என் மலர்tooltip icon

    உலகம்

    • ஜோ பைடன், தனது நான்கு ஆண்டுகால பதவிக்காலத்தில் கையெழுத்திட்ட மொத்த நிர்வாக உத்தரவுகளின் எண்ணிக்கை வெறும் 162 மட்டுமே.
    • இந்த குறுகிய காலத்தில் டிரம்பிற்கு எதிராக 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    உலகையே உலுக்கிய சர்ச்சைக்குரிய முடிவுகளுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகின்றன.

    டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் பல அதிரடி மாற்றங்களை உலகம் கண்டது. பல விஷயங்கள் சர்ச்சைக்குரியதாக மாறி நீதிமன்றம் சென்றன. இந்த குறுகிய காலத்தில் டிரம்பிற்கு எதிராக 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வெறும் 100 நாட்களில், டிரம்ப் 140 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவற்றில் 36 ஒப்பந்தங்கள் முதல் வாரத்திலேயே கையெழுத்திடப்பட்டன. அதே நேரத்தில் முந்தைய ஆட்சியாளர் ஜோ பைடன், தனது நான்கு ஆண்டுகால பதவிக்காலத்தில் கையெழுத்திட்ட மொத்த நிர்வாக உத்தரவுகளின் எண்ணிக்கை வெறும் 162 மட்டுமே.

    ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றார். முதல் சில நாட்களில், மெக்சிகோ எல்லையில் 2,500 தேசிய காவல்படை உறுப்பினர்களுடன் 1,500 வீரர்கள் நிறுத்தப்பட்டனர். கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாய் இணைக்கப்படும் என்றும் கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறக்கூடும் என்றும் அவர் அறிவித்தார்.

    இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பரஸ்பரம் என்ற பெயரில் பழிவாங்கும் வரிகளை விதிப்பதன் மூலம் டிரம்ப் சர்வதேச வர்த்தகப் போரை தொடங்கினார். எதிர்த்து நின்ற சீனா மீது 245 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகள் மீதான வரி 90 நாட்களுக்கு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீதான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியர்கள் உட்பட மக்கள் இராணுவ விமானத்தில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இந்திய குடிமக்கள் உட்பட அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்த 1,39,000 பேரை இதுவரை நாடு கடத்தியுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவர ஒரு நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, ஆனால் ஒரு அமெரிக்க நீதிமன்றம் அந்த உத்தரவை அரசியலமைப்பை மீறுவதாகக் கூறி நிறுத்தி வைத்துள்ளது.

    தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையிலான அரசு செயல்திறன் துறை, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது. ஐஆர்எஸ் உட்பட அனைத்து அரசு நிறுவனங்களிலும் கிட்டத்தட்ட 60,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் டிரம்ப் நிர்வாகம் குறைந்தது 145,000 வேலைகளை நீக்கியுள்ளது.

    பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும், காசா கைப்பற்றப்பட்டு ஒரு ஆடம்பரக் குடியிருப்பாக மாற்றப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்க மதிப்புகளுக்கு எதிரானவை என்று முத்திரை குத்தப்பட்டன. போராடுபவர்களின் விசாக்களை ரத்து செய்து நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில், கடந்த 2021 இல் டிரம்ப் வெற்றி பெறாததால் வெள்ளை மாளிகையை தாக்கிய அவரது ஆதரவாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

    உலக சுகாதார அமைப்பு, காலநிலை ஒப்பந்தம் ஆகியவ்ற்றில் இருந்து அமெரிக்கா விலகியது. பின்தங்கிய நாடுகளுக்கான UNWRA நிதி நிறுத்தப்பட்டது. நாட்டில் இப்போது இரண்டு வகையான மக்கள் மட்டுமே இருப்பார்கள் என கூறி திருநங்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக டிரம்ப் கூறுகிறார். 100வது நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மிச்சிகன் மாகாணத்தில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    • பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் டிராபாசி பகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தேவேந்தர் சிங்.
    • வாடகைக்கு வேறு வீடு பார்க்க செல்வதாக அங்கு தங்கியிருந்த சக மாணவிகளிடம் கூறிவிட்டு வன்ஷிகா சென்றுள்ளார்.

    பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் டிராபாசி பகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தேவேந்தர் சிங். இவரது மகள் வன்ஷிகா (வயது 21).

    கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் கனடா சென்ற வன்ஷிகா ஒட்டாவாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார்.

    இந்நிலையில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மாலை வன்ஷிகா தான் தங்கி இருந்த வீட்டில் இருந்து வெளியே சென்றார். வாடகைக்கு வேறு  வீடு பார்க்க செல்வதாக அங்கு தங்கியிருந்த சக மாணவிகளிடம் கூறிவிட்டு வன்ஷிகா சென்றுள்ளார்.

    இரவு நீண்ட நேரமாகியும் வன்ஷிகா வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் போலீசில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து, மாயமான வன்ஷிகாவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 4 நாட்களாக தேடப்பட்டு வந்த வன்ஷிகா நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    வன்ஷிகாவின் உடல் அவர் தங்கி இருந்த வீட்டிற்கு அருகே கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது. வன்ஷிகாவை யாரேனும் கொலை செய்தனரா? தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகம் பந்தர் அப்பாஸ்.
    • பந்தர் அப்பாஸ் துறைமுகம் பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

    டெஹ்ரான்:

    ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும். எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது.

    இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இது ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியலிலும் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.

    இதற்கிடையே, சில தினங்களுக்கு முன் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நின்ற ஒரு கன்டெய்னர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுதும் போர்க்களம் போல காட்சி அளித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 400 பேர் வரை படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் மேலும் பலர் இறந்ததால் பலி எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. வெடிவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நியூசிலாந்தில் நேற்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

    வெல்லிங்டன்:

    நியூசிலாந்தில் நேற்று மாலை (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது.

    நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

    • 'சி -130 ஹெர்குலிஸ்' போர் விமானமானது நேற்று முன்தினம் கராச்சியில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு சென்றுள்ளது.
    • ராணுவத் தளவாடங்கள் எடுத்துச் செல்லப்பட்டதற்கான விவரங்கள் வெளியாகவில்லை.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது.

    இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள ராணுவ தளங்களில் பாகிஸ்தான் படைகளை குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சூழலில் துருக்கியும் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை வழங்கியதாகத் தகவல் வெளியானது.

    துருக்கி விமானப்படைக்குச் சொந்தமான 'சி -130 ஹெர்குலிஸ்' போர் விமானமானது நேற்று முன்தினம் கராச்சியில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு சென்றுள்ளது என்றும் இதில் ஏராளமான போர் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    விமானங்கள் வருகையை இரு நாடுகளும் உறுதி செய்தன. ஆனால் அவற்றில் ராணுவத் தளவாடங்கள் எடுத்துச் செல்லப்பட்டதற்கான விவரங்கள் வெளியாகவில்லை.

    இந்த நிலையில், போர் விமானங்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என்று துருக்கி தெரிவித்துள்ளது. சரக்கு விமானம் மட்டுமே பாகிஸ்தானுக்குச் சென்றதாகவும் துருக்கி விளக்கமளித்துள்ளது. 

    • சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
    • இந்த மாதத்தில் சீனாவில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய தீ விபத்தாகும்.

    சீனாவின் லியோனிங் மாகாணத்தில் சியாங் நகரில் உள்ள உணவகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.

    இன்று மதியம் 12.25 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்ததாக அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியது.

    தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், மீட்புப்பணிகளுக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த உணவக தீ விபத்து, இந்த மாதத்தில் சீனாவில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய தீ விபத்து. முன்னதாக, வடக்கு சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

    • இந்திய ராணுவம் விரைவில் ஊடுருவும்; நாங்கள் தயாராக உள்ளோம்.
    • அவரது இந்த பேச்சு யாருக்கும் ஆச்சரியம் கொடுக்கவில்லை.

    ஜம்மு காஷ்மீரில் குட்டி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர் இ தொய்பா உடைய கிளை அமைப்பு பொறுப்பேற்றது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் விசா ரத்து என உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.

    சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் வான்பரப்பை இந்திய விமானங்கள் பயன்படுத்த தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை பாஸ்கிதான் மேற்கொண்டது.

    மேலும் இரு நாடுகளுக்கிடையே சண்டை மூளுவதற்கான பதற்றமும் எல்லையில் நிலவி வருகிறது. பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், "இந்திய ராணுவம் விரைவில் ஊடுருவும்; நாங்கள் தயாராக உள்ளோம்" என்று பேசியிருக்கிறார்.

    மேலும் கவாஜா ஆசிப் பேட்டி ஒன்றில், பல தசாப்தங்களாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்து ஆதரவு அளிப்பதாக அண்மையில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியா எழுப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையில், இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜ்னா படேல் பேசியதாவது,

    பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளித்து ஆதரித்ததாக வாக்குமூலம் அளித்து இருக்கிறார். அவரது இந்த பேச்சு யாருக்கும் ஆச்சரியம் கொடுக்கவில்லை. உலகளாவிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு மோசமான நாடு பாகிஸ்தான் என்பதை அது அம்பலப்படுத்தி உள்ளது.

    பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு, பயிற்சி மற்றும் நிதியுதவி அளித்ததை ஒப்புக்கொண்டதை உலகம் முழுவதும் மக்கள் கேட்டனர்.

    2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலுக்குப் பிறகு, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதம் எல்லா வகையிலும் கண்டிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்தார்.

    • தொடக்கம் முதலே முன்னிலை பெற்ற லிபரல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
    • உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் காத்திருக்கிறேன்.

    கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    கடந்த மாதம் 14-ந்தேதி பிரதமராக பதவியேற்றார். இதற்கிடையே அக்டோபர் மாதம் வரை பதவிகாலம் உள்ள நிலையில் பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதாக மார்க் கார்னி அறிவித்தார்.

    மேலும் ஏப்ரல் 28-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னியும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவ்வும் களமிறங்கினர்.

    இதற்கிடையே 343 தொகுதிகளை கொண்ட கனடா பாராளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே முன்னிலை பெற்ற லிபரல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

    இந்நிலையில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகியுள்ள மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கனடாவின் பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், வெற்றி பெற்ற லிபரல் கட்சிக்கும் வாழ்த்துக்கள்.

    இந்தியாவும் கனடாவும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், சட்டத்தின் ஆட்சிக்கு உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் துடிப்பான இரு நாட்டின் மக்கள் உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. எங்கள் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், எங்கள் மக்களுக்கு அதிக வாய்ப்புகளைத் உருவாக்கவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தின் கீழ் இந்தியா-கனடா உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.    

    • 343 தொகுதிகளை கொண்ட கனடா பாராளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது.
    • தொடக்கம் முதலே லிபரல் கட்சி முன்னிலை பெற்றது.

    கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    கடந்த மாதம் 14-ந்தேதி பிரதமராக பதவியேற்றார். இதற்கிடையே அக்டோபர் மாதம் வரை பதவிகாலம் உள்ள நிலையில் பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதாக மார்க் கார்னி அறிவித்தார்.

    மேலும் ஏப்ரல் 28-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னியும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவ்வும் களமிறங்கினர். இதற்கிடையே 343 தொகுதிகளை கொண்ட கனடா பாராளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே லிபரல் கட்சி முன்னிலை பெற்றது. அனைத்து தொகுதிகளிலும் முன்னணி நிலவரம் வெளியானது. இதில் 161 தொகுதிகளில் லிபரல் கட்சி முன்னிலையில் இருந்தது. கன்சர் வேட்டிவ் கட்சி 150 இடங்களிலும், இதர இடங்களில் பிற கட்சிகளும் முன்னிலை பெற்றன.

    இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, லிபரல் கட்சி 167 இடங்களிலும் கன்சர்வேட்டிவ் கட்சி 145 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்மீத் சிங்கின் தேசிய ஜன நாயக கட்சி இந்த தேர்தலில் 343 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அக்கட்சி 8 இடங்களில் மட்டுமே முன்னிலையில் பெற்றது. கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சி 24 இடங்களை கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப் யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது.
    • கார்டினல் எனப்படும் கர்தினால்கள் நேற்று கூடி இது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    வாடிகன் சிட்டி:

    கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் (வயது 88) உடல் நலக்குறைவால் கடந்த 21-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் 26-ந் தேதி ரோமில் அடக்கம் செய்யப்பட்டது.

    போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப் யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இதற்கு விடை காணும் முயற்சியில் வாடிகன் இறங்கி இருக்கிறது.

    அதன்படி கார்டினல் எனப்படும் கர்தினால்கள் நேற்று கூடி இது குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் கான்கிளேவை (மாநாடு) அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ள நிலையில், போப்பை தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி படைத்த 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 135 பேர் ஆவர். அவர்கள் தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய போப் ஆக தேர்வு செய்வார்கள்.

    • பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தீவிர ஆலோசனை.
    • இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் பாகிஸ்தான் எல்லையில் படைகளை உஷார் படுத்தியுள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில இருப்பவர்களுக்கு கற்பனை செய்து பார்க்க முடியாத பதிலடி கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இந்திய பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை, அமைச்சர்கள் உள்ளிட்டவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் விரைவில் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிகிறது. இதனால் பாகிஸ்தான் தன்னை உஷார் படுத்தி வருகிறது. எல்லைகளில் படைகளை குவித்து வருகிறது.

    பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் அவ்வப்போது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப், இந்தியா விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும். இதனால் படைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் கூறுகையில் "நாங்கள் எங்கள் படையை வலுப்படுத்தியுள்ளோம். ஏனென்றால் இப்போது உடனடி தாக்குதல் ஒன்று இருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த சூழ்நிலையில், சில மூலோபாய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும், பாகிஸ்தான் ராணுவம் அரசுடன் இந்தியா தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது எனத் தெரிவித்ததுடன், இந்தியாவின் தாக்குதால் உடனடியாக இருக்கும் என்று அவர் நினைப்பதற்கான காரணங்கள் குறித்து தெரிவிக்கவில்லை.

    எங்களுடைய இருப்புகளுக்கு நேரடி மிரட்டல் இருந்தால் மட்டும் அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படும் மேலும் என்றார்.

    • வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளது.
    • தனது வான்வெளிப் பகுதியை இந்திய விமான நிறுவனங்கள் பயன்படுத்த பாகிஸ்தான் தடைவிதித்துள்ளது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.

    பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் சஸ்பெண்ட் செய்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறைக்கான பாராளுமன்றக் குழு கூட்டம் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங பிரதமர் மோடியை சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.

    இதனால் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. விரைவில் பாகிஸ்தானை தாக்கலாம் என்பதால் போர் பதற்றம் நிலவுகிறது.

    இந்தியா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பாகிஸ்தான் பதில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எல்லையில் படைகளை குவித்து வருகிறது. சிம்லா ஒப்பந்தத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது. வான்வெளியை பயன்படுத்த இந்தியாவுக்கு தடைவிதித்துள்ளது.

    இந்த நிலையில் ஆளுங்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் நிறுவனரும், மூன்று முறை பாகிஸ்தான் பிரதமருமான நவாஸ் ஷெரீப் தனது சகோதரரும், பிரதமருமான ஷெபாஷ் ஷெரீஃபிடம் இந்தியாவுக்கு எதிராக ஆக்ரோசமான எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், இந்தியா உடனான பதற்றத்தை கட்டுப்படத்த அனைத்து டிப்ளோமேட்டிக் வளங்களை பயன்படுத்தவும் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுத்த முடிவுகள் குறித்து நேற்று மாலை நவாஸ் ஷெரீப்பை சந்தித்து ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். அப்போது நவாஸ் ஷெரீப் இந்த ஆலோசனையை வழங்கியதாக கூறப்படுகிறது.

    ×