search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமன்
    X
    நிர்மலா சீதாராமன்

    இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது- நிர்மலா சீதாராமன்

    மாதந்தோறும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலாகி வருவது இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதற்கு சாட்சி என்று உலக வங்கி கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசினார்.
    வாஷிங்டன்:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் உலக வங்கியின் வளர்ச்சி குழு கூட்டத்தில் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

    உலகளாவிய கொரோனா பிரச்சினைக்கு தீர்வு அளிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது. ‘வேக்சின் மைத்ரி’ திட்டத்தின்கீழ், 95 நாடுகளுக்கு 6 கோடியே 63 லட்சம் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மறுபடியும், இம்மாதத்தில் இருந்து தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யப்போகிறோம்.

    நடப்பாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 9.5 சதவீதமாக இருக்கும் என்று பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது.

    கொரோனா பிரச்சினையையும் மீறி, கடந்த நிதியாண்டில் இந்தியாவுக்கு ரூ.6 லட்சத்து 15 ஆயிரம் கோடி அன்னிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது. இதன்மூலம் உலக முதலீட்டாளர்களிடையே முதலீட்டுக்கு உகந்த நாடு என்ற அந்தஸ்தை தக்க வைத்திருப்பது தெரிகிறது.

    கொரோனாவை நெகிழ்வுத்தன்மையுடனும், துணிச்சலுடனும் இந்தியா எதிர்கொண்டது. மக்களின் உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும் என்ற இரட்டை இலக்குடன் செயல்பட்டது.

    கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம், ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமாக இருந்தது. இதனால், உள்ளூர் மட்டத்தில்தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்காரணமாக, குறைவான பாதிப்பு கொண்ட பகுதிகளில் பொருளாதார நடவடிக்கை தீவிரம் அடைந்தது.

    நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில், உள்நாட்டு உற்பத்தி விகிதம் 20.1 சதவீதம் வளர்ந்தது. அதாவது, கொரோனாவுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், 90 சதவீத அளவுக்கு நிலைமை மீண்டுள்ளது.

    கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், கடந்த ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் ஜி.எஸ்.டி. வசூல் தலா ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிடைத்தது. இது, இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதற்கு சாட்சி ஆகும். வரும் மாதங்களிலும் ஜி.எஸ்.டி. வசூல் அதிகமாக இருக்கும்.

    ஜிஎஸ்டி

    அதிகமான தடுப்பூசி போட்டதில் உலக அளவில் 2-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. செப்டம்பர் 30-ந்தேதி நிலவரப்படி, 95 கோடியே 13 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயதை தாண்டிய 72.8 சதவீதம்பேர், ஒரு டோஸ் மட்டுமாவது போட்டுள்ளனர். தடுப்பூசி பணி, மேல்மட்ட அளவில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.6 லட்சத்து 29 ஆயிரம் கோடி மதிப்புள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், மத்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகள், கொரோனாவுக்கு பிந்தைய நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வலிமையான அடித்தளம் அமைத்துள்ளன.

    உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தால், இன்னும் 5 ஆண்டுகளில் குறைந்தபட்ச உற்பத்தி 50 ஆயிரம் கோடி டாலராக இருக்கும்.

    உள்கட்டமைப்புக்கும், தொழில் தொடங்க உகந்த சூழ்நிலையை உருவாக்கவும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

    இந்திய-அமெரிக்க பொருளாதார மற்றம் நிதி ஒத்துழைப்பு கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அங்கு அமெரிக்க நிதி மந்திரி ஜேனட் எல்லனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சட்டவிரோத நிதியுதவி, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி, சட்டவிரோத பண பரிமாற்றம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.


    Next Story
    ×