search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் மீண்டும் பள்ளி வகுப்பறையில் துப்பாக்கியால் சுட்ட ஆசிரியர்
    X

    அமெரிக்காவில் மீண்டும் பள்ளி வகுப்பறையில் துப்பாக்கியால் சுட்ட ஆசிரியர்

    அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பள்ளி ஆசிரியரே துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

    அட்லாண்டா:

    அமெரிக்காவில் அடிக்கடி பள்ளிக்கூடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாக உள்ளது. 2 வாரத்துக்கு முன்பு புளோரிடாவில் உள்ள ஒரு பள்ளியில் முன்னாள் மாணவர் துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பள்ளி ஆசிரியரே துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

    அங்குள்ள அட்லாண்டா மாகாணத்தில் டால்டன் என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு 2 ஆயிரம் பேர் படித்து வருகிறார்கள். அந்த பள்ளியில் ஜெசிரெண்டால் டேவிட்சன் (வயது 53) என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    பள்ளி தொடங்கும் நேரத்தில் இவர் மட்டும் தனியாக ஒரு வகுப்பறையில் அமர்ந்திருந்தார். மாணவர்கள் அந்த வகுப்பறைக்கு வந்தபோது ஆசிரியர் கதவை பூட்டிக் கொண்டார். மாணவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

    இதுபற்றி அறிந்த பள்ளி முதல்வர் அங்கு வந்து கதவை திறக்க முயன்றார். அப்போது ஆசிரியர் ஜெசிரெண்டால் டேவிட்சன் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த மாணவர்களை உடனடியாக அப்புறப்படுத்தினார்கள்.

    போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர். ஆசிரியர் ஜெசிரெண்டால் டேவிட்சன் துப்பாக்கியுடன் இருந்ததால் எச்சரிக்கையுடன் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவரை வகுப்பறையை விட்டு வெளியே வரும்படி கூறினார்கள். ஆனால் ஆசிரியர் வெளியே வர மறுத்துவிட்டார். 40 நிமிட போராட்டத்துக்கு பிறகு அவர் வெளியே வந்தார். பின்னர் அவரை கைது செய்தனர்.

    அந்த ஆசிரியர் யாரையும் குறி பார்த்து துப்பாக்கியால் சுடவில்லை. எனவே மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் பயந்து ஓடியதில் சில மாணவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

    எதற்காக அவர் துப்பாக்கியால் சுட்டார் என்று தெரியவில்லை. மனஅழுத்தம் காரணமாக தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்யும் நோக்கத்தில் அவர் பள்ளிக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பள்ளியில் கால்பந்து அணி தேர்வு தொடர்பாக அவருக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் துப்பாக்கியால் சுட்டாரா? என்று தெரியவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் ஆசிரியர்களோ, மாணவர்களோ துப்பாக்கி எடுத்துவர அனுமதி கிடையாது. அதை மீறி ஆசிரியர் துப்பாக்கி எடுத்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×