search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் மல்லையா
    X
    விஜய் மல்லையா

    இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற உத்தரவில் பல குளறுபடிகள் - விஜய் மல்லையா வக்கீல் வாதம்

    இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவில் பல குளறுபடிகள் உள்ளதாக விஜய் மல்லையா வக்கீல் லண்டன் ஐகோர்ட்டில் வாதாடினார்.
    லண்டன்:

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன அதிபர் விஜய் மல்லையா மீது ரூ.9,000 கோடி வங்கி மோசடி செய்ததாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தன. இதைத்தொடர்ந்து விஜய் மல்லையா இங்கிலாந்து சென்று அங்கு வாழ்ந்து வருகிறார்.

    அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. லண்டன் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் விஜய் மல்லையா ஜாமீன் பெற்றதுடன், இந்த உத்தரவை எதிர்த்து லண்டன் ஐகோர்ட்டிலும் அவர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விசாரணை நேற்று ஐகோர்ட்டில் தொடங்கியது. இந்த வழக்கு விசாரணையின்போது விஜய் மல்லையா கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அப்போது விஜய் மல்லையாவின் வக்கீல், இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற மாஜிஸ்திரேட்டு கோர்ட்டின் உத்தரவில் பல குளறுபடிகள் உள்ளன. அந்த உத்தரவு முழுமையும் தவறானது என்று வாதாடினார்.

    விஜய் மல்லையா வங்கிகளில் தனது நிறுவனத்துக்காக கடன் வாங்கினார். அதனை திருப்பி செலுத்துவதற்கும் தயார் என்று வங்கி அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இந்தியாவில் ஆளும் பா.ஜனதாவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே உள்ள மோதலால் அரசியல் காரணங்களுக்காக அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. மும்பையில் அவருக்கு பாதுகாப்பான சிறை தயாராக இருப்பதாக இந்திய அரசு அளித்துள்ள உத்தரவாதத்தை ஏற்கமுடியாது என்று மல்லையாவின் வக்கீல்கள் வாதாடியதை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

    இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமை வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் தீர்ப்பு வழங்கப்படுமா என்பதை இப்போதே தெரிவிக்க முடியாது. அது வழக்கு விசாரணை எப்படி செல்கிறது என்பதை பொறுத்தது என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×