search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க நாட்டின் சான் யூசே நகரில் யாதும் ஊரே திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் பேசிய போது எடுத்த படம்.
    X
    அமெரிக்க நாட்டின் சான் யூசே நகரில் யாதும் ஊரே திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் பேசிய போது எடுத்த படம்.

    தமிழகத்தில் தொழில் தொடங்க அமெரிக்க நிறுவனங்கள் மேலும் ரூ.2,300 கோடி முதலீடு

    அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க மேலும் ரூ.2,300 கோடி முதலீடு செய்ய முன்வந்து உள்ளன. இதற்காக ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்ததானது.
    நியூயார்க்:

    தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    முதற்கட்டமாக கடந்த 28-ந் தேதி இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டன் நகரத்துக்கு சென்றார். அங்கு, தொழில் தொடர்பான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, 1-ந் தேதி அமெரிக்கா சென்றார். 3-ந் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அங்கு 16 நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம், தமிழ்நாட்டில் 2,780 கோடி ரூபாய் முதலீடும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க நாட்டின் சான் யூசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆக்கமும், ஊக்கமும் அளிக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த கூட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்கனவே தமிழ்நாட்டில் முதலீடு செய்து, வெற்றிகரமாக தொழில் நடத்தி வரும் அமெரிக்க நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள வசதிகள் பற்றியும், தங்களின் சிறப்பான அனுபவங்கள் பற்றியும் எடுத்துரைத்தனர்.

    தமிழ்நாட்டில் உள்ள சிறந்த உட்கட்டமைப்பு, திறன் மிக்க மனிதவளம், தடையில்லா மின்சாரம், தொழில் நடத்த உகந்த அமைதியான சூழல், விரைவான அரசு அனுமதிகள் ஆகியவற்றை விளக்கும் காட்சி தொகுப்பும் திரையிடப்பட்டது.

    முதல்-அமைச்சர் தனது உரையில், முதலீட்டிற்கு ஏற்ற சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்பதை வலியுறுத்தும் விதமாக, அ.தி.மு.க. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், முதலீட்டிற்கு அளித்து வரும் ஊக்க உதவிகள் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.

    மேலும், வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், நிதி சார்ந்த தொழில் நுட்ப முதலீடுகளுக்கும், வானூர்தி, விண்வெளி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் உகந்த மாநிலம் தமிழ்நாடு என்பதை வலியுறுத்தினார்.

    இக்கூட்டத்தைத் தொடர்ந்து, லிங்கான் எலக்ட்ரிக், வியரபுள் மெம்ஸ், கால்டன் பயோடெக், இசட்எல் டெக்னாலஜிஸ் உள்பட 15 தொழில் நிறுவனங்களும், 4 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் சுமார் 2,300 கோடி ரூபாய் அளவிற்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    இதன் மூலம் 6,500-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். ஏற்கனவே ரூ.2,780 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி உள்ள நிலையில் மேலும் ரூ.2,300 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி உள்ளதால் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடு ரூ.5,080 கோடி ஆனது.

    புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான பின்பு, ‘இது ஒரு தொடக்கம் தான். வரும் காலங்களில் இந்த முயற்சிகள் விரிவாக்கப்பட்டு குறிப்பிட்ட இலக்குகள் அனைத்தும் எட்டப்படும்’ என்று முதல்- அமைச்சர் உறுதியாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவோருக்கு தேவையான உதவிகள் செய்ய ‘டிஜிட்டல் ஆக்சிலரேட்டர்’ என்ற திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    அமெரிக்க தொழில் முனைவோர் என்ற அமைப்பின் உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற உள்ள தமிழ்நாட்டு தொழில் முனைவோருக்கு அவர்கள் தொடங்கும் புதுத்தொழிலுக்கு தேவையான நிதியில் 10 சதவீதத்தை தமிழக அரசு வழங்கும் எனவும், அதற்கென ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக ‘யாதும் ஊரே’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சான் யூசே நகரில் நடந்த இந்த கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் கலிபோர்னியா மாகாணம் மற்றும் மேற்கு அமெரிக்க பகுதிகளைச் சேர்ந்த தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டன. இதில், தமிழர்களை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சிக்கும், தமிழகத்துக்கு தொழில் முதலீட்டை பெற முயற்சிகள் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    சான் பிரான்சிஸ்கோவில், வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை பெறுவதற்கு ஏதுவாக ‘யாதும் ஊரே’ என்ற திட்டத்தினை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    உலகில் எந்த மூலையில் இருந்தாலும், உங்கள் உயிராய் தமிழ் இருப்பதையும், உள்ளத்தில் தமிழகம் இருக்கிறது என்பதையும் நான் அறிவேன்.

    உலகின் மாபெரும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், புத்தொழில்கள் என துறைகள் தோறும் சாதனைகள் செய்து பல நாடுகளில், புதிய தொழில் பலவற்றையும் தொடங்கி கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உழைப்பால் தமிழகம் உயர்ந்து விளங்குகிறது.

    தமிழகத்திலே சிறப்பான கல்வி இருக்கின்ற காரணத்திலேதான், அமெரிக்காவிலே பலர் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலும் நீங்கள் சாதிக்கக்கூடிய நிலையை நீங்கள் உருவாக்கித் தரவேண்டும் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

    அமெரிக்காவில் வாழ்கின்ற தமிழர்கள் இன்றைக்கு தொழில் துறையிலும், மருத்துவத் துறையிலும் சிறந்து விளங்குகின்றார்கள்,

    ஐ.டி. நிறுவனங்களில் மட்டும் பல லட்சம் பேர் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்களும், உங்களுடைய நண்பர்களும் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றேன். இந்த நாட்டிலே நீங்கள் இருந்தாலும், உங்கள் உள்ளம் எல்லாம் தமிழ்நாட்டில் தான் இருக்கும். எனவே, தாய் தமிழகத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×