search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கர்ப்பிணி பெண் கேத் ராபின்சன் வில்லியம்ஸ்
    X
    காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கர்ப்பிணி பெண் கேத் ராபின்சன் வில்லியம்ஸ்

    ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கர்ப்பிணி

    ஆஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதையும் பொருட்படுத்தாமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. வனப்பகுதி மட்டும் இன்றி புதர் மண்டிய பகுதிகளிலும் பற்றி எரியும் தீ, வறண்ட வானிலை காரணமாக வேகமாக பரவி வருகிறது.இந்த காட்டுதீயில் இதுவரை 4 பேர் பலியாகி இருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசமாகிவிட்டன. இந்த காட்டுத்தீ ஏற்பட காரணமாக இருந்ததாக 16 வயது சிறுவன் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதையும் பொருட்படுத்தாமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.3½ மாத கர்ப்பிணியாக இருக்கும் கேத் ராபின்சன் வில்லியம்ஸ், கடந்த 11 ஆண்டுகளாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தன்னார்வ தீயணைப்பு வீராங்கனையாக செயல்பட்டு வருகிறார்.

    கர்ப்பமாக இருப்பதால் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடவேண்டாம் என அவரது நண்பர்கள் பலர் அறிவுறுத்தியபோதும் அவர் அதனை பொருட்படுத்தாமல் தனது சேவையை தொடர்ந்து வருகிறார்.தனக்கு அறிவுரை கூறிய நண்பர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக கேத் ராபின்சன் வில்லியம்ஸ், தான் தீயை அணைத்தபோது எடுத்த புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.அதில், ‘‘ஆம் நான் தீயணைப்பு வீரர். ஆம் நான் கருவுற்றிருக்கிறேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். இந்த பணியை நிறுத்த போவதில்லை. என் உடல் என்னை நிறுத்த சொன்னால் மட்டுமே நான் நிறுத்துவேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

    அவரது இந்த பதிவுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. பலரும் அவரை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
    Next Story
    ×