search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்காக அங்கு உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் முன்பு மக்கள்
    X
    அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்காக அங்கு உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் முன்பு மக்கள்

    புதிய வகை கொரோனா வைரஸ் - உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்படும் இங்கிலாந்து

    புதிய வகை கொரோனா வைரசால் இங்கிலாந்து உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்படுகிறது.
    லண்டன்:

    சீனாவில் கடந்த ஆண்டு தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ்ஓராண்டாக உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த கொடிய வைரசை அழிப்பதற்கான தடுப்பூசிகள் ஒருசில நாடுகளில் மக்களின் பயன்பாட்டுக்கு வந்திருப்பது உலக மக்கள் அனைவருக்கும் நிம்மதியளிப்பதாக அமைந்துள்ளது.

    இப்படியான சூழலில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியிருப்பது ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டன் மற்றும் அந்த நாட்டின் தெற்கு பகுதிகளில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த புதிய வகை வைரஸ் ஏற்கனவே பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவை விட 70 சதவீதம் அதிவேகமாக பரவி வருவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

    இதனால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதனிடையே ஏற்கனவே சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசால் திணறி வரும் உலக நாடுகள் இங்கிலாந்தில் புதிய வகை கொரனோ வைரஸ் உருவாகி இருப்பதை கண்டு மிரண்டு போயுள்ளன.

    இந்த புதியவகை கொரோனா வைரஸ் தங்கள் நாட்டில் பரவாமல் தடுப்பதற்கான தீவிர முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளன.

    அந்த வகையில் புதிய வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்தை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் இறங்கியுள்ளன.

    இதில் முதற்கட்டமாக இங்கிலாந்துடனான விமான சேவையை உலக நாடுகள் ரத்து செய்து வருகின்றன. அந்த வகையில் இந்தியா, கனடா டென்மார்க் உள்பட 21 நாடுகள் ஏற்கனவே இங்கிலாந்துக்கு விமான போக்குவரத்தை ரத்து செய்துவிட்டன.

    இதன் தொடர்ச்சியாக தற்போது ரஷியா, கொலம்பியா, கவுதமாலா, பனாமா உள்ளிட்ட 20 நாடுகள் இங்கிலாந்துடனான விமான சேவைக்கு தடை விதித்துள்ளன.

    அதேபோல் சவுதி அரேபியா புதிய வகை கொரோனா வைரசுக்கு அஞ்சி தனது எல்லைகள் அனைத்தையும் முழுவதுமாக மூடி விட்டது.

    இந்த நிலையில் சவுதி அரேபியாவை பின்பற்றி ஸ்பெயின், இஸ்ரேல், ஓமன், குவைத் ஆகிய நாடுகளும் தங்களது எல்லைகளை முழுவதுமாக மூடி விட்டன.
    Next Story
    ×