search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Sydney"

  • 1-0 எனும் கோல் கணக்கில் ஸ்பெயின், இங்கிலாந்தை வீழ்த்தியது
  • "நான் எதிர்பாராத நேரத்தில் அவர் முத்தமிட்டார்" என ஹெர்மோசோ நீதிமன்றத்தில் கூறினார்

  கடந்த 2023 ஆகஸ்ட் 20 அன்று, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உலக கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது. இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் இப்போட்டியில் மோதின.

  பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில், ஸ்பெயின் 1-0 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

  உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் பரிசு பெறும் நிகழ்ச்சியில் ஸ்பெயின் வீராங்கனைகள் பங்கேற்ற போது, அந்நாட்டின் கால்பந்து விளையாட்டு சங்க தலைவர் லூயிஸ் ரூபியாலஸ் (Luis Rubiales) ஜென்னி ஹெர்மோசோ (Jenni Hermoso) எனும் வீராங்கனையை கட்டியணைத்து முத்தமிட்டார்.

  தகாத முறையில் நடந்து கொண்ட ரூபியாலஸின் நடவடிக்கை பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

  இதையடுத்து, "நான் நடந்து கொண்ட விதம் தவறுதான். அதை ஒப்பு கொள்கிறேன். ஆனால் அதிகபட்ச மகிழ்ச்சியில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் அவ்வாறு நடந்து கொண்டேன்" என ரூபியாலஸ் தெரிவித்தார். தொடர்ந்து, அவருக்கு எதிராக எழுந்த கண்டனங்களால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

  "எனக்கு ரூபியாலஸ் நடந்து கொண்ட விதம் பிடிக்கவில்லை" என ஹெர்மோசோ அப்போது கருத்து தெரிவித்தார்.

  பெரும் சர்ச்சையை உண்டாக்கிய இந்நிகழ்வு குறித்து ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் (Madrid) நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

  இதில் ஹெர்மோசோ, தனது கருத்துக்களை பதிவு செய்தார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் அவரிடம் விசாரணை நடைபெற்றது.

  "என் சம்மதத்துடன் அந்த நிகழ்வு நடைபெறவில்லை. நான் எதிர்பாராத நேரத்தில் ரூபியாலஸ் அவ்வாறு நடந்து கொண்டார்" என ஹெர்மோசோ விசாரணையில் தெரிவித்தார்.

  பரிசு வழங்கும் நிகழ்ச்சியின் போது அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா வீடியோக்களை நீதிமன்றம் ஆய்வு செய்து வருகிறது.

  ஸ்பெயின் சட்டப்படி ஒருவரின் சம்மதமில்லாமல் அவருக்கு முத்தமிடுவது பாலியல் குற்றமாக கருதப்படும். எனவே, இப்போது நடைபெறும் விசாரணை முடிவில்தான் இவ்வழக்கில் ரூபியாலிஸ் பாலியல் குற்றம் புரிந்தவராக விசாரிக்கப்படுவாரா என தெரிய வரும்.

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி நாளை கடைசி டெஸ்டில் களம் இறங்குகிறது. #AUSvIND
  சிட்னி:

  விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டு மற்றும் மெல்போர்னில் நடந்த டெஸ்டுகளில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

  இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. மெல்போர்னில் கிடைத்த வெற்றியால் அதிக நம்பிக்கையை பெற்றுள்ள இந்திய அணி, கடைசி டெஸ்டிலும் சாதிக்கும் முனைப்புடன் ஆயத்தமாகியுள்ளது.

  இந்திய அணி 1947-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் விளையாடி வருகிறது. ஆனால் இதுவரை ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. ஏன், எந்த ஒரு ஆசிய அணியும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை. தற்போது இந்திய அணிக்கு புதிய வரலாறு படைக்க பொன்னான வாய்ப்பு கனிந்துள்ளது. கடைசி டெஸ்டில் டிரா செய்தாலே தொடரை வசப்படுத்தி விடலாம். இது இந்திய வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது. புஜாரா (2 சதத்துடன் 328 ரன்), கேப்டன் விராட் கோலி (259 ரன்) நல்ல பார்மில் உள்ளனர். மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்து தருவது அவசியமாகும். அப்போது தான் மிடில்வரிசை பேட்ஸ்மேன்கள் நெருக்கடியின்றி விளையாட முடியும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (20 விக்கெட்), முகமது ஷமி (14 விக்கெட்), இஷாந்த் ஷர்மா (11 விக்கெட்) வலு சேர்க்கிறார்கள்.

  இந்திய மிடில் வரிசை பேட்ஸ்மேன் ரோகித் சர்மா, மனைவிக்கு குழந்தை பிறந்ததால் தாயகம் திரும்பி விட்டார். இதனால் அணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும். ஆஸ்திரேலியாவில், சுழற்பந்து வீச்சுக்கு கொஞ்சம் ஒத்துழைக்கும் ஒரே ஆடுகளம் சிட்னி தான். அதனால் காயத்தில் இருந்து ஏறக்குறைய தேறிவிட்ட அஸ்வினை 2-வது சுழற்பந்து வீச்சாளராக சேர்த்துக் கொள்ளலாமா? அல்லது ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு அளிக்கலாமா? என்பது குறித்து அணி நிர்வாகம் யோசிக்கிறது. அணியில் யார்-யாருக்கு இடம் கிடைக்கும் என்பது இன்று தெரிந்து விடும்.

  இந்திய அணியின் எழுச்சியால் ஆஸ்திரேலிய அணி கலகலத்து போய் உள்ளது. அனுபவம் வாய்ந்த ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் இல்லாததால் அவர்களின் பேட்டிங் வரிசை சற்று பலவீனமாகவே காணப்படுகிறது. ஆனாலும் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன் என்று மிரட்டக்கூடிய பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள்.

  சொந்த மண்ணில் இந்தியாவிடம் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையை கட்டிக்காப்பதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லா வகையிலும் கடுமையாக மல்லுகட்டுவார்கள். சுழற்பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான மார்னஸ் லபுஸ்சானே அழைக்கப்பட்டு இருப்பதால், மிட்செல் மார்ஷ் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. தொடர்ந்து சொதப்பும் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்சை கழற்றி விட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் குரல் கொடுத்துள்ளனர். ஆனால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க அணி நிர்வாகம் விரும்புவதாக தெரிகிறது. #AUSvIND

  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஜனாதிபதிக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. #IndianPresident #RamNathKovind
  சிட்னி:

  இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசுமுறைப் பயணமாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று சிட்னியில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் ஜான் மோரிசனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர். அப்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது.  அதன்பின்னர் ஆஸ்திரேலிய கடற்படை தலைமையகத்திற்குச் சென்றார் ராம்நாத் கோவிந்த். அங்கு அவரை ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரல் வரவேற்றார். அப்போது ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். மேலும் 21 குண்டுகள் முழங்க வீரர்கள் மரியாதை செலுத்தி வரவேற்றனர். ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரை கான்பெராவில் உள்ள பாராளுமன்றத்தில் தான் இதுபோன்று துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்படுகிறது. கடற்படை தலைமையகத்தில் இந்த மரியாதை அளிப்பது மிகவும் அரிது என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடற்படை தலைமையகத்தில் ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். #IndianPresident #RamNathKovind

  ஆஸ்திரேலிய இசைத்திருவிழாவில் அளவு கடந்து போதை மாத்திரைகளை தின்றதால் 23 வயதான ஒரு ஆணும், 21 வயதான ஒரு பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர். #MusicFestival #Drug
  மெல்போர்ன்:

  ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் 2009-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் இசைத்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் அந்த இசைத்திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் போதை மாத்திரைகளை தின்று உற்சாகத்தில் மிதந்தனர்.

  சிலர் அளவு கடந்து போதை மாத்திரைகளை தின்றதால் மயங்கி சரிந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். அங்கு 23 வயதான ஒரு ஆணும், 21 வயதான ஒரு பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சிட்னி இன்டர்நேஷனல் ரெகாட்டா சென்டரில் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு இருந்த 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்கள் இசைத்திருவிழாவில் 120 போதை மாத்திரைகளை கொண்டு வந்து வினியோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

  இந்த சம்பவம் குறித்து நியூசவுத் வேல்ஸ் மாகாண முதல்-மந்திரி கிளாடிஸ் கூறும்போது, “நடந்து உள்ள சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இது ஒரு பயங்கரமான சம்பவம்தான். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுப்பேன்” என்று குறிப்பிட்டார்.

  இதேபோன்று 2013 மற்றும் 2015-ம் ஆண்டில் இசைத்திருவிழாவின்போது போதை மாத்திரை தின்று 2 வாலிபர்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

  இசைத்திருவிழாவில் இப்படி போதை மாத்திரைகள் தின்று பாதிப்புக்கு ஆளாகும் சம்பவங்கள் பெருகுவது ஏமாற்றம் அளிக்கிறது; இசைத்திருவிழாவில் போதை மாத்திரைகள் எடுத்துக்கொள்வதை சகித்துக்கொள்ள முடியாது என விழா ஏற்பாட்டாளர்கள் ஒரு அறிக்கையில் கூறி உள்ளனர்.  #MusicFestival #Drug
  ×