search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்
    X
    அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்

    பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கான சட்ட பாதுகாப்பு பறிப்பு - டிரம்ப்

    பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கான சட்டப்பாதுகாப்பை பறிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்து போட்டார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த நிலையில், தபால் மூலம் செலுத்துகிற ஓட்டுகள், தேர்தலை நம்பகத்தன்மையற்ற ஒன்றாக ஆக்கி விடும் என்று கூறும் டுவிட்டர் பதிவுகளை ஜனாதிபதி டிரம்ப் சில தினங்களுக்கு முன் வெளியிட்டார்.ஆனால் இதை டுவிட்டர் ஏற்கவில்லை. டிரம்பின் கருத்துக்கு ஆதாரம் இல்லை என்று கூறியதுடன், சரியான தகவலை பெறுவதற்கான இணைப்பையும் டுவிட்டர் வெளியிட்டது. இது டிரம்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தனது அரசியல் உரிமைகள் பறிக்கப்படுவதாக மீண்டும் டுவிட்டரில் பதிவிட்டார். அத்துடன் பேஸ்புக் நிறுவனமோ, தனியார் நிறுவனங்களோ மற்றவர்கள் கருத்து குறித்து தீர்ப்பு அளிப்பது சரியல்ல என்றும் கருத்து தெரிவித்தார்.

    அதற்கு பதில் அளித்த டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சி, தன் நிறுவனத்தின் நிலைப்பாட்டுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்தார். தவறான தகவல்களை உபயோகிப்பாளர்களுக்கு சுட்டிக்காட்டுவதுதான் தங்களின் நோக்கம் என குறிப்பிட்டார்.

     பேஸ்புக், டுவிட்டர்


    இப்படி மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து சமூக ஊடகங்களுக்கு கடிவாளம் போடும் நிர்வாக உத்தரவில் கையெழுத்து போடுவேன் என டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

    அதன்படியே சமூக ஊடகங்களுக்கான சட்ட ரீதியிலான பாதுகாப்பை பறித்துக்கொள்வதை நோக்கமாக கொண்ட நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்து போட்டுள்ளார். இதனால் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராக அதன் கட்டுப்பாட்டாளர்கள் சட்ட நடவடிக்கைகள் எடுக்க அதிகாரம் வழங்கப்படுகிறது.

    இந்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்:-

    * பேஸ்புக், டுவிட்டர், யு டியுப் போன்ற சமூக ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கும் சட்டமான தகவல்தொடர்பு ஒழுக்க சட்டத்தை தெளிவுபடுத்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

    * தகவல்தொடர்பு ஒழுக்க சட்டம் பிரிவு 230-ன் கீழ் பொதுவாக சமூக ஊடகங்கள் அதன் உபயோகிப்பாளர்களால் செய்யப்படுகிற பதிவுகளுக்கு பொறுப்பேற்காது. ஆனால் ஆபாசமான, துன்புறுத்துகிற, வன்முறையான பதிவுகளை அகற்றுவது போன்ற தடுப்பில் ஈடுபட முடியும். உபயோகிப்பாளர் செய்கிற பதிவினை திருத்தினால், இந்த சட்டப்பூர்வ பாதுகாப்பு, சமூக ஊடகங்களுக்கு பொருந்தாது.

    * தகவல்தொடர்பு ஒழுக்க சட்டம் பிரிவு 230-ஐ நீக்குவதற்கு அல்லது மாற்றுவதற்கு நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார் உடனடியாக தொடங்குவார்.

    * ஒரு சமூக ஊடகத்தின் சேவை விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதைத்தவிர வேறு காரணங்களுக்காக ஒரு பதிவை நீக்குவது உள்ளிட்ட விலக்கு அதிகாரம் கூடாது.

    இவ்வாறு டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டபோது, சமூக ஊடகங்கள் தடுக்க முடியாத அதிகாரங்களை பெற்றிருப்பதாக சாடினார். அதே நேரத்தில் இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக அமெரிக்க கோர்ட்டுகளில் வழக்கு தொடர வாய்ப்பு உள்ளது.

    டிரம்பின் நிர்வாக உத்தரவு குறித்து டுவிட்டர் கருத்து தெரிவிக்கையில், “இது ஒரு முக்கிய சட்டத்துக்கு பிற்போக்குத்தனமான மற்றும் அரசியல்மயமாக்கப்பட்ட அணுகுமுறை” என சாடி உள்ளது.
    Next Story
    ×