்ற துறை உருவாக்கப்பட்டு அதற்கு தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

    விவேக் ராமசாமி தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில் எலான் மஸ்க் கட்டுப்பாட்டுக்கு DODGE முழுமையாக சென்றுள்ளது. அரசு மற்றும் பொதுமக்களின் முக்கிய தரவுகளை அணுகும் சுதந்திரம் DODGE துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

     டிரில்லியன் கணக்கான டாலர் சலுகைகள், மானியங்கள் மற்றும் வரி வசூலுக்கான அரசாங்கத்தின் கட்டண அமைப்பு தரவுகளை அணுக கருவூலத் துறை DOGE-க்கு அனுமதி அளித்தது. மேலும் வகைப்படுத்தப்பட்ட (Classified material) முக்கியமான விவரங்கள், கோப்புகள், ஆவணங்கள், அதி ரகசிய வீடியோ, ஆடியோகளையும், லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுக DOGE-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் அரசாங்க செலவினங்களை ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர் முதல் 2 டிரில்லியன் டாலர் வரை குறைக்கும் திட்டத்தை மஸ்க் முன்மொழிந்தார்.

    "சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்படும்" என மஸ்க் தன்னிச்சையாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது.  மேலும் எலான் மஸ்க் ஒரு சிறப்பு அரசு ஊழியராக வகைப்படுத்தப்பட்டுள்ளார்.

    திறமையற்றவர்கள் எனக் கூறி லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை  பணிநீக்கம் செய்யும் ஆலோசனையை அரசுக்கு DODGE வழங்கியுள்ளது.

     அரசின் வருமாய் இழப்பை ஈடுக்கட்ட மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிறுத்த DODGE முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் பரவலான அச்சம் மக்களை தொற்றியது.

    'அமெரிக்க அரசின் அதிகாரத்தின் மீது தனது கட்டுப்பாட்டை எலான் மஸ்க் அசாதாரண வேகத்தில் இறுக்கி வருகிறார்' என ஜனநாயகக் கட்சியினரும் அரசியல் அறிஞர்களும் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் தன்னை மீறி மஸ்க் எதுவும் செய்யமுடியாது என்று டிரம்ப் உத்தரவாதம் அளித்துள்ளார்.

     

    நேற்று இதுகுறித்து பேசிய அவர், "எலோனால் எங்கள் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்ய முடியாது, செய்யவும் மாட்டார். பொருத்தமான விஷயங்களில் நாங்கள் அவருக்கு ஒப்புதல் அளிப்போம்; அப்படி இல்லாத விஷயங்களில் நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    • பறப்பதற்கு முன் விரைவான ஒரு பம்ப் என்று கூறியவாறே அவர் இன்ஜின் முன் ஏறினார்.
    • பாதுகாப்பு மீறலை தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமூக வலைத்தளங்களில் அதிகம் பேர் தங்களை பார்க்க வேண்டும் என்பதற்காக பலர் ஆபத்தான விஷயங்களை செய்து வருகின்றனர். இதனால் பல முறை உயிர்பலிகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது பாடிபில்டர் ஒருவர் ஓடும் விமான இன்ஜின் மீது ஏறி தண்டால் எடுத்த வீடியோ பரவி வருகிறது.

    பிரெஸ்லி ஜினோஸ்கி என்ற 23 வயதான பாடிபில்டர் ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் ஓடுதளத்தில் நின்றுகொண்டிருந்த விமானத்தின் ஓடும் இன்ஜின் பகுதி முன் புஷ்-அப்களை எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

    பறப்பதற்கு முன் விரைவான ஒரு பம்ப் என்று கூறியவாறே அவர் இன்ஜின் பகுதிக்கு முன் ஏறி ஆபத்தான முறையில் புஷ்-அப் எடுப்பதை பலரும் கண்டித்துள்ளனர். இந்த நிகழ்வு கடந்த ஆண்டு நடந்துள்ளது, அதை அவர் சமீபத்தில் இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்.

    இதுகுறித்து பதிலளித்துள்ள சிட்னி விமான நிலையம், பாதுகாப்பு மீறலை தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகதெரிவித்துள்ளது.

    • இந்தியாவில் நான் இருந்த மூன்றாவது நாளே என் தோலில் சொறி ஏற்பட்டது, என் கண்கள் மற்றும் தொண்டையை எரியச் செய்தது.
    • இந்தியாவின் தலைவர்கள் காற்றின் தரத்தை ஒரு தேசிய அவசரநிலையாக ஏன் அறிவிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.

    அமெரிக்காவைச் சேர்ந்த 47 வயது தொழிலதிபர் பிரையன் ஜான்சன். மூளை செயல்பாட்டைக் கண்காணித்து பதிவு செய்யும் சாதனங்களை உருவாக்கும் கெர்னல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    வயதை குறைக்கும் [de -ageing] முயற்சியில் கோடிகளை செலவழித்து கவனம் பெற்றவர். இவர் சமீபத்தில் இந்தியா வந்திருந்த நிலையில் டெல்லியில் நிகில் காமத் நடத்தும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ஆனால் டெல்லி காற்று மாசுபாடு தாங்காமல் ஆளை விட்டால் போதும் என்று நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே எழுந்து சென்றார். இந்நிலையில் அதுகுறித்து நீண்டதொரு எக்ஸ் பதிவை அவர் எழுதியுள்ளார்.

    அதில், இந்தியாவில் இருந்தபோது, மோசமான காற்றின் தரம் காரணமாக இந்த பாட்காஸ்டை சீக்கிரமாகவே முடித்துவிட்டேன். நிகில் காமத் ஒரு அன்பான தொகுப்பாளராக இருந்தார். நான் அங்கு மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டேன். பிரச்சனை என்னவென்றால், நாங்கள் இருந்த அறைக்குள் வெளிப்புறக் காற்று உள்ளே வந்தது. அதை நான் கொண்டு வந்த காற்று சுத்திகரிப்பானால் சுத்திகரிக்க முடியவில்லை.

    உள்ளே, காற்றின் தரம் AQI 130 ஆகவும், PM2.5 75 µg/m³ ஆகவும் இருந்தது, இது 24 மணி நேரத்தில் 3.4 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம்.

    இந்தியாவில் நான் இருந்த மூன்றாவது நாளே, காற்று மாசுபாடு என் தோலில் சொறி ஏற்படுத்தி, என் கண்கள் மற்றும் தொண்டையை எரியச் செய்தது.

    காற்று மாசுபாடு இந்தியாவில் மிகவும் இயல்பாக பார்க்கப்படுகிறது. அதன் எதிர்மறை விளைவுகள் பற்றிய அறிவு இருந்தாலும், யாரும் அதை பொருட்படுத்துவதில்லை. இந்த காற்றால் பிறப்பிலிருந்தே குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். யாரும் முகமூடியையும் அணிவதில்லை. அது எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது.

    புற்றுநோய்களை குணப்படுத்துவதை விட காற்றின் தரத்தை சுத்தம் செய்வதன் மூலம் இந்தியா அதன் மக்களின் ஆரோக்கியத்தை பேண முடியும் என்பதை சான்றுகள் காட்டுகின்றன.

    இந்தியாவின் தலைவர்கள் காற்றின் தரத்தை ஒரு தேசிய அவசரநிலையாக ஏன் அறிவிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது முழு நாட்டிற்கும் மிகவும் மோசமானது.

    நான் அமெரிக்காவுக்குத் திரும்பியபோது எல்லா இடங்களிலும் உடல் பருமனானவர்களைக் கண்டேன். 42.4% அமெரிக்கர்கள் உடல் பருமனாக உள்ளனர். நான் எப்போதும் அவர்களை சுற்றி இருந்ததால், நான் பெரும்பாலும் அதைப் பற்றி மறந்துவிட்டேன். ஆனால் இந்தியா சென்று திரும்பியதும் அது எனக்கு உறைத்தது.

    உடல் பருமன் நீண்ட கால காற்று மாசுபாட்டை விட மோசமானது. அமெரிக்கத் தலைவர்கள் உடல் பருமனை தேசிய அவசரநிலையாக ஏன் அறிவிக்கவில்லை? என்றும் தெரியவில்லை என பதிவிட்டுள்ளார். 

    • ஆனால் சீனாவுக்கான 10 சதவீத வரியில் மாற்றம் இல்லை
    • கூகுள் நிறுவனத்தின் ஏகபோக செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த சீனா அரசு உத்தரவிட்டுள்ளது.

    அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார்.

    இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.

    இதற்கிடையே கனடாவும் அமெரிக்க பொருட்கள் மீது 25 சதவீத வரி விதித்தது. தொடர்ந்து கனடா, மெக்சிகோ தலைவர்களுடன் போனில் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இரு நாடுகளுக்கான வரிவிதிப்பு உத்தரவை அடுத்த ஒரு மாதத்துக்கு மட்டும் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.

     

    ஆனால் சீனாவுக்கான 10 சதவீத வரியில் மாற்றம் இல்லை. எனவே தற்போது அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது.

    சீன வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு உள்ளிட்டவற்றிக்கு 15 சதவீத வரியும், விவசாய உபகரணங்கள், கச்சா எண்ணெய் மீது கூடுதலாக 10 சதவீத வரியும் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அமெரிக்காவுக்கு அரிய உலோகங்களை ஏற்றுமதி செய்வதற்கும் சீனா கட்டுப்பாடு விதித்துள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் ஏகபோக செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த சீனா அரசு உத்தரவிட்டுள்ளது.

     

    முன்னதாக அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக சர்வதேச வர்த்தக கூட்டமைப்பில் வழக்கு தொடரப்படும் என சீனா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 35 உறுப்பு நாடுகள் தங்கள் வழக்கமான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளை ஐ.நா. நிதி விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் முழுமையாக செலுத்தியுள்ளன.
    • இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.

    2025-ம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் வழக்கமான பட்ஜெட்டுக்கு இந்தியா 37.64 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தி, 35 உறுப்பு நாடுகளின் கவுரவ பட்டியலில் இணைந்துள்ளது. இந்தியா தங்கள் வழக்கமான பட்ஜெட் மதிப்பீடுகளை முழுமையாகவும் சரியான நேரத்திலும் ஐ.நா.வுக்கு செலுத்தி உள்ளது.

    ஐ.நா. பங்களிப்புகளுக்கான குழுவின்படி, ஜன.31-ந்தேதி வரை, 35 உறுப்பு நாடுகள் தங்கள் வழக்கமான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளை ஐ.நா. நிதி விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள 30 நாள் காலக்கெடுவிற்குள் முழுமையாகச் செலுத்தியுள்ளன.

    இந்த ஆண்டின் ஐக்கிய நாடுகளின் வழக்கமான பட்ஜெட்டில் 37.64 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா ஜன.31-ந்தேதி செலுத்தியது.

    தங்கள் வழக்கமான பட்ஜெட் மதிப்பீடுகளை முழுமையாக செலுத்திய உறுப்பு நாடுகளின் கவுரவப் பட்டியலில் இடம் பிடித்துள்ள நாடுகளின் பெயரை குறிப்பிட்டு பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின், செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், செய்தியாளர் சந்திப்பில் பேசினர்.

    இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு தனது பங்களிப்பை சரியான நேரத்தில் மற்றும் முழுமையாக செலுத்தும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது என்று கூறினார்.

    கடந்த வாரம் இந்தியாவுக்கு வருகை தந்த ஐ.நா. பொதுச் சபைத் தலைவர் ஃபிலிமோன் யாங் கூறுகையில், ஐ.நா.வின் உறுப்பு நாடாக இந்தியா தனது கடமைகளை முழுமையாக சரியான நேரத்தில் தொடர்ந்து நிறைவேற்றுகிறது என்று கூறினார்.

    • வன அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து சிங்கக்குட்டியை மீட்டு உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர்.
    • ஒவ்வொரு மாதமும் 5 நிமிடங்கள் மக்களுக்கு தேவையான ஒரு விஷயத்தை எடுத்துரைக்க வேண்டும் என்று வித்தியாசமான தண்டனையை அளித்தார்.

    பாகிஸ்தானை சேர்ந்த 'யூ-டியூபர்' ரஜப்பட் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பங்கேற்ற அவரது நண்பரும், பிரபல யூ-டியூபருமான ஓமர் டோலா என்பவர் நண்பருக்கு வித்தியாசமாக பரிசளிக்க முடிவு செய்து ஒரு சிங்கக்குட்டியை திருமண பரிசாக வழங்கினார்.

    இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் விமர்சனங்களை பதிவிட்டனர். இதையடுத்து வன அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து சிங்கக்குட்டியை மீட்டு உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    அப்போது நீதிபதி, யூ-டியூபர் ரஜப்பட் உயிரியல் பூங்காவில் சிங்கக்குட்டியை பராமரிக்க நிதியுதவி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் ஒவ்வொரு மாதமும் 5 நிமிடங்கள் மக்களுக்கு தேவையான ஒரு விஷயத்தை எடுத்துரைக்க வேண்டும் என்று வித்தியாசமான தண்டனையை அளித்தார்.

    • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
    • அமெரிக்க இராணுவ விமானங்களின் தொலைதூர இலக்கு இந்தியா.

    அமெரிக்காவில் எவ்வித ஆவணங்களும் இன்றி சுமார் 11 மில்லியனுக்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து சட்டவிரோதமாக குடியேறிவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

    அந்த வகையில் தனது கடுமையான நிலைப்பாட்டை செயல்படுத்தும் வகையில், அமெரிக்க இராணுவ விமானம் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தவர்களை நாடு கடத்தத் தொடங்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து பெயர் தெரிக்க முடியாத அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் பேசும் போது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களுடன் C-17 விமானம் இந்தியாவுக்குப் புறப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.

    குடியேறிகளை நாடு கடத்தும் அமெரிக்க இராணுவ விமானங்களின் மிகத் தொலைதூர இலக்கு இந்தியா தான். டெக்சாஸ், எல் பாசோ மற்றும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிலிருந்து 5,000 க்கும் மேற்பட்ட குடியேறிகளை நாடு கடத்துவதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இதுவரை, இராணுவ விமானங்கள் குவாத்தமாலா, பெரு மற்றும் ஹோண்டுராஸுக்கு குடியேறிகளை அனுப்பி வைத்துள்ளன.

    குடியேற்றம் குறித்த அவசர அறிவிப்பின் ஒரு பகுதியாக டிரம்ப் கடந்த வாரம் நாடுகடத்தல் நடவடிக்கைகளைத் தொடங்கினார். இதுவரை லத்தீன் அமெரிக்காவிற்கு ஆறு விமானங்கள் புறப்படுள்ளன. இதில் நான்கு மட்டுமே குவாத்தமாலாவில் தரையிறங்கியது. இரண்டு அமெரிக்க C-17 சரக்கு விமானங்களை தரையிறங்க கொலம்பியா அனுமதிக்க மறுத்தது. பிறகு, டிரம்புடனான மோதலைத் தொடர்ந்து குடியேறிகளை அழைத்துச் செல்ல அதன் சொந்த விமானங்களை அனுப்பியது.

    "வரலாற்றில் முதல் முறையாக, சட்டவிரோத வெளிநாட்டினரைக் கண்டுபிடித்து, இராணுவ விமானங்களில் ஏற்றி, அவர்கள் வந்த இடங்களுக்கு அவர்களைத் திருப்பி அனுப்புகிறோம்," என்று டிரம்ப் கடந்த மாதம் செய்தியாளர்களிடம் கூறினார்.

    • பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
    • வாஷிங்டன் டி.சி.க்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பயணத்தின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ சந்திக்கும் பிரதமர் மோடி வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்காக பிரதமர் மோடி வருகிற 12-ம் தேதி அமெரிக்கா செல்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு நாள் பயணமாக பாரிஸ் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து வாஷிங்டன் டி.சி.க்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் பிரதமர் மோடி பிப்ரவரி 12-ம் தேதி மாலை அமெரிக்க தலைநகரில் தரையிறங்குவார் என்றும் மறுநாள் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இது.

    எனினும், மோடியின் அமெரிக்க பயணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. கடந்த வாரம், வெளியுறவு அமைச்சகம் (MEA) பிரதமர் மோடியின் அமெரிக்க வருகைக்காக வாஷிங்டனுடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் கூறியது.

    • கிளாடியா ஷீன்பாம் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை.
    • பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    கனடா மற்றும் மெக்சிகோ பொருட்களுக்கு வரி விதிக்கும் நடைமுறையை ஒருமாதத்திற்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இவரது அறிவிப்பு உலகளவில் வர்த்தக போர் ஏற்படும் அச்சத்தை தூண்டியது. இந்த நிலையில், மெக்சிகோ பிரதிநிதி கிளாடியா ஷீன்பாம் உடன் அமெரிக்கா நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.

    அதில் அமெரிக்க - மெக்சிகோ எல்லைக்கு 10 ஆயிரம் துருப்புகளை அனுப்புவதாக மெக்சிகோ ஒப்புக் கொண்டது. இதைத் தொடர்ந்து தான் வரி விதிக்கும் நடைமுறையை ஒருமாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இதே போல் கனடாவும் வரி விதிப்பை ஒத்திவைக்கும் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது.

    மிகவும் நட்புரீதியான உரையாடலுக்கு பிறகு எதிர்பார்க்கப்பட்ட வரிகளை ஒரு மாத காலத்திற்கு உடனடியாக இடைநிறுத்த ஒப்புக்கொண்டதாக அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் எனும் சமூக வலைதள பதிவில் தெரிவித்தார்.

    தற்போதைக்கு ஒரு மாத காலத்திற்கு வரி விதிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையில் ஒப்பந்தம் எட்டுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    "எங்கள் உறவு மற்றும் இறையாண்மைக்கு மிகுந்த மரியாதையுடன் அதிபர் டிரம்புடன் நல்ல உரையாடல்" என்று ஷீன்பாம் கூறினார்.

    ×