search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜார்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற பிரசார பேரணியில் கலந்து கொள்ள ஜனாதிபதி டிரம்ப்
    X
    ஜார்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற பிரசார பேரணியில் கலந்து கொள்ள ஜனாதிபதி டிரம்ப்

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வி: தேர்தல் முடிவுகளை மாற்ற ஜார்ஜியா மாகாண ஆளுநருக்கு டிரம்ப் அழுத்தம்

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப், ஜார்ஜியா மாகாணத்தில் தேர்தல் முடிவுகளை மாற்ற அந்த மாகாண ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு தற்போதைய ஜனாதிபதி டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

    இவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அதேசமயம் தேர்தல் நடந்து முடிந்து ஒரு மாதமான பிறகும் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக உள்ளார். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டும் அவர் ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.

    இந்த குழப்பங்களால் அமெரிக்காவின் சமீபத்திய வரலாற்றில் இது மிகவும் கசப்பான தேர்தலாக மாறியுள்ளது. எனினும் தேர்தல் முடிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் டிரம்ப் தரப்பு தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. ஆனாலும் டிரம்ப் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காமல் விடாப்பிடியாக உள்ளார்.

    இதனிடையே வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி ஜார்ஜியா மாகாணத்தில் இருந்து 2 செனட்சபை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கிறது.

    இதில் குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய செனட் சபை உறுப்பினர்களான டேவிட் பெர்ட்யூ (வயது 70), கெல்லி லோப்லர் (50) ஆகிய இருவரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். செனட் சபையில் குடியரசு கட்சியின் பெரும்பான்மை தக்கவைப்பதற்கு இவர்களின் வெற்றி முக்கியமானதாகும்.

    ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் ஜார்ஜியா மாகாணத்தை கைப்பற்றி விட்ட நிலையில், செனட் சபை தேர்தலில் வெற்றி பெற குடியரசு கட்சி தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளது.

    அந்த வகையில் ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக ஜனாதிபதி டிரம்ப் ஜார்ஜியா மாகாணத்தில் நேற்றுமுன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் ஜோ பைடன் மோசடி செய்து தன்னிடம் இருந்து வெற்றியை பறித்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

    இதுபற்றி அவர் கூறுகையில் “அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றி என்னிடம் இருந்து திருடப்பட்டுள்ளது. ஜோ பைடன் மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளார். இதற்காக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமானது. நாம் இன்னும் இதில் வெற்றி பெறுவோம்” என்றார்.

    முன்னதாக இந்த பிரசாரத்தில் கலந்து கொள்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு டிரம்ப், ஜார்ஜியா மாகாண ஆளுநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த மாகாணத்தில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க கூறி அவருக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:-

    குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜிய மாகாணத்தின் ஆளுநரான பிரயான் கெம்பை, டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாகாண சட்டமன்ற உறுப்பினர்களின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி தனக்கு ஆதரவான ஜனாதிபதி தேர்வர்களை கணக்கெடுக்கும்படி வற்புறுத்தினார். அதோடு வாக்குச்சீட்டுகளில் உள்ள கையொப்பங்களை தணிக்கை செய்யவும் அவர் உத்தரவிட்டார். ஆனால் ஆளுநர் பிரயான் கெம்ப் இந்த 2 யையும் செய்ய தனக்கு அதிகாரமில்லை என கூறி மறுத்துவிட்டார்.

    இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×