search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனாவை முடிவுக்கு கொண்டு வரும் சமூக பொறுப்பு யாரிடம் உள்ளது?

    கொரோனா வைரஸ் தொற்றை முடிவுக்கு கொண்டு வரும் சமூக பொறுப்பு யாரிடம் உள்ளது என்பது குறித்து வெள்ளை மாளிகை மருத்துவ நிபுணர் டாக்டர் அந்தோணி பாசி கூறினார்.
    வாஷிங்டன்:

    உலகின் பிற எந்த நாடுகளைக் காட்டிலும், அமெரிக்காவை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆட்டிப்படைத்து வருகிறது.

    அங்கு நேற்று முன்தினம் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அங்கு கொரோனா தாக்குதலின் புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணரும், வாஷிங்டன் வெள்ளை மாளிகை கொரோனா சிறப்பு பணிக்குழு நிபுணருமான டாக்டர் அந்தோணி பாசி, நீண்ட இடைவெளிக்கு பின்னர் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டாக்டர் அந்தோணி பாசி


    40 சதவீத மக்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை. சிலருக்கு லேசனாது முதல் கடுமையானது வரை அறிகுறிகள் இருக்கின்றன. சிலர் ஆஸ்பத்திரிகளில் வாரக்கணக்கிலும், சிலர் தீவிர சிகிச்சை பிரிவிலும் இருக்கிறார்கள். சிலர் வென்டிலேட்டர்களில் வைக்கப்படுகிறார்கள். சிலர் இறந்தும்போகிறார்கள். இப்படி கொரோனா வைரஸ் தொற்று நோய் போல இதுவரை எந்தவொரு தொற்றுநோயும் இருந்தது இல்லை.

    இதில் யார் மீதும் குற்றம் காணாமல் ஒன்றை மக்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். கொரோனா வைரஸ் தொற்றுநோயை முடிவுக்கு கொண்டு வரும் சமூக பொறுப்பு ஒவ்வொரு தனிநபரின் கையிலும் இருக்கிறது. இதை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்பினால், உண்மையிலேயே அதை செய்ய முடியும்.

    அப்போது ஒரு தடுப்பூசி வரும். அது சவப்பெட்டியில் ஆணி அறைவதை முடிவுக்கு கொண்டு வரும். இதில் நம் அனைவருக்கும் பங்கு உண்டு என்பதை நாம் உணர வேண்டும்.

    கொரோனாவை பொறுத்தமட்டில் உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், நீங்கள் அதை மற்றவர்களுக்கு பரப்புகிற நிலை ஏற்பட்டு விடுகிறது. இப்போது இந்த தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்களாக இளைஞ்ர்கள் இருக்கிறார்கள்.

    எனவே மக்கள் இந்த வைரசை மற்றவர்களுக்கு பரப்புகிறவர்களாக உள்ளனர். பாதிக்கப்படக்கூடிய மற்றொருவரை இது பாதிக்கும். அது உங்கள் பாட்டியாக, தாத்தாவாக, மாமாவாக இருக்கலாம். புற்றுநோய் தாக்கி கெமோதெரபி சிகிச்சை பெறுகிறவர்களையும், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்படட குழந்தையையும் கூட இந்த நோய் தாக்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நிருபர்களிடம் பேசுகையில், “25 லட்சம் அமெரிக்கர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் உயிரிழந்துள்ளனர். 50 மாகாணங்களும் பொருளாதார நடவடிக்கைகளை பாதுகாப்புடனும், பொறுப்புணர்வுடனும் திறந்து விடுகின்றன. ஆனாலும் கடந்த ஒரு வாரமாக இந்த வைரஸ் கூடுதலாக பாதித்து வருகிறது” என குறிப்பிட்டார்.

    மேலும், “அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை திறந்து விடுவதால், 30 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
    Next Story
    ×