என் மலர்
உலகம்
- காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பட்டினியால் இறந்துள்ளனர்.
- நேற்று காசா முழுவதும் நடந்த தாக்குதல்களில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் நேதன்யாகு அரசு நடத்தி வரும் இனப்படுகொலையை எதிர்த்து தலைநகர் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது "எங்கள் ஆன்மாவையும் இரத்தத்தையும் கொண்டு காசாவை காப்பாற்றுவோம்" என்று அவர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
சட்டவிரோதமான மற்றும் தூண்டும் வகையில் கருத்துக்களை தெரிவித்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேலிய போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பட்டினியால் இறந்துள்ளனர். இதனால் ஒரு சில வாரங்களில் உணவு பற்றாக்குறையால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 115 பேர் குழந்தைகள்.
ஐ.நா உட்பட பிற உணவு விநியோக முறைகளை முற்றிலுமாக துண்டித்து, அதன் சொந்த நான்கு மையங்களைத் இஸ்ரேல் திறந்தது. இந்த மையத்தை நோக்கி உணவுக்காக வந்த 2,076 பேரை இராணுவம் இதுவரை சுட்டுக் கொன்றுள்ளது.
நேற்று காசா முழுவதும் நடந்த தாக்குதல்களில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் உணவுக்காக காத்திருந்த 22 பேர் அடங்குவர்.
- உக்ரைனின் 34வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
- ஏற்கனவே தெற்கு ரஷியாவில் எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் உக்ரைன் டிரோன் தாக்குதலில் கடந்த 3 நாட்களாக தீபற்றி எரிகிறது.
3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் முயற்சிகள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.
இதற்கிடையே இன்று உக்ரைனின் 34வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ரஷிய அணு மின் நிலையம் மீது தாக்குதல் நடந்துள்ளது.
ரஷியாவின் குர்ஷ்க் பகுதியில் உள்ள அணு மின் நிலையம் மீது இன்று உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் அணு மின் நிலையத்தின் ஒரு பகுதி எரிந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர்.
இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என ரஷியா தெரிவித்துள்ளது. ஏற்கனவே தெற்கு ரஷியாவில் எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் உக்ரைன் டிரோன் தாக்குதலில் கடந்த 3 நாட்களாக தீபற்றி எரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இது தெற்கு ரஷியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும்.
- இந்த சுத்திகரிப்பு நிலையம் முக்கியமாக எண்ணெய் ஏற்றுமதிக்காகவே செயல்படுகிறது.
ரஷியாவின் ரோஸ்டோவ் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 3 நாட்களாக தீப்பிடித்து எரிந்து வருகிறது.
நோவோஷாக்தின்ஸ்க் நகரில் அமைந்துள்ள இந்த சுத்திகரிப்பு நிலையம் உக்ரைனால் டிரோன் மூலம் தாக்கப்பட்டது. இது தெற்கு ரஷியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும். தீ விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
ரோஸ்டோவ் மாகாணத்தின் பொறுப்பு ஆளுநர் யூரி ஸ்லியுசர், சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
இந்த சுத்திகரிப்பு நிலையம் முக்கியமாக எண்ணெய் ஏற்றுமதிக்காகவே செயல்படுகிறது.
ரஷியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து நோவோகுய்பிஷெவ்ஸ்க், சிஸ்ரான், ரியாசான் மற்றும் வோல்கோகிராட் உள்ளிட்ட பல ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.
- ஜூன் மாதம் அமெரிக்க பாதுகாப்பு உளவு அமைப்பின் அறிக்கை கசிந்தது.
- பணி நீக்கம் தொடர்பாக பாதுகாப்பு துறை விளக்கம் அளிக்கவில்லை.
அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனின் உளவுப்பிரிவு தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஜெப்ரி க்ரூஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 2 மூத்த ராணுவ அதிகாரிகளும் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் பீட் ஹெக்செத் பிறப்பித்து உள்ளார். இந்த பணி நீக்கம் தொடர்பாக பாதுகாப்பு துறை விளக்கம் அளிக்கவில்லை.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை என்று கடந்த ஜூன் மாதம் கசிந்த அமெரிக்க பாதுகாப்பு உளவு அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த மதிப்பீடு முற்றிலும் தவறானது என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. இந்நிலையில்தான் பென்டகனின் உளவுப்பிரிவு தலைவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் 2 புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளின் எச்சரிக்கையை மீறி இந்த சோதனைகளை நடத்துகிறது.
வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளின் எச்சரிக்கையை மீறி இந்த சோதனைகளை நடத்துகிறது.
இந்த நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் 2 புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆயுதங்களுக்கு சிறந்த போர் திறனும், தனித்துவமான தொழில்நுட்பமும் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த இரு வகையான ஆயுதங்களின் தொழில்நுட்ப அம்சங்கள், டிரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் உள்ளிட்ட வெவ்வேறு வான் இலக்குகளை அழிப்பதற்கு மிகவும் உகந்தவை என்றும் தெரிவித்துள்ளது.
- தனியாருக்குச் சொந்தமான சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசமாகின.
- பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.
நைரோபி:
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள வோல்டைகா வனப்பகுதி இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள ரிப்ட் பள்ளத்தாக்கில் கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து ராணுவ பயிற்சியை நடத்தியது. அப்போது ஏற்பட்ட தீ மளமளவென அருகில் உள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசமாகின. மேலும் பலருக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ரூ.25 கோடி இழப்பீடு வழங்க இங்கிலாந்து அரசாங்கம் ஒப்புக்கொண்டு உள்ளது.
- சீனாவில் கட்டுமான பணியின்போது ரெயில்வே பாலம் இடிந்து விழுந்தது.
- இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.
பீஜிங்:
சீனாவின் குயிங்காய் மாகாணத்தில் மஞ்சள் ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் மீது மிகப்பெரிய ரெயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது.
2 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த பாலம் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்தப் பாலம் இடிந்து விழுந்தது.
இதனால் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர். இதுகுறித்து மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த ஆற்றில் இருந்து 12 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் 4 பேர் ஆற்றில் விழுந்து மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஹெலிகாப்டர், படகு மூலம் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டுமான பணியின்போதே பாலம் இடிந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரஷிய அதிகாரிகள் தங்கள் 3 ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப 2.5 கோடியை ரொக்கமாக கொடுத்தனர்.
- அலாஸ்காவை சேர்ந்த மார்க் வாரன் என்ற நபருக்கு ரஷிய அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் ஒன்றை பரிசளித்திருந்ததும் வைரலானது.
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரஷிய அதிபர் புதின் அமெரிக்கா சென்றார்.
அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முக்கிய முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் ரஷிய அதிபர் அமெரிக்காவுக்கு சென்றது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் வங்கிக்கணக்கை பயன்படுத்த முடியாமல், ரஷிய அதிகாரிகள் தங்கள் 3 ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப 2.5 கோடியை ரொக்கமாக கொடுத்தனர்.
அதேபோல் அலாஸ்காவை சேர்ந்த மார்க் வாரன் என்ற நபருக்கு ரஷிய அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் ஒன்றை பரிசளித்திருந்ததும் வைரலானது.
இதற்கிடையே ரஷிய அதிபர் புதின் அமெரிக்கா சென்றபோது அவருடன் சென்ற அதிகாரிகள் அவரின் மலம் அடங்கிய சூட்கேசை உடன் கொண்டு சென்றது வைரலாகி வருகிறது.
வெளிநாட்டு பயணங்களில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளிநாடு செல்லும்போது, அவர் உடன் "Poop Suitcase" எனப்படும் சிறப்பு பெட்டி கொண்டு செல்லப்படுகிறது.
இதன் மூலம், 72 வயதான புதினின் மலம் மற்றும் சிறுநீர் கழிவுகளை மற்ற நாடுகள் ஆய்வு செய்து உடல்நிலை, நோய் அல்லது உடல் பலவீனங்களை கண்டுபிடிப்பதைத் தவிர்ப்பதற்காகவே இந்த நடைமுறையை பின்பற்றுகின்றனர் என்று கூறப்படுகிறது.
- இஸ்ரேலிய கடற்படைக் கப்பல்களுக்கான பொருட்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யவும் காஸ்பர் முன்மொழிந்தார்.
- காசாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொண்டுள்ளனர்.
காசாவை ஆக்கிரமித்ததற்காக இஸ்ரேலுக்கு எதிராக தடைகளை விதித்து நடவடிக்கை எடுக்க முடியாததால் நெதர்லாந்து நாட்டு வெளியுறவு அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பெசல் ஸ்மோட்ரிச் மற்றும் இடாமர் பென்-கிர் போன்ற தீவிர வலதுசாரிக் கொள்கைகளைப் பின்பற்றும் இஸ்ரேலிய அமைச்சர்கள் டச்சு நாட்டுக்குள் நுழைவதையும், இஸ்ரேலிய கடற்படைக் கப்பல்களுக்கான பொருட்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யவும் காஸ்பர் முன்மொழிந்தார்.
இருப்பினும், அமைச்சரவையில் எதிர்ப்பு காரணமாக இது நடக்கவில்லை. இதனால் காஸ்பர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
வெளியுறவு அமைச்சர் ராஜினாமாவைத் தொடர்ந்து, சமூக ஒப்பந்த அமைச்சர் மற்றும் அரசு செயலாளர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) காசாவில் பஞ்சம் நிலவுவதாக அறிவித்தது. காசாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொண்டுள்ளதாகக் அதன் அறிக்கை கூறியது.
- மத்திய கிழக்கு வரலாற்றில் ஒரு பகுதியில் பஞ்சம் அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
- பசியை போர் ஆயுதமாகப் பயன்படுத்துவது ஒரு போர்க்குற்றம் என்று ஐ.நா மனித உரிமைகள் அதிகாரி வோல்கர் டர்க் கூறினார்.
காசாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட கொடும் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன் அறிக்கையின்படி, காசாவில் அரை மில்லியனுக்கும் (5 லட்சத்துக்கும்) அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொள்கின்றனர்
காசா நகரம் உட்பட பாலஸ்தீனத்தின் சுமார் 20 சதவீத பகுதியில் பஞ்ச நிலைமை இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
உடனடி போர்நிறுத்தம் செயல்படுத்தப்பட்டு, மனிதாபிமான உதவி கிடைக்காவிட்டால், கான் யூனிஸ் மற்றும் டெய்ர் அல்-பாலா போன்ற தெற்குப் பகுதிகளுக்கு பஞ்சம் பரவக்கூடும்.
பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியின் விளிம்பில் உள்ளனர். காசாவில் பசி பட்டினி முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்டது. பசி பட்டினி அங்கு வேகமாக பரவி வருகிறது.
உதவி கிடைப்பதில் ஒரு நாள் தாமதம் கூட பட்டினி மரணங்களை அதிகரிக்கச் செய்கிறது. தடுக்கக்கூடிய இறப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்று அறிக்கை எச்சரிக்கிறது.

மத்திய கிழக்கு வரலாற்றில் ஒரு பகுதியில் பஞ்சம் அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
ஜெனீவாவில் நடந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா. உதவி பொதுச்செயலாளர் டாம் பிளெட்சர், "இது முற்றிலும் தடுக்கக்கூடிய பஞ்சம்.எல்லைகளில் உணவு விநியோகத்தை நிறுத்தும் தடைகளை இஸ்ரேல் திட்டமிட்டு உருவாக்குகிறது. இது நம் அனைவரையும் வேட்டையாடும் பஞ்சம்" என்று கூறினார்.
"காசாவின் பஞ்சம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்றும் இது மனிதகுலத்தின் தோல்வி" என்றும் ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்ரஸ் தெரிவித்தார். .
பசியை போர் ஆயுதமாகப் பயன்படுத்துவது ஒரு போர்க்குற்றம் என்று ஐ.நா மனித உரிமைகள் அதிகாரி வோல்கர் டர்க் கூறினார்.
மறுபுறம், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் ஐ.நா அறிக்கையை கடுமையாகக் கண்டித்தது. "காசாவில் பஞ்சம் இல்லை. இந்த அறிக்கை ஹமாஸால் கூறப்பட்ட பொய்களை அடிப்படையாகக் கொண்டது" என்று அது குற்றம் சாட்டியது.
பஞ்சம் எப்படி தீர்மானிக்கப்படுகிறது?
ஒரு பகுதியில் பஞ்சத்தை அறிவிக்க, ஐ.பி.சி சில கடுமையான அளவுகோல்களைப் பின்பற்றுகிறது. இந்த அளவுகோல்களில் முக்கியமானது, மக்கள்தொகையில் குறைந்தது 20 சதவீத வீடுகளாவது கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வது, 30 சதவீத குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவது, ஒவ்வொரு 10,000 பேரில் இரண்டு பெரியவர்கள் அல்லது நான்கு குழந்தைகள் பசியால் உயிரிழப்பது ஆகும். காசாவில் இந்த நிலைமைகள் இருப்பதாக IPC தீர்மானித்துள்ளது.
காசாவில் கடந்த ஓரிரு மாதங்களில் பட்டினியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
- ரணில் விக்ரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
- உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச் சாலை மருத்துவமனையில் அவர் அனுமதி.
இலங்கையில் கடந்த 2022 ஜூலை முதல் 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை அதிபராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்கே (வயது 76). மேலும் 6 முறை பிரதமர் பதவி வகித்துள்ளார்.
அவர் அதிபராக இருந்தபோது தனது மனைவி மைத்ரிக்கு இங்கிலாந்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அரசு பணத்தில் பயணம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று ரணில் விக்ரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை கைவிலங்கிட்டு போலீசார் அழைத்துச் சென்றனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவை வருகிற 26-ந்தேதி வரை போலீஸ் காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் வெலிக்கடை சிறைச் சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ரணில் விக்ரமசிங்கேவுக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச் சாலை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதை சிறைத்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- இன்டெலின் மிகப்பெரிய பங்குதாரராக அமெரிக்க அரசு மாறியுள்ளது.
- இன்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவின் பொருளாதரத்தை உயர்த்துவதாக கூறி மற்ற நாடுகள் மீது வரி விதிப்பு நடவடிக்கையில் அதிபர் டிரம்ப் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதற்கு பல நாடுகளிடம் இருந்து கண்டனங்களும் எழுந்தன.
இந்த நிலையில், உலகின் முன்னணி சிப் உற்பத்தியாளரான இன்டெல், அமெரிக்க அரசாங்கத்திற்கு அதன் வணிகத்தில் 10 சதவீத பங்குகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த நிறுவனமும், அதிபர் டிரம்பும் தெரிவித்துள்ளனர்.
ஜோ பைடன் அதிபராக இருந்தபோது வழங்கப்பட்ட பெரிய மானியங்களுக்கு ஈடாக இன்டெல் நிறுவனம் வாஷிங்டனுக்கு ஒரு பங்கு பங்கை வழங்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் கூறியதை அடுத்து இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க அரசாங்கம் 433.3 மில்லியன் பொதுவான பங்குகளைப் பெறும். இது இன்டெல் நிறுவனத்தில் 9.9 சதவீத பங்குகள் ஆகும். இது குறித்து இன்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.
இதன்மூலம் இன்டெலின் மிகப்பெரிய பங்குதாரராக அமெரிக்க அரசு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.






