search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அமீரகத்தில் இன்று முதல் பள்ளிவாசல்களில் 50 சதவீதம் பேர் தொழுகை செய்ய அனுமதி

    அமீரகத்தில் இன்று முதல் பள்ளிவாசல்களில் 50 சதவீதம் பேர் தொழுகை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    துபாய்:

    அமீரகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிவாசல்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் 30 சதவீதம் பேருடன் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

    தற்போது அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் இன்று முதல் பள்ளிவாசல்களில் 50 சதவீதம் பேர் தொழுகை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தொழுகை செய்யும் போது இருவருக்கு இடையே 2 மீட்டர் சமூக இடைவெளி இருக்க வேண்டும். பாங்கு சொல்வதற்கும், தொழுகை செய்வதற்கும் இடைப்பட்ட நேரமானது கூடுதலாக 10 நிமிடம் இருக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

    அதே சமயம் மக்ரிப் தொழுகை நேரம் 5 நிமிடம் மட்டுமே இருக்கும். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளை தொழுகை செய்ய வருபவர்கள் பின்பற்ற வேண்டும்.

    அனைத்து நேரங்களிலும் முககவசத்தை அணிந்திருக்க வேண்டும். சொந்தமாக தொழுகை விரிப்புகளை கொண்டு வர வேண்டும். வீட்டில் இருந்தே ஒளு செய்து வர வேண்டும்.

    தொழுகை நேரத்தில் மட்டுமே பள்ளிவாசலுக்கு வர வேண்டும். வயதானவர்களும், குழந்தைகளும், நாள்பட்ட வியாதிகள் இருப்பவர்கள் பள்ளிவாசலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 12 வயதுக்கு உட்பட்டவர்களும் பள்ளிவாசலுக்கு வர அனுமதியில்லை.

    மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பள்ளிவாசலுக்கு வர அனுமதி கிடையாது. பள்ளிவாசல்களில் யாருடனும் கைக்குலுக்கவோ அல்லது கட்டித் தழுவி வாழ்த்து சொல்லவோ கூடாது. வாசல்களில் கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும்.

    இந்த தகவலை இஸ்லாமிய விவகாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×