search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானத்திற்குள் ஏறி செல்லும் படிக்கட்டில் சிறப்பு எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி
    X
    விமானத்திற்குள் ஏறி செல்லும் படிக்கட்டில் சிறப்பு எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி

    துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை

    துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை தொடங்க உள்ளதால், அதற்கான முன் ஏற்பாடாக கிருமி நீக்க பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    துபாய்:

    துபாய் சர்வதேச விமான நிலையமானது உலகில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் ஒன்றாகும். சுமார் 7 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான கட்டமைப்பில் இயங்கும் இந்த விமான நிலையத்தில் 140-க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் உலகின் அனைத்து முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் விமானங்களை இயக்கி வருகிறது.

    விமானத்தில் ஊழியர்கள் கிருமி நீக்க பணிகள் மேற்கொள்வதை படத்தில் காணலாம்.


    இதுவரை இந்த விமான நிலையத்தில் 100 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். சமீபத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டின் எல்லைகள் மூடப்பட்டதை தொடர்ந்து விமான சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. தற்போது மீட்பு பணி விமானங்களுடன் ஒரு சில பயணிகள் விமானங்களும் இயக்கப்பட தொடங்கியுள்ளது.

    அமீரகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மீண்டும் அனைத்து நாடுகளுக்குமான பன்னாட்டு விமான சேவைகள் புத்துயிர் பெற உள்ளது. இதனை அடுத்து தற்போது துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து பகுதிகள் மற்றும் விமானங்களில் உச்சகட்ட கிருமி நீக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக விமான நிலையத்திற்குள் இயங்கும் பஸ், ரெயில், விமானத்தில் ஏறும் படிக்கட்டுகள், ஏரோ பிரிட்ஜ் எனப்படும் விமானத்திற்குள் செல்லும் பாதை, பயணிகள் காத்திருக்கும் அறை, கழிவறைகள், குடியேற்ற பிரிவு, சுங்கத்துறை, விமான பாதுகாப்பு படை அலுவலகம் என்று விமான நிலையத்தின் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    தற்போது பயணிகள் பயன்படுத்தும் பகுதிகள் அனைத்தும் தொடர்ந்து கிருமி நீக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக விமான நிலைய ஊழியர்கள் சிறப்பு வாகனங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர். விரைவில் விமான போக்குவரத்து முழுமையாக தொடங்க உள்ள நிலையில் இந்த பணிகள் விமான பயணிகளுக்கு சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதாக உள்ளது என விமான நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×