search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ராக்கெட் மனிதருடன் பேசி நேரத்தை வீணாக்காதீர்கள் - ரெக்ஸ் டில்லர்சனுக்கு டிரம்ப் அறிவுரை
    X

    ராக்கெட் மனிதருடன் பேசி நேரத்தை வீணாக்காதீர்கள் - ரெக்ஸ் டில்லர்சனுக்கு டிரம்ப் அறிவுரை

    வடகொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி ரெக்ஸ் டில்லர்சன் நேரத்தை வீணாக்குகிறார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
    வாஷிங்டன்:

    உலக நாடுகளின் கடும் கண்டனங்களையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இது அமெரிக்க அரசை எரிச்சலடைய செய்துள்ளது. இதன்காரணமாக வடகொரியா மீது அமெரிக்க அரசு பல தடைகளை விதித்துள்ளது.

    இந்த தடைகளுக்கு அமெரிக்கா, ஜப்பான், சீனா உட்பட பல நாடுகள் அதரவளித்துள்ளதால் வடகொரியாவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மற்ற பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தடைகளை பொருட்படுத்தாமல் வடகொரியா செயல்பட்டு வருகிறது. மேலும் அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிகாரிகள் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவிவருகிறது.

    இந்நிலையில், கொரிய தீபகற்பத்தில் நிலவிவரும் பரபரப்பான சூழ்நிலை குறித்து வடகொரிய அதிபருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "நான் சின்ன ராக்கெட் மனிதருடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்று எங்களுடைய அற்புதமான செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனிடம் கூறினேன்", என அதில் கூறியுள்ளார்.

    மற்றொரு டுவிட்டர் பதிவில், "உங்கள் ஆற்றலை காப்பாற்றுங்கள் ரெக்ஸ், என்ன செய்ய வேண்டுமோ அதை நாம் செய்வோம்!", என  அறிவுரை கூறியுள்ளார்.
    Next Story
    ×