search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப்
    X
    டிரம்ப்

    தபால் வாக்குமுறை ஊழல் நிறைந்தது - அது நமது அமைப்பை அழித்துவிட்டது : டிரம்ப் குற்றச்சாட்டு

    தபால் வாக்குமுறை ஊழல் நிறைந்தது என்பதை நான் பல காலமாக சொல்லி வந்திருக்கிறேன். அது நமது அமைப்பை அழித்துவிட்டது என டிரம்ப் கூறியுள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அதிபர் தேர்தலை தொடர்ந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சமீபத்திய தரவுகளின்படி, பிடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார். பிடனுக்கு 50.5 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், சமீபத்திய கணிப்புகளின்படி டிரம்பிற்கு 47.9 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

    முன்னாள் துணை ஜனாதிபதி பிடன் இப்போது அமெரிக்காவின் 46 வது அதிபராக ஆறு வாக்குகள் மட்டுமே தேவைப்படுகிறது.  மறுதேர்தலைக் கோரும் டிரம்ப், 50 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். தற்போது அமெரிக்க தேர்தலின் இறுதி முடிவுகள் அலாஸ்கா(3), ஜார்ஜியா (16), நெவாடா (6), வட கரோலினா (15) மற்றும் பென்சில்வேனியா (20) ஆகிய ஐந்து மாநிலங்களின் முடிவுகளின் முடிவைப் பொறுத்து அமைய உள்ளது.

    அதிலும் குறிப்பாக 20 தேர்தல் வாக்குகளை கொண்ட பென்சில்வேனியா மாநிலத்தில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு ஆரம்பத்தில் டிரம்ப் 1,08,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார். ஆனால் அடுத்தடுத்த நிலைகளில் ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று வருகிறார்.

    இதனால் ஜோ பைடன் பென்சில்வேனியாவில் நிச்சயம் வெற்றி பெறுவார் என ஜனநாயக பிரச்சாரக்குழு கூறுகிறது. பென்சில்வேனியாவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் இன்று தெரியவந்துவிடும் என்று மாநில செயலாளர் கேத்தி புக்வார் தெரிவித்துள்ளர். அதே நேரம் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாகவும், இதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறி வருகிறார்.

    இந்நிலையில் வெள்ளை மாளிகையில் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

    “தபால் வாக்குமுறை ஊழல் நிறைந்தது என்பதை நான் பல காலமாக சொல்லி வந்திருக்கிறேன். அது நமது அமைப்பை அழித்துவிட்டது. இதன் காரணமாக எளிதில் ஊழல் செய்வதற்கான வழி ஏற்பட்டு விடுகிறது.

    அதிபர் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்க இன்னும் சில வாக்குகளே மிச்சம் இருக்கின்றன. ஜனநாயக கட்சியினர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பல இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். குடியரசு கட்சியினர் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட பல இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை. நாம் வெற்றி பெற வேண்டிய பல இடங்களில் வாக்குகளின் எண்ணிக்கை மாற்றப்பட்டுவிட்டது.

    நியாயமான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றால் நான் எளிதாக வெற்றி பெறுவேன்.  ஆனால் சட்டவிரோதமான வாக்குகள் எண்ணப்பட்டால், தேர்தலை அவர்கள் நம்மிடம் இருந்து திருடிச் செல்லும் நிலை ஏற்படும்” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

    Next Story
    ×