search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் நிரந்தர குழு ஆலோசகர் காஜல் பட்
    X
    இந்தியாவின் நிரந்தர குழு ஆலோசகர் காஜல் பட்

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் - ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்தல்

    பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும் என இந்தியாவின் நிரந்தர குழு ஆலோசகர் காஜல் பட் கூறியுள்ளார்.

    நியூயார்க்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் சமீபத்தில் பேசியது. அப்போது இந்தியா மீது குற்றச்சாட்டுகள் தெரிவித்தது. இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

    இது தொடர்பாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர குழு ஆலோசகர் காஜல் பட் ஐ.நா.சபையில் பேசியதாவது:-

    இங்கு இந்தியாவின் நிலைப்பாட்டை நான் திட்டவட்டமாக கூற விரும்புகிறேன். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய முழு யூனியன் பிரதேசமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பிரிக்க முடியாத பகுதியாக எப்போதும் இருந்திருக்கும்.

    இது பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளையும் உள்ளடக்கியது. பாகிஸ்தான் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக காலி செய்து வெளியேற வேண்டும்.

    இந்தியாவுக்கு எதிராக தவறான மற்றும் தீங்கிளைக்கும் பிரசாரங்களை பரப்புவதற்கு ஐ.நா. சபை வழங்கிய தளங்களை பாகிஸ்தானின் பிரதிநிதி தவறாக பயன்படுத்துவதும் பயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றித்திரியும் தனது நாட்டின் சோகமான நிலையில் இருந்து உலகின் கவனத்தை திசை திருப்ப வீணாக முயல்வதும் பாகிஸ்தானுக்கு உகந்தது அல்ல.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானின் பிரதிநிதி சில அர்ப்பமான கருத்துக்களை ஐ.நா.சபையில் தெரிவித்துள்ளார். அதற்கு நான் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும்.

    பாகிஸ்தான் உள்பட அனைத்து நாடுகள்,அண்டை நாடுகளுடனான உறவுகளை இந்தியா விரும்புகிறது. மேலும் சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனத்தின்படி நிலுவையில் உள்ள பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் இரு தரப்பும், அமைதியான முறையில் தீர்க்க உறுதிபூண்டுள்ளது.

    ஆனாலும் பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில் மட்டுமே எந்த அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையும் நடத்த முடியும். அதுபோன்ற சாதகமான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது.

    அதுவரை இந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, உதவி செய்வது, தீவிரமாக ஆதரிப்பது போன்ற கொள்கைகளை பாகிஸ்தான் கொண்டுள்ளது என்பதை ஐ.நா. உறுப்பு நாடுகள் அறிந்திருக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இதையும் படியுங்கள்...நதி என்றால் இப்படி இருக்கவேண்டும்... டுவிட்டரில் வைரலாகும் புகைப்படம்

    Next Story
    ×