என் மலர்tooltip icon

    உலகம்

    கனடா தேர்தல் வெற்றி: ஆட்சியை தக்க வைத்த மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    X

    கனடா தேர்தல் வெற்றி: ஆட்சியை தக்க வைத்த மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    • தொடக்கம் முதலே முன்னிலை பெற்ற லிபரல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
    • உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் காத்திருக்கிறேன்.

    கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    கடந்த மாதம் 14-ந்தேதி பிரதமராக பதவியேற்றார். இதற்கிடையே அக்டோபர் மாதம் வரை பதவிகாலம் உள்ள நிலையில் பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதாக மார்க் கார்னி அறிவித்தார்.

    மேலும் ஏப்ரல் 28-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னியும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவ்வும் களமிறங்கினர்.

    இதற்கிடையே 343 தொகுதிகளை கொண்ட கனடா பாராளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே முன்னிலை பெற்ற லிபரல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

    இந்நிலையில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகியுள்ள மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கனடாவின் பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், வெற்றி பெற்ற லிபரல் கட்சிக்கும் வாழ்த்துக்கள்.

    இந்தியாவும் கனடாவும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், சட்டத்தின் ஆட்சிக்கு உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் துடிப்பான இரு நாட்டின் மக்கள் உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. எங்கள் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், எங்கள் மக்களுக்கு அதிக வாய்ப்புகளைத் உருவாக்கவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தின் கீழ் இந்தியா-கனடா உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×