search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிரவ் மோடி
    X
    நிரவ் மோடி

    லண்டன் கோர்ட்டில் நிரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கின் 2-ம் கட்ட விசாரணை

    லண்டன் கோர்ட்டில், நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கின் 5 நாள் விசாரணை மீண்டும் தொடங்கியது.
    லண்டன்:

    பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். லண்டனில் தங்கி இருந்த அவர், கடந்த ஆண்டு மார்ச் 19-ந்தேதி, இந்தியாவின் வேண்டுகோளின்பேரில் கைது செய்யப்பட்டார்.

    அப்போதிருந்து லண்டனில் உள்ள வான்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இந்திய கோர்ட்டுகளில் வழக்கை எதிர்கொள்ள அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரி இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கின் முதல்கட்ட விசாரணை, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த மே மாதம் 5 நாட்கள் நடைபெற்றது.

    இந்நிலையில், 2-ம் கட்ட விசாரணை நேற்று அதே கோர்ட்டில் தொடங்கியது. மாவட்ட நீதிபதி சாமுவேல் கூசி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. லண்டன் சிறையில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார்.

    சி.பி.ஐ., அமலாக்கத்துறை தரப்பில் அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். அவர்கள் சார்பில் இங்கிலாந்து அரசு வக்கீல் வாதாடினார். இந்த விசாரணையும் 5 நாட்கள் நடைபெறும்.

    அதன்பிறகு, நிரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்களை ஏற்றுக்கொள்வது குறித்த வாதங்கள், நவம்பர் 3-ந்தேதி நடைபெறும். டிசம்பர் 1-ந் தேதி, இருதரப்பும் இறுதி வாதங்களை முன்வைக்கும். அதைத்தொடர்ந்து அம்மாதத்திலேயே நீதிபதி சாமுவேல் கூசி தீர்ப்பளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்றைய விசாரணையின்போது, பத்திரிகைகள் செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று நிரவ் மோடியின் வக்கீல் கிளேர் மோன்ட்கோமெரி கேட்டுக்கொண்டார்.

    இந்த வழக்கு விசாரணையில் கூறப்படும் தகவல்களை இந்தியாவில் பா.ஜனதா நிர்வாகிகள் அரசியல்ரீதியாக பயன்படுத்திக்கொள்வதால், இந்த தடையை விதிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

    ஆனால், நீதிபதி சாமுவேல் கூசி, பத்திரிகைகள் செய்தி வெளியிட தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டார்.
    Next Story
    ×