search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிணமாக மீட்கப்பட்ட பார்க் ஒன் சூன்
    X
    பிணமாக மீட்கப்பட்ட பார்க் ஒன் சூன்

    மாயமான சியோல் நகர மேயர் பிணமாக மீட்பு - தென்கொரியாவில் பரபரப்பு

    மாயமான தென்கொரியாவின் சியோல் நகர மேயர் பார்க் ஒன் சூன் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    சியோல்:

    தென்கொரிய நாட்டின் தலைநகரான சியோலின் மேயராக செயல்பட்டு வந்தவர் பார்க் ஒன் சூன். ஆளும் மத்திய இடது ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பார்க் தென்கொரியாவின் அதிபர் தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்பட்டவர். 

    இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மேயர் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் பார்க் மீது 'மி டூ’ பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தினார்.

    இந்த குற்றச்சாட்டுகள் தென்கொரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தனது தந்தையை காணவில்லை எனவும், அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் பார்க்கின் மகள் நேற்று முன்தினம் போலீசில் புகார் அளித்தார். 

    இதையடுத்து, மாயமான பார்க்கை தேடும் பணியில் சியோல் நகர போலீசார் ஈடுபட்டனர். பார்க்கின் செல்போன் கடைசியாக சியோலின் சங்பக் என்ற மலைப்பகுதியில் செயல்பாட்டில் இருந்துள்ளது.

    அதன்பின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மலைப்பகுதியில் போலீசார் தேடுதல் பணியை மேற்கொண்டு வந்தனர்.

    பார்க் ஒன் சூன்

    இந்நிலையில், மாயமான பார்க் ஒன் சூன் சங்பக் மலைப்பகுதியில் நேற்று பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தன்மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக
    போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். 

    மேலும், அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதிவைத்திருந்த கடிதத்தையும் பார்க்கின் அலுவலகத்தில் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    அந்த கடிதத்தில்,’அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். எனது வாழ்க்கையில் இருந்த அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தினரிடம் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன், அவர்களுக்கு நான் மிகுந்த வலியை கொடுத்துவிட்டேன். நான் போகிறேன்’ என எழுதி வைத்துள்ளார்.

    கடிதத்தை கைப்பற்றியுள்ள போலீசார் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சியோல் நகர மேயர் தற்கொலை சம்பவம் தென்கொரியாவில் பெரும் பரபரப்பை
    ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×