search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையில் புத்த பூர்ணிமா விழா: பிரதமர் மோடி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்
    X

    இலங்கையில் புத்த பூர்ணிமா விழா: பிரதமர் மோடி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

    புத்தர் பிறந்தநாளையொட்டி இலங்கையில் நடைபெறும் சர்வதேச புத்தமத மாநாட்டை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். தமிழர்கள் அதிகமாக வாழும் மத்திய மாகாணத்துக்கு செல்லும் அவர் அங்கு ரூ.150 கோடி மதிப்பிலான புதிய மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
    கொழும்பு:

    உலகம் முழுவதிலும் வாழ்ந்து வரும் புத்த மதத்தினர், கவுதம புத்தர் பிறந்தநாளை ‘வேசக்’ என்ற புனிதநாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். புத்தர் பிறந்தநாளாகவும், ஞானம் பெற்று முக்திப்பேற்றினை எய்திய தினமாகவும், புத்த மதத்தினரின் புத்தாண்டாகவும் ‘வேசக்’ தினம் கருதப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த தினம் புத்த பூர்ணிமா என்றழைக்கப்படுகிறது.

    அவ்வகையில், இந்த ஆண்டின் வேசக் தினத்தையொட்டி 12-ம் தேதியில் இருந்து (இன்று) 14-ம் தேதிவரை புத்தமதம் தொடர்பான மாபெரும் சர்வதேச மாநாடு ஒன்றை புத்த மதத்தினர் அதிகமாக வாழும் இலங்கையில் நடத்த ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்தது.


    புத்த மதத்தவர்கள் பரவலாக வாழ்ந்துவரும் நூற்றுக்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த சுமார் 400 முக்கிய விருந்தினர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டை தலைமையேற்று தொடங்கி வைப்பதற்காக நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்தார். கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவரை அன்புடன் வரவேற்றார்.

    இன்று காலை குத்துவிளக்கேற்றி வேசக் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நூற்றுக்கணக்கான புத்த பிக்சுகள் நடத்திய சிறப்பு பிரார்த்தனையின்போது, கை கூப்பியவாறு கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்த பிரதமர் மோடி, புத்தர் தோன்றிய மண்ணில் வாழும் 125 கோடி இந்திய மக்களின் சார்பாக இந்த மாநாடு சிறக்க நல்வாழ்த்துகளை நான் ஏந்தி வந்துள்ளேன் என்று குறிப்பிட்டார்.

    புத்தபிரானும் அவரது விலைமதிப்பு மிக்க போதனைகளும் உருவான இடம் என்பதால் எங்களது பூமி ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. வெறுப்புணர்வு மற்றும் வன்முறை போன்றவை உலக அமைதிக்கு பெரும் சவாலாக விளங்கி வருகிறது.


    வரும் ஆகஸ்ட் மாதம் முதல் கொழும்புவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி நகருக்கு நேரடி விமானச் சேவை தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
     
    தமிழர்கள் அதிகமாக வாழும் மத்திய மாகாணத்துக்கு இன்று பிற்பகல் செல்லும் மோடி, இந்தியாவின் நிதி உதவியுடன் சுமார் 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

    இங்குள்ள தமிழக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றும் வகையில் மாபெரும் பொதுகூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரும் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


    கண்டியில் உள்ள ஆலயத்தில் வழிபாடு செய்யும் மோடி, இன்றிரவு டெல்லி திரும்புகிறார். அவரது வருகையையொட்டி தலைநகர் கொழும்பு, கண்டி மற்றும் மத்திய மாகாணத்துக்குட்பட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×