என் மலர்tooltip icon

    உலகம்

    • பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா்.
    • இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தொலைபேசியில் பேசினார்.

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிழல் அமைப் பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' பொறுப்பு ஏற்றது.

    இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே மோதல் போக்கை அதிகரிக்க வேண்டாம் என்று இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இது தொடா்பாக இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடமும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மாா்கோ ரூபியோ பேச்சுவாா்த்தை மேற்கொள்ளவார் என்றும் அமெரிக்கா தெரிவித்தது.

    இதேபோல 'இந்தப் பதற்றமான சூழலுக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவாா்த்தை மூலம் அமைதித் தீா்வைக் காண வேண்டும்' என்று இங்கிலாந்தும் அழைப்பு விடுத்தது.

    இந்த நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தொலைபேசியில் பேசினார். சில மணி நேரம் இந்த உரையாடல் நடைபெற்றது.

    இதேபோல பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பேசினார். இரு நாடுகள் இடையே போர் பதட்டத்தை தணிக்க வேண்டும் என்று இரு நாட்டு தலைவர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.

    பஹல்காமில் நடந்த கொடுரமான பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு தனது வருத்தத்தை ஜெய்சங்கரிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

    பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் ஒத்துழைப்பதாக அமெரிக்காவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

    இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியுடன் நான் விவாதித்தேன். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் திட்டமிடுபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப் படும்" என்று தெரிவித்தார்.

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பேசும்போது காஷ்மீரில் நடந்த தாக்குதலை கண்டித்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நியாயமற்ற தாக்குதலை விசாரிப்பதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    தெற்காசியாவில் பதற்றத்தை தணிக்கவும், நேரடி தகவல் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்தவும், அமைதி, பாதுகாப்பை பராமரிக்கவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுமாறு பாகிஸ்தான் பிரதமரிடம் ரூபியோ கேட்டுக் கொண்டார்.

    • பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
    • அசீம் மாலிக் தற்போது பாகிஸ்தானின் உளவுப்பிரிவாக உள்ள ஐஎஸ்ஐ-யின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடந்த 22-ந்தேதி 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

    இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' பொறுப்பு ஏற்றது.

    இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

    பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

    புதிய நடவடிக்கையாக பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வழியை மூடியது.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு எல்லையில் போர் பதற்றமும் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அசீம் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவராக இருக்கும் நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி என்பது கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

    இவர் தற்போது பாகிஸ்தானின் உளவுப்பிரிவாக உள்ள ஐஎஸ்ஐ-யின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த பொறுப்புடன் அசீம் மாலிக்கிற்கு அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • எலான் மஸ்க் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டி வருவதாக கூறப்பட்டு வந்தது.
    • எலான் மஸ்க் அரசியல் விவகாரங்களில் அதிகரித்து வரும் ஈடுபாட்டால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார். இதனால் டிரம்புக்கு நெருங்கிய நண்பராகவும், அவரது நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் டாஸ் துறைக்கும் தலைமை வகித்தார். இதன்பின், டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விரைவில் விலக உள்ளதாக எலான் மஸ்க் கூறியிருந்தார்.

    இதனிடையே, எலான் மஸ்க் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டி வருவதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், டெஸ்லாவின் இயக்குநர் குழு தலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கின் அரசியல் ஈடுபாடு மற்றும் வருவாயில் 71 சதவீதம் சரிவு காரணமாக டெஸ்லாவின் இயக்குநர் குழு தலைமைத்துவ மாற்றத்தை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின்சார வாகன தயாரிப்பாளரின் பங்குகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அரசியல் விவகாரங்களில் அதிகரித்து வரும் ஈடுபாட்டால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் டெஸ்லா நிறுவனத்திற்கு புதிய CEO-வை தேர்ந்தெடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • டீசல் விலை கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.63 திர்ஹாமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
    • புதிய விலைகள் அனைத்தும் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

    அமீரக எரிசக்தி அமைச்சகத்தின் எரிபொருள் விலைக்குழுவுக்கான கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அமீரகத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்காக அரசு வழங்கி வந்த மானியம் ரத்து செய்யப்பட்டதால், ஒவ்வொரு மாதமும் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் அமீரக எரிசக்தி அமைச்சகம், அமீரக எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் பேசி இந்த விலை முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்த மாதத்திற்கான விலை நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமீரகத்தில் சூப்பர் 98 ரக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 2.58 திர்ஹாமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.57 திர்ஹாமாக இருந்தது. இதில் கடந்த மாதத்தை விட 1 பில்ஸ் அதிகரித்துள்ளது. ஸ்பெஷல் 95 ரக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 2.47 திர்ஹாமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.46 திர்ஹாமாக இருந்தது. இதில் 1 பில்ஸ் விலை அதிகரித்துள்ளது.

    இ-பிளஸ் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 2.38 திர்ஹாமில் இருந்து 2.39 திர்ஹாம் ஆக அதிகரித்துள்ளது. இந்த ரக பெட்ரோலின் விலை கடந்த மாதத்தை விட 1 பில்ஸ் அதிகரித்துள்ளது.

    அதேபோல் டீசல் விலை கடந்த மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.63 திர்ஹாமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விலையில் 11 பில்ஸ் குறைக்கப்பட்டு நடப்பு மாதம் லிட்டர் ஒன்றுக்கு 2.52 திர்ஹாம் ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த புதிய விலைகள் அனைத்தும் 5 சதவீத வாட் வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த வரி உட்பட அறிவிக்கப்பட்டுள்ள புதிய விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும். இந்த புதிய விலைகள் அனைத்தும் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மின்சாரம் இல்லாததால் மாட்ரிட் டென்னிஸ் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
    • இரவு வரை நீடித்த இந்த மின்வெட்டு காரணமாக நாடு இருளில் மூழ்கியது.

    மாட்ரிட்:

    ஸ்பெயினில் இரு தினங்களுக்கு முன் வரலாறு காணாத அளவில் மின்வெட்டு ஏற்பட்டது. இந்த திடீர் மின்வெட்டு காரணமாக தலைநகர் மாட்ரிட் உள்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் நாட்டில் உள்ள மின்சார ரெயில் சேவை, செல்போன் சேவைகள், விமான சேவைகள் உள்பட போக்குவரத்து, தொழில்நுட்ப சேவைகள் முடங்கின.

    மின்சாரம் இல்லாததால் மாட்ரிட் டென்னிஸ் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இரவு வரை நீடித்த இந்த மின்வெட்டு காரணமாக நாடு இருளில் மூழ்கியது.

    மின் வெட்டு பாதிப்பு அண்டை நாடுகளான பிரான்ஸ், போர்ச்சுகலிலும் உணரப்பட்டது. சுமார் 24 மணி நேரத்திற்கு பிறகு அங்கு மின்வெட்டு சீரமைக்கப்பட்டது.

    இந்நிலையில், வரலாறு காணாத இந்த மின்வெட்டு காரணமாக ஸ்பெயின் அரசுக்கு ரூ.15,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவீதம் ஆகும்.

    • பாகிஸ்தானில் இன்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இன்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 9.58 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

    • ஓமனில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • ரோமில் ஒரு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

    ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பு மற்றும் அதன் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார். மேலும், இது தொடர்பாக ஒப்பந்தத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். முதலில் மறுப்பு தெரிவித்த ஈரான் பின்னர் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது.

    ஈரான்- அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஓமன் மத்தியஸ்தம் செய்கிறது. இரண்டு முறை பேச்சுவார்த்தை ஓபன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. ரோமில் உள்ள தூதரகத்தில் ஒருமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்த நிலையில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஓமனில் நடைபெறும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாச்சி அராக்சி தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    வெள்ளிக்கிழமை பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துடன் ஆலோசனை நடத்த இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்கா உடனான ஒப்பந்தத்திற்கு உதவும்படி ஈரான் ரஷியாவிடம் உதவி கேட்டிருந்தது. அதற்கு ரஷியா சம்மதம் தெரிவித்துள்ளது.

    • பரஸ்பர வரி விதிப்பை டொனால்டு டிரம்ப் 90 நாட்கள் நிறுத்தி வைத்துள்ளார்.
    • வரி தொடர்பாக இந்தியா- அமெரிக்கா இடையே ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2ஆவது முறையாக பதிவி ஏற்றதும், பரஸ்பர வரி விதிப்பை நடவடிக்கையை மேற்கொண்டார். ஏப்ரல் 2ஆம் தேதி இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தது. அவரது நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. மற்ற நாடுகள் ஆலோசனை நடத்தி வந்தது.

    இதனைத் தொடர்ந்து 90 நாட்கள் பரஸ்பர வரி விதிப்பை டொனால்டு டிரம்ப் நிறுத்தி வைத்தார். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 90 நாள் கெடு ஜூலை 9ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த நிலையில் இந்த வரி விதிப்பு தொடர்பாக டொனால்டு டிரம்பிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது இந்தியாவுடனான வரி விதிப்பு பேச்சுவார்த்தை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒப்பந்தம் ஏற்படும் என நினைக்கிறேன்.

    இந்திய பிரதமர் மோடி இங்கே (அமெரிக்கா) வந்திருந்தார். ஒப்பந்தம் ஏற்பட அவர்கள் விரும்புகிறார்கள்" எனப் பதில் அளித்துள்ளார்.

    அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், இந்தியாவுடனான ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா மிகவும் நெருங்கியுள்ளது எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    பரபஸ்பர வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைத்திருந்தாலும் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரிகளைத் தவிர 10 சதவீதம் என்ற அடிப்படை வரி நடைமுறையில்தான உள்ளது.

    • சட்டப்பிரிவு 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் இந்திய ஒடுக்குமுறை இன்னும் அதிகரித்துள்ளது.
    • மோடியின் போர் வெறியையும், பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவரது ஆபத்தான லட்சியங்களையும் பாகிஸ்தான் கண்டிக்கிறது.

    பஹல்காம் தாக்குதல் குறித்து மோடி அரசை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார்.

    ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இம்ரான் கான் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பஹல்காம் சம்பவத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    புல்வாமா சம்பவம் நடந்தபோது, நாங்கள் இந்தியாவிற்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கினோம், ஆனால் இந்தியா எந்த உறுதியான ஆதாரத்தையும் வழங்கத் தவறிவிட்டது.

    2019 இல் நான் கணித்தது போல, பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகும் அதேதான் நடக்கிறது. சுயபரிசோதனை மற்றும் விசாரணைக்கு பதிலாக, மோடி அரசாங்கம் மீண்டும் பாகிஸ்தானைக் குறை கூறுகிறது.

    நவாஸ் ஷெரீப் மற்றும் ஆசிப் சர்தாரி போன்ற சுயநலவாதிகளிடமிருந்து எந்தவிதமான கடுமையான நிலைப்பாட்டையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அவர்களின் சட்டவிரோத சொத்து மற்றும் வணிக நலன்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராகப் பேச மாட்டார்கள்.

    1.5 பில்லியன் மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா இருப்பதால், குழப்பமடைவதற்குப் பதிலாக பொறுப்புடன் செயல்பட வேண்டும். அமைதியே எங்கள் முன்னுரிமை, ஆனால் அதை கோழைத்தனம் என்று தவறாகக் கருதக்கூடாது.

    2019 ஆம் ஆண்டில், முழு நாட்டின் ஆதரவுடன் எனது அரசாங்கம் செய்தது போல், எந்தவொரு இந்திய ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்கும் முழு திறனையும் பாகிஸ்தான் கொண்டுள்ளது. ஐ.நா. தீர்மானங்களால் உத்தரவாதம் அளிக்கப்பட்டபடி, காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமையின் முக்கியத்துவத்தை நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன்.

    ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தால் இந்தியா இந்த பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. சட்டப்பிரிவு 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் இந்திய ஒடுக்குமுறை இன்னும் அதிகரித்துள்ளது. இது காஷ்மீர் மக்களின் சுதந்திரத்திற்கான விருப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.

    மோடியின் போர் வெறியையும், பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவரது ஆபத்தான லட்சியங்களையும் பாகிஸ்தான் ஒரு நாடாக வன்மையாக கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    • இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுடன் பல மட்டங்களில் தொடர்பில் இருக்கிறோம்.
    • பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் பிரதமர் மோடி முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்.

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.

    சிம்லா ஒப்பந்தம் ரத்து, இந்திய விமானங்களுக்குப் பாகிஸ்தான் வான்பரப்பு மூடல் உள்ளிட்ட நடவைடிகைகளை பாகிஸ்தான் எடுத்துள்ளது. இதோடு நிற்காமல் இரு நாடுகளும் ராணுவ தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றன என்று தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க வெள்ளை மாளிகை விரும்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

    அவர் பேசியதாவது, "இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

    அங்கு நடக்கும் அனைத்தையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுடன் வெளியுறவுத்துறை மட்டுமல்லாது, பல மட்டங்களில் தொடர்பில் இருக்கிறோம். தீர்வுக்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று கூறினார்.

    நேற்றைய தினம், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இதில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் பிரதமர் மோடி முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது மேலும் பற்றத்தை அதிகரித்துள்ளது.  

    • உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ளனர்.
    • போப்பை தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி படைத்த 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 135 பேர் ஆவர்.

    கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் (வயது 88) உடல் நலக்குறைவால் கடந்த 21-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் 26-ந் தேதி ரோமில் அடக்கம் செய்யப்பட்டது.

    போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப் யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இதற்கு விடை காணும் முயற்சியில் வாடிகன் இறங்கி இருக்கிறது.

    அதன்படி கார்டினல் எனப்படும் கர்தினால்கள் கூட்டம் இது குறித்து ஆலோசனை நடத்தினர். அதன்படி புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் கான்கிளேவை (மாநாடு) அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    உலகம் முழுவதும் 252 கார்டினல்கள் உள்ள நிலையில், போப்பை தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி படைத்த 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 135 பேர் ஆவர். அவர்கள் தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய போப் ஆக தேர்வு செய்வார்கள்.

    இந்த சூழலில் அடுத்த போப் ஆண்டவருக்கான போட்டியில், ஹங்கேரியை சேர்ந்த கார்டினல் பீட்டர் எர்டோ (72), பிலிப்பைன்ஸை சேர்ந்த கார்டினல் லூயிஸ் அன்டோனியோ டாக்லே (67), ஆப்பிரிக்காவின் கானாவை சேர்ந்த கார்டினல் பீட்டர் டர்க்சன்(76), இத்தாலியைச் சேர்ந்த கார்டினல் பியட்ரோ பரோலின்(70) ஆகியோர் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இவர்களில் கார்டினல் பியட்ரோ பரோலின் அடுத்த போப் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. பியட்ரோ பரோலினுக்கு 41 சதவீத ஆதரவு இருப்பதாகவும், அடுத்ததாக லூயிஸ் அன்டோனியோ டாக்லே-க்கு 29 சதவீத ஆதாரவும் இருப்பதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன.

    • பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
    • இந்தியா ஜோடிக்கப்பட்ட மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.

    ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டதிலிருந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று ராணுவ தளபதிகளுடம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்தார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலைத் திட்டமிடுவதாக தங்கள் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல்தொடர்புத்துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

    பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து இந்தியா ஜோடிக்கப்பட்ட மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், ராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த இந்தக் கூற்றுக்களை முன்வைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

    பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுதான் என்றும், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை தான் மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான நிபுணர் ஆணையம் மூலம் நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பதாக கூறியபோதிலும், இந்தியா மோதல் பாதையைத் தேர்வு செய்கிறது என்று அவர் கூறினார். 

    ×